தலத்தெரு சிவலோகநாதர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி :
தலத்தெரு சிவலோகநாதர் சிவன்கோயில்,
தலத்தெரு, கோட்டுச்சேரி கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம்
இறைவன்:
சிவலோகநாதர்
இறைவி:
சிவகாமி அம்பாள்
அறிமுகம்:
காரைக்கால் பேருந்து நிலையத்தின் வடக்கில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது இந்த தலத்தெரு சிவன்கோயில். காரைக்காலின் பிரதான சாலையின் இருமருங்கிலும் சிவத்தலங்கள் தான் அதனால் இந்த தெருவே சிவத்தலதெரு தான்.
கிழக்கு நோக்கிய கோயில், மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது, அதனை கடந்தவுடன் பெரிய வளாகம் அதில் கிழக்கு நோக்கிய கருவறை கொண்ட சிவலோகநாதர்; கருவறை முன்னர் பெரிய மகாமண்டபம், அதில் தெற்கு நோக்கிய கருவறை கொண்ட சிவகாமி. இறைவன் முன்னர் நந்தி மண்டபம் ஒன்றும் உயர்ந்த கொடிமரம் ஒன்றும் உள்ளன. கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், பிரம்மன், துர்க்கை உள்ளனர். விநாயகர் முருகன், மகாலட்சுமிக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. இதில் முருகனின் சிற்றாலயம் மட்டும், சற்று பெரிதாக முகப்பு மண்டபம் கொண்டுள்ளது.
வடகிழக்கில் தீர்த்த கிணறு ஒன்றும், நீண்ட மண்டபத்தில் நவக்கிரகம், பைரவர், சனி, சூரியனும் உள்ளனர். அருகில் அலுவலக அறை ஒன்றும் உள்ளது. கோபுரத்தின் முன்னம் திருநாவுக்கரசர் நந்தவனம் உள்ளது, அதில் பெரிய அரசமரம் ஒன்றும் அதனடியில் சில நாகர்களும் உள்ளனர், அதுமட்டுமல்லாமல் நாகராஜவிநாயகர் சிறிய சன்னதியில் உள்ளார் நாகம் ஒன்று குடைபிடிப்பது போன்றதொரு மூர்த்தி இத்தலத்திலுள்ளது.
புராண முக்கியத்துவம் :
திருதெளிச்சேரி எனும் தலத்தெரு என்று கோயில் சுவற்றில் எழுதி வைத்துள்ளனர். வாங்க, திருதெளிச்சேரி பெயர் வந்த கதையை சொல்கிறேன். முற்காலத்தில் மழை இல்லாமல் உணவுப் பயிர்கள் விளைச்சலின்றி பஞ்சம் ஏற்பட்டபோது ஊர் மக்கள் திரண்டு வந்து இந்தக் கோயிலில் உள்ள இறைவனிடம் முறையிட்டதாகவும், மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக பஞ்சத்தைப் போக்கும் வகையில் சிவபெருமானே விவசாயியாக இவ்வூருக்கு வந்து விதைகளைத் தெளித்து வேளாண்மை செய்ததாக ஐதீகம். அதனால் தெளிச்சேரி என பெயர் வந்தது. இந்த வரலாற்று நிகழ்ச்சியை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் ஆடிமாதம் காரைக்கால் தலத்தெருவில் உள்ள சிவலோகநாத சாமி கோவிலில் விதைத்தெளி என்ற உற்சவம் நடைபெற்று வருகிறது. இதில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு, மகா தீபாராதனை தொடர்ந்து சாமி, அம்பாள் உற்சவ சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்படும்.













காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தலத்தெரு
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி