ஸ்ரீ கிருஷ்ணன் கோயில், சிங்கப்பூர்

முகவரி :
ஸ்ரீ கிருஷ்ணன் கோவில்,
152 வாட்டர்லோ சாலை,
சிங்கப்பூர் – 187961.
தொலைபேசி : 6337 7957 ; தொலைநகல் : 6334 2712 / 67695784; தொலைநகல் : 67699003
இறைவன்:
கிருஷ்ணன்
அறிமுகம்:
ஸ்ரீ கிருஷ்ணன் கோயில் சிங்கப்பூரில் அமைந்துள்ள கோவில். 1870 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 2014 ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தேசிய நினைவுச்சின்னமாக அரசிதழில் வெளியிடப்பட்டது, இது சிங்கப்பூரின் பழமையான கோயில்களில் ஒன்றாகும், மேலும் இது கிருஷ்ணா மற்றும் அவரது மனைவி ருக்மணிக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிங்கப்பூரில் உள்ள ஒரே தென்னிந்திய கோயில் ஆகும்.
புராண முக்கியத்துவம் :
சிங்கப்பூரில் 1870 ம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஆலயம், அருள்மிகு கிருஷ்ணன் ஆலயம் ஆகும். இப்பகுதியில் வாழ்ந்த இந்தியர்கள், மாலைப் பொழுதில் ஒன்று கூடும் பொது இடமாக வாட்டர்லோ சாலை அமைந்திருந்தது. கடல் கடந்து வந்த இவர்களுக்கு, ஒரு வழிபாட்டுத் தலமிருந்தால் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. அனுமான் பீம்சிங் என்பவர் கோயில் கட்டி, தங்களின் கலாச்சாரம்,மதம்,மொழி ஆகிவற்றை மறவாது கடைபிடிக்க எண்ணினார். அந்த எண்ணத்தைச் செயலாக்க வாட்டர்லோ சாலையிலிருந்த மக்களுடன் இணைந்து, அப்பகுதியில் இருந்த தென்னை,வாழைத் தோட்டங்களைச் சுத்தம் செய்து ஒரு ஆலமரத்தின் கீழ் அனுமன், விநாயகர் தெய்வங்களை வைத்து விளக்கேற்றித் தினந்தோறும் பூஜை செய்து வழிபாட்டைத் துவங்கினர்.
சில காலத்திற்குப் பின் கிருஷ்ணனையும் வைத்து வழிப்படத் தொடங்கினர். இக்கோயில் சிறிய குடிலாக இருந்தபோதிலும் பக்தர் கூட்டம் அதிகரிக்கவே,பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பக் கோவில் பெரிதாக இருக்கவேண்டும் என எண்ணி, 1880ம் ஆண்டில் அனுமான் பீம்சிங், கிருஷ்ணன் கோயில் நிர்வாகத்தினைத் தன் மகன் உம்நா சோம்பா என்பவரிடம் ஒப்படைத்தார். கோவிலின் தர்ம கர்த்தாவாகவும் அவர் நியமிக்கப்பட்டார். 1880 -1904 ஆண்டுகளில் கிருஷ்ணன் கோவில், கூரை குடியிலிருந்து செங்கல்,காரை கற்கட்டிடமாக மாறியது. 1904- ல் கோயில் நிர்வாக பொறுப்பு உம்நா சோம்பாவிடம் இருந்து ஜோக்னி அம்மாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் புதிய முறையான மூலஸ்தானமும், விமானமும் அமைத்து, 1933ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
1935-ல் மேலும் சில கோயில் கட்டிட பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மூலஸ்தானத்திற்கு முன் மேல் தளத்துடன் கூடிய ஒரு மண்டபம் கட்டப்பட்டது. இதன் கும்பாபிஷேகம் 21-ம் தேதி,ஜனவரி 1959 ம் ஆண்டு நடைபெற்றது. 1984 ம் ஆண்டு தற்போதைய தேவைக்கேற்ப கோவில் புதுப்பிக்கப்பட்டு, கோயில் நுழைவாசல்,கோபுரம் ஆகியனவும் புதுப்பிக்கப்பட்டது. புதிய சன்னதிகளில் ஆஞ்சநேயர், விஷ்ணுதுர்க்கை, குருவாயூரப்பன், சுதர்சனர், மகாலட்சுமி சிலைகள்ஸ்தாபிக்கப்பட்டன. புதிதாக வசந்த மண்டபமும் கட்டப்பட்டது. இக்கோயிலின் கட்டிடப் பணிகளின் நிறைவு பணி பூஜைகள் 12-11-1989-ல் நடத்தப்பட்டன. சூரிய ஒளியால் உலகம் முழுவதும் தங்க முலாம் பூசியது போல் கண்கொள்ளாக் காட்சியாக கிருஷ்ணரின் அழகிய வடிவம் அமைக்கப்பட்டிருந்தது.
சிறப்பு அம்சங்கள்:
கிருஷ்ணன் கோவிலை அடுத்து சீனக் கோயிலும் அமைந்துள்ளதால் சீனப் பக்தர்களும் கிருஷ்ணன் கோயிலுக்கு வந்து கிருஷ்ணனின் தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். 137 ஆண்டு வரலாறு கொண்ட கிருஷ்ணன் கோயில் இன்று கண்கவரும் வண்ணங்களுடன் சுற்றுப் பயணிகளையும் கவர்ந்து வருகிறது. கோவிலில் யோகா, வேத வகுப்புகள், நாதஸ்வரம், தவில், நாட்டியம், தற்காப்புக்கலைகள், நுண்கலை சம்பந்தமான வகுப்புகள் போன்ற வகுப்புகளும் நடத்தப்படுகிறது.
திருவிழாக்கள்:
தமிழ் புத்தாண்டு விழா, வசந்த நவராத்திரி, வைகாசி விசாகம், ஆடி வெள்ளி, செவ்வாய், சங்கு அபிஷேகம், வரலட்சுமி விரதம், கிருஷ்ணஜெயந்தி, ராமநவமி, விநாயகர் சதுர்த்தி, புரட்டாசி சனிக்கிழமை, திருக்கார்த்திகை, சர்வாலய விஷ்ணுதீபம், ஆஞ்சநேயர் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் இக்கோயிலில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.






























காலம்
1870 ஆம் ஆண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இராணி தெரு
அருகிலுள்ள இரயில் நிலையம்
இராணி
அருகிலுள்ள விமான நிலையம்
சிங்கப்பூர்