பஞ்சலோக கிருஷ்ணர்

சென்னை அருகே, வலது கை அறுக்கப்பட்ட நிலையில், இரு சக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட, பஞ்சலோக கிருஷ்ணர் சிலையை போலீசார் மீட்டுள்ளனர்.
திரிசூலம் ரயில்வே கேட் அருகே, மர்ம நபர்கள், சிலை கடத்தலில் ஈடுபடுவதாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டி.எஸ்.பி.,க்கள், ஜோஸ் தங்கையா, சுந்தரம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, திரிசூலத்தில் இருந்து, ஜி.எஸ்.டி., சாலை நோக்கி சென்ற, இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விசாரித்தனர். இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரும், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால், அவர்களின் உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பையில், பஞ்சலோகத்தால் செய்யப்பட்ட, 1 அடி உயரமுள்ள கிருஷ்ணர் சிலை இருந்தது. வலது கை அறுக்கப்பட்ட நிலையில் இருந்த சிலையை, இருவரும் விற்க முயன்றது தெரிய வந்தது.
இதன் மதிப்பு, 1 கோடி ரூபாய் இருக்கும் என, போலீசார் கணித்துள்ளனர்.இதையடுத்து, சிலை கடத்தலில் ஈடுபட்ட, திரிசூலம், எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த, கோட்டைசாமி, 47; ஜமீன் பல்லாவரம், கச்சேரி மலையைச் சேர்ந்த, சுரேஷ், 43, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணர் சிலை எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது; அதன் கையை அறுத்தவர்கள் யார்; அதன் பின்னணியில் இருப்போர் யார் என்பது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.