ஓ.சிறுவயல் பொன்னழகியம்மன் திருக்கோயில், சிவகங்கை

முகவரி :
அருள்மிகு பொன்னழகியம்மன் திருக்கோயில்,
ஓ.சிறுவயல்,
சிவகங்கை மாவட்டம் – 630 208.
போன்: +91- 4577 – 264 778
இறைவி:
பொன்னழகியம்மன்
அறிமுகம்:
பொன்னழகியம்மன் கோயில் தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஓ.சிறுவயல் கிராமத்தில் அமைந்துள்ளது. மூலவர் பொன்னழகியம்மன் என்று அழைக்கப்படுகிறார். உற்சவர் அழகிய நாயகி என்று அழைக்கப்படுகிறார். தல விருட்சம் என்பது மகிழம். தீர்த்தம் அம்பாள் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. தாயார் பொன்னழகி அம்பாள் சுயம்பு மூர்த்தி.
புராண முக்கியத்துவம் :
முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காடாக இருந்தது. ஒருசமயம் இக்காட்டில் சிலர் கவளக்கிழங்கு தோண்டும் பணியை செய்து கொண்டிருந்தனர். அப்போது, ஒரு கிழங்கின் மீது கத்தி பட்டு ரத்தம் வெளிப்பட்டது. பயந்த தொழிலாளர்கள் ஊர் மக்களிடம் இதனை தெரிவித்தனர். மக்கள் சென்று பார்த்தபோது அம்பாள் சுயம்புவாக இருந்ததைக் கண்டு, இவ்விடத்தில் கோயில் கட்டினர்.
கோயிலுக்கு முன்புறம், சிறிய கல்வடிவில், “கல்லுச்சியம்மன்’ காவல் தெய்வமாக இருக்கிறாள். இவளுக்கு குங்கும அர்ச்சனை செய்வது விசேஷம். அனுமான் அஞ்சலிஹஸ்தம் எனப்படும் ராமனை வணங்கிய நிலையிலும், பக்தர்களுக்கு அருள்பாலிப்பது போன்ற அபயஹஸ்த நிலையிலும் பல இடங்களில் இருக்கும். ஆனால், ராமனின் திருப்பாதத்தை சரணடைந்து, அவரது பாதங்களை பிடித்த நிலையிலுள்ள அனுமானை சிவகங்கை மாவட்டம் ஓ.சிறுவயலில் உள்ள பொன்னழகியம்மன் கோயிலில் தரிசிக்கலாம்.
நம்பிக்கைகள்:
திருமணத்தடை நீங்க அம்பாளுக்கு பட்டு வஸ்திரம் சாத்தி சந்தனக்காப்பும், சிறப்பு அபிஷேகமும் செய்து வழிபடலாம். ராமர் சன்னதியில் வேண்டிக்கொள்ள எதிரி பயம் நீங்கும், பணிவு குணம் வரும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
அம்பாள் அமைப்பு: அம்பாள் லிங்கவடிவிலான பாறையில் சுயம்புவாக இருக்கிறாள். இவள் 8 கைகளில் ஆயுதங்களுடனும், தன் கழுத்தை வலதுபுறம் சற்றே திருப்பியபடியும், மகிஷாசுரனை வதம் செய்த கோலத்தில் காட்சி தருகிறாள். கோடரியால் வெட்டுப்பட்ட தழும்பு தற்போதும் இருக்கிறது. கொடிமரத்திற்கு அருகே அம் பாளை வணங்கியபடி வேதாளம் உள்ளது.
ராமர் பாதம் பிடித்த ஆஞ்சநேயர்: பிரகாரத்தில் ராமர், சீதை ஆகியோர் அமர்ந்த கோலத்தில் இருக்கின்றனர். ராமரின் இருக்கைக்கு கீழ் இருக்கும் ஆஞ்சநேயர், அவரது காலைப்பிடித்தபடி இருக்கிறார். இதனை, ராமருக்கு ஆஞ்சநேயர் கீழ்பணிந்து பணிவிடை செய்த கோலம் என்கிறார்கள். அருகில் இருக்கும் சீதாதேவி தனது வலதுகாலை மடக்கி உயர்த்திக் கொண்டு, இடக்காலை மட்டும் தொங்க விட்டபடி அனுமன் வணங்குவதை பார்ப்பவள் போல காட்சி தருகிறாள். தன் கணவரின் சேவகனான ஆஞ்சநேயர் எங்கே தன் காலையும் பிடித்து விடுவாரோ என்ற எண்ணத்தில் அவள் தன் ஒரு காலை மட்டும் இப்படி தூக்கி வைத்துக்கொண்டதாக சொல் கிறார்கள்.
சகோதர தலம்: பிரச்னைகளால் பிரிந்துள்ள சகோதரர்கள் இங்கு வேண்டிக் கொண்டால் மீண்டும் சேர்ந்து கொள்வர் என்கிறார்கள். இதற்காக இங்கு “தத்துக் கொடுத்தல்’ எனும் சடங்கைச் செய்கிறார்கள்.
திருவிழாக்கள்:
சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம்.



காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஓ.சிறுவயல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை