ஸ்ரீ ஓதிமலை ஆண்டவர் கோயில், கோயம்பத்தூர்
முகவரி
ஸ்ரீ ஓதிமலை ஆண்டவர் கோயில், இரும்பறை – 638 459, கோயம்பத்தூர் மாவட்டம், தொலைபேசி: +91-4254 – 287 418, 98659 70586
இறைவன்
இறைவன்: ஸ்ரீ ஓதிமலை ஆண்டவர் (முருகன்)
அறிமுகம்
இக்கோயில் தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஓதிமலை, இரும்பரை கிராமத்தில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் ஸ்ரீ ஓதிமலை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில். 500 முதல் 1000 ஆண்டுகள் பழமையான கோயில் என்று நம்பப்படுகிறது, கோயிலுக்கு 2000 படிகள் உள்ளன. விநாயகருக்கு சன்னதிகளும், இயற்கையாக உருவான சிவலிங்கமும் உள்ளன. பிரதான சன்னதிக்கு ஏறுவதற்கு முன், இடும்பன் மற்றும் கடம்பனுக்கு சன்னதி மற்றும் அன்னதான மண்டபம் இடதுபுறம் உள்ளது. மயில் வாகனத்துடனும் பலிபீடத்துடனும் கிழக்கு நோக்கிய ஆலயம். பிரதான சன்னதியின் இடதுபுறத்தில் காசி விஸ்வநாதருக்கும், கருவறையின் வலதுபுறம் ஸ்ரீ விசாலாக்ஷிக்கும் சந்நதி உள்ளது. மூலவர் ஐந்து முகங்கள் மற்றும் 8 கைகள், அழகான மற்றும் வசீகரமான முகத்துடன் இருக்கிறார். ஸ்ரீ ஓதிமலை ஆண்டவர் சிவபெருமானின் காதில் பிரணவ மந்திரத்தை ஓதினார் என்றும், அதனால் மலை ஓதிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
படைப்புக்கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு, முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திர விளக்கம் கேட்டார். அவர் தெரியாது நிற்கவே, சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை துவங்கினார். அப்போது படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் அவரது அமைப்பில் ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்’ எனப்பட்டது. முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே, பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார். சுவாமிமலை தலத்தில் சிவனுக்கு பிரணவத்தின் விளக்கம் சொன்ன முருகன், இத்தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு ஓதிய (உபதேசம் செய்த) மலை என்பதால் தலம், “ஓதிமலை’ என்றும், சுவாமி “ஓதிமலையாண்டவர்’ என்றும் பெயர் பெற்றார
நம்பிக்கைகள்
எந்தவொரு புதிய முயற்சியையும் மேற்கொள்வதற்கு முன், பக்தர்கள் முருகப்பெருமானின் கருத்தை அறிய இரண்டு மலர்களால் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவரின் ஒப்புதலைப் பெறுவார்கள். இது வரம் கேட்டல் – வரம் தேடுதல் என்று அழைக்கப்படுகிறது. மக்கள் கல்வியில் அறிவு, ஞானம் பெற பிரார்த்தனை செய்கிறார்கள்; பக்தர்கள் பால் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்து, இறைவனுக்கு வஸ்திரம் அணிவிப்பர்.
சிறப்பு அம்சங்கள்
இங்கு முருகன் ஐந்து முகம், 8 கரங்களில் ஆயுதங்களுடன் காட்சி தருகிறார். முருகன், சிவ அம்சம் என்பதால் அவரைப்போல ஐந்து தலைகளுடன் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இத்தகைய அமைப்பை காண்பது அபூர்வம். இந்த அமைப்பிலுள்ள முருகனை, “கவுஞ்சவேதமூர்த்தி’ என்று அழைக்கிறார்கள். கல்வி, கலைகளில் சிறந்து திகழ இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். மலையடிவாரத்தில் சுயம்பு விநாயகர் இருக்கிறார். இவரை வணங்கிவிட்டே முருகனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும் சன்னதி இருக்கிறது. முருகனிடம் பிரம்மவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான், கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். முருகனை சந்தித்தபோது, சிவபெருமான் மட்டும் தனித்து வந்தார். உடன் அம்பிகை வரவில்லை. எனவே இக்கோயிலில் அம்பிகை சன்னதி கிடையாது. பிரம்மாவை முருகன், இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் “இரும்பறை’ என்று அழைக்கப்படுகிறது. வெண்மணல் பிரசாதம்: சித்தர்களில் ஒருவரான போகர், முருகனைத் தரிசிக்க பழநிக்குச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக வழி தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் தங்கிய அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார். அப்போது இத்தலத்து முருகன், அவருக்கு வழிகாட்டினார். வழிகாட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் உள்ள முருகன், போகருக்கு வழிகாட்ட ஒரு முகத்துடன் சென்றதால், ஓதிமலையில் ஐந்து முகங்களுடனும், இத்தலத்தில் ஒரு முகத்துடனும் இருப்பதாக சொல்கிறார்கள். தலவிநாயகர், அனுக்கை விநாயகர் என்றழைக்கப்படுகிறார்.
திருவிழாக்கள்
தைப்பூசத்தில் 9 நாள் பிரம்மோற்ஸவம், சித்திரைப்பிறப்பு, வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இரும்பறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்