குடியாத்தம் கங்கையம்மன் திருக்கோயில், வேலுார்

முகவரி :
அருள்மிகு கங்கையம்மன் திருக்கோயில்,
குடியாத்தம், வேலுார் மாவட்டம் – 632602.
தொடர்புக்கு: 98410 14700
இறைவி:
கங்கையம்மன்
அறிமுகம்:
வேலுார் மாவட்டம் குடியாத்தத்தில் கவுண்டன்ய நதிக்கரையில் அருள்பாலிக்கிறாள் கங்கையம்மன். இங்கு நடக்கும் வைகாசி திருவிழாவில் கலந்து கொண்டால் நினைத்தது நிறைவேறும்.
வேலுாரில் இருந்து பள்ளிக்கொண்டா வழியாக 20 கி.மீ. சென்றால் இக்கோவிலை அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
ஜமதக்னி என்னும் முனிவரின் மனைவி ரேணுகாதேவி. தினமும் நதிக்கரைக்கு சென்று மணலில் குடம் செய்து தண்ணீர் எடுத்து வருவாள். எதற்காக என்றால்… தன் கணவரின் பூஜைக்காக. இப்படி ஒருநாள் தண்ணீர் எடுக்கும்போது எதிர்பாராத விதமாக வானில் சென்ற கந்தர்வனின் அழகில் தன் மனதை பறிகொடுத்தாள்.
கற்பை இழந்ததால் அவளால் குடத்தை செய்ய முடியவில்லை. ஞானதிருஷ்டியால் இதையறிந்த முனிவர் ஜமதக்னி, தன் நான்கு மகன்களிடம் தாயின் தலையை வெட்டும்படி கட்டளையிட்டார். மூன்று மகன்களும் மறுக்கவே, அவர்களை கல்லாக மாறும்படி சாபம் கொடுத்தார். கடைசி மகனான பரசுராமரோ, தன் தந்தையிடம் ‘இரண்டு வரங்கள் எனக்கு தாருங்கள். நீங்கள் சொல்வதை செய்வேன்’ என்றார்.
முனிவரும் சம்மதிக்க பரசுராமர் தன் தாயைக் கொல்ல ஓடினார். அவளோ அருகில் இருந்த சலவைத் தொழிலாளியின் வீட்டினுள் புகுந்தாள். அந்த தொழிலாளியின் மனைவி தடுத்ததால் அவர்கள் இருவரையும் வெட்டினார். சொன்ன சொல்லை காப்பாற்றிய மகனிடம், ‘வரங்களை கேள். தருகிறேன்’ என்றார் முனிவர். அதன்படி கல்லாக மாறிய சகோதரர்களை பழைய நிலைக்கும், தாய்க்கு உயிரையும் பெற்றுத்தந்தார் பரசுராமர்.
இதன் நினைவாக இக்கோயிலில் வைகாசியில் சிரசு ஊர்வலம் நடக்கிறது. பத்து நாள் நடக்கும் விழாவில் இரண்டாம் நாளன்று, அம்மனின் தலையை எடுத்துச் செல்லும் சிரசு ஊர்வலம் நடக்கிறது. அம்மனின் சிரசு கோயிலுக்கு கொண்டு வந்ததும் ஏற்கனவே அமைக்கப்பட்ட உடலுடன் பொருத்தப்படுகிறது.
நம்பிக்கைகள்:
சுமங்கலிகளுக்கு மஞ்சள், குங்குமம், கண்ணாடி வளையல்களை சீதனமாக வாங்கிக் கொடுப்பது இங்கு வழக்கம். அதைப்போல் தங்கள் கைகளில் தேங்காயை பிடித்து அம்மன் முன்பு வேண்டுதல் வைக்கின்றனர். பின் அத்தேங்காயை கையால் உருட்டியபடி மூன்று முறை பிரகாரத்தை சுற்றி வந்து, சிதறு தேங்காயாக உடைக்கின்றனர்.



காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குடியாத்தம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
குடியாத்தம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை