சித்தஞ்சி ஶ்ரீ சங்கரேஸ்வரர் திருக்கோயில், வேலூர்

முகவரி :
சித்தஞ்சி ஶ்ரீ சங்கரேஸ்வரர் திருக்கோயில்,
சித்தஞ்சி,
வேலூர் மாவட்டம் – 632531
இறைவன்:
ஶ்ரீ சங்கரேஸ்வரர்
இறைவி:
ஶ்ரீயோகாம்பாள் – ஶ்ரீபோகாம்பாள்
அறிமுகம்:
ஓச்சேரி – சித்தஞ்சி கிராமத்தில் உள்ள ஶ்ரீயோகாம்பாள் – ஶ்ரீபோகாம்பாள் உடனுறை ஶ்ரீசங்கரேஸ்வரர் ஆலயம். பல்லவர்கள், சோழர்கள், கங்கர்கள், சம்புவரையர்கள், விஜயநகரப் பேரரசர்களும் கொண்டாடியக் கோயில், இன்று ஊருக்குள் ஒடுங்கி ஆள் நடமாட்டமின்றி இருந்தது. சிறிய அழகான கோயில். எதிரே நந்தி மண்டபத்துடன் சுவாமி, அருகில் அம்பாள் சந்நிதிகள், சுற்று பிராகாரத்தில் நவகிரக சந்நிதி. கணபதியும் முருகப்பெருமானும் ஈசனின் சந்நிதிக்கு முன்னால் இடமும் வலமுமாக வீற்றிருக்கிறார்கள். சென்னை – பெங்களூரு சாலையில், ஓச்சேரிக்கு முன்பாக சித்தஞ்சி கிராமம் உள்ளது. இடது புறமாக கிராமத்தில் சென்று ஆலயத்தை தரிசிக்கலாம்.
புராண முக்கியத்துவம் :
மூன்றாம் நந்திவர்மன் ஆட்சி காலத்தில் (கி.பி.825-850) கட்டப்பட்டக் கோயில் இது என்றும், விஜயாலயச் சோழனின் மகன் ஆதித்த சோழன் சோழ அரசனாக கி.பி. 871 முதல் 907-ம் ஆண்டு வரை ஆண்டபோது தொண்டை மண்டலத்தில் பல சிவாலயங்களைக் கட்டுவித்தான், அதில் இந்த கோயிலும் ஒன்று என்றும் கூறுகிறார்கள்.
ஈசன் மேற்கு நோக்கிய அபூர்வ ஆலயம் இது. ஆயிரம் கிழக்கு நோக்கு நோக்கிய ஆலயங்களுக்கு இணையானது ஒரு மேற்கு நோக்கிய ஆலயம் என்பார்கள். ராவணன் நாள்தோறும் ஒரு மேற்கு நோக்கிய ஆலயத்தை தரிசனம் செய்துவிட்டே உணவு எடுத்துக் கொள்வான் என்றும் அதற்காகவே புஷ்பக விமானத்தை வடிவமைத்தான் என்றும் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் தேவப் பிரசனம் பார்க்கையில் இங்குள்ள சங்கரேஸ்வரரை 999 ருத்ரர்கள் வழிபட்டார்கள் என்றும் இன்றும் அரூபமாக அவர்கள் வழிபாடு செய்வதாகவும் சொல்லப்படுகிறது.
மிக அரிதாக இங்கு இரண்டு அம்பாள்கள் யோக-போக சக்திகளாக எழுந்தருளி இருக்கிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னாலே இந்த ஆலயம் அழிந்து போக, இங்கிருந்த கலைச் செல்வங்களும் கல்வெட்டுகளும் காணாமல் போயின. பிறகு சிறிய அளவில் விஜயநகர காலத்தில் ஆலயம் எழும்பியது. அதுவும் சிதைந்து போக, தற்போதைய ஆலயம் 150 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டது என்கிறார்கள் ஊர் பெரியவர்கள். ஆலயத்தின் சாந்நித்யமும் அமைதியும் நம்மை வியக்க வைத்தது. எந்தவித வரலாற்று ஆவணங்களும் இல்லை என்றாலும் கோயில் பல நூற்றாண்டுகளைக் கடந்தது என்பதை லிங்கமூர்த்தமே சொல்கிறது. அது பல்லவர் காலத்துத் திருமேனி என்றே தெரிகிறது.
நம்பிக்கைகள்:
நோய் தீர்க்கும் மருத்துவனாக சுவாமியும், திருமண வரம் அருளும் நாயகியாக போகசக்தியும், மனஅமைதி; நிம்மதி அருளும் தேவியாக யோகசக்தியும் விளங்குகிறார்கள். எந்த வியாதி ஆனாலும் இங்கு வந்து வேண்டிக்கொள்ள நிச்சயம் தீரும் என்கிறார்கள்.



காலம்
கி.பி.825-850 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சித்தஞ்சி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை