குத்தாலம் ஆபத்சகாயேசுவரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
குத்தாலம் ஆபத்சகாயேசுவரர் சிவன் கோயில்,
குத்தாலம், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609703
இறைவன்:
ஆபத்சகாயேசுவரர்
இறைவி:
கிரிகுஜாம்பாள்
அறிமுகம்:
குத்தாலம் நாகூர் வடக்கில் மூன்று கிமீ தூரத்தில் உள்ள நரிமணம் கச்சாஎண்ணை சுத்தகரிப்பு நிலையம் அருகில் உள்ளது. ஊரின் பெரும்பகுதியை இந்த நிலையம் ஆக்கிரமித்துவிட்டது. இந்த குத்தாலத்திலும் பழம் பெருமை கொண்ட சோழர் கால சிவன் கோயில் ஒன்றுள்ளது. ராஜராஜசோழர் காலத்தில் இவ்வூர் நந்திகேஸ்வரநல்லூர் என வழங்கப்பட்டது, நரிமணம் கோயிலுக்குக்காக இவ்வூரில் உள்ள சில நிலங்கள் அமுதுபடி பூஜைக்கு தானமாக அளிக்கப்பட்டு இருந்தது. பிறாவுடை ஆறு இக்கோயிலை வலமாக சுழித்து பின் உத்தரவாகினியாக வடக்கு நோக்கி செல்கிறது. இதுபோன்ற உத்தரவாகினி கரைத்தலங்களில் உள்ள சிவாலயங்களை தரிசனம் செய்தல் நல்ல பலன்களை தரும்.
இறைவன் பெயர்-ஆபத்சகாயேசுவரர் இறைவி-கிரிகுஜாம்பாள் கிரி என்றால் மலை, குஜம் என்பது தாய்மை பெற்ற பெண்ணின் தனத்தை குறிக்கும். தமிழில் இதனை குன்றமாமுலையம்மன் என அழைப்பர். ஆபத்து வரும் போதும், ஆற்றாமை ஏற்படும் சமயத்திலும் ஆண்டவனிடம் அடைக்கலம் புகுவது உலக உயிர்களின் இயல்பு. அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அருள் தந்து அடைக்கலம் காப்பவர் ஆபத்சகாயேஸ்வரர்
சிறப்பு அம்சங்கள்:
கிழக்கு நோக்கிய சிவன்கோயில், உயர்ந்த மதில்சுவர் கொண்டுள்ளது நுழைவாயில் சுதை அலங்காரங்களுடன் உள்ளது. சமீபத்தில் தான் குடமுழுக்கு கண்டிருக்க வேண்டும். இறைவன் கருவறை சோழர்கால கற்றளியாக உள்ளது, அதன் முன்னர் ஒரு அர்த்த மண்டபம் மகாமண்டபம் உள்ளது. மகாமண்டப இணைப்பில் அம்பிகையின் கருவறை தெற்கு நோக்கி உள்ளது. இறைவனின் அர்த்தமண்டப வாயிலை ஒட்டி விநாயகர் சன்னதியும் வள்ளி/தெய்வானை சமேத முருகன் சன்னதியும் உள்ளது. இறைவன் நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தியாக உள்ளார் அம்பிகையும் அவ்வாறே உள்ளார். இந்த மண்டபத்தின் வெளியில் தனி மண்டபத்தில் நந்தி உள்ளார்.
கருவறை கோட்டத்தில் விநாயகர் இரு புறங்களிலும் பூத கணங்களுடன் உள்ளார், அடுத்து தென்முகன் கோட்டம் மேற்கில் இருபுறமும் தேவர்களுடன் திருமால் உள்ளார். வடக்கில் பிரம்மனும் துர்க்கையும் உள்ளனர். சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார். பிரகார சிற்றாலயங்கள் ஏதுமில்லை. வடகிழக்கில் உள்ள மண்டபத்தில் சூரியன் பைரவர் உள்ளனர். தென்கிழக்கில் மடைப்பள்ளி உள்ளது.












காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி