Tuesday Nov 12, 2024

விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில், மதுரை

முகவரி :

அருள்மிகு அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் திருக்கோயில், மதுரை

விராதனூர்,

மதுரை மாவட்டம்  – 625 022.

போன்: +91- +91 452-550 4241, 269 8961.

இறைவன்:

அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்

அறிமுகம்:

கோயிலின் வாசல் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. பெரும்பாலும் சிவாலயங்களில் மையப் பகுதியில் தான் மூலவர் சன்னதி இருக்கும். ஆனால் இங்கு வட மேற்கு வாயு மூலையில் அமைந்துள்ளது. தனி மண்ட பத்தில் நந்தி, சன்னதியின் வலப்புறம் பத்ரகாளி, இடப்புறம் வீரபத்திரர், அர்த்தமண்டபத்தில் விநாயகர், முருகன் அருள்பாலிக்கிறார்கள். தென் கிழக்கு அக்னி மூலையில் முத்துக்கருப்பண்ண சாமி, ராக்காயி, சப்பாணி, காவல் கருப்பு, முனியாண்டி போன்ற கிராம தேவதைகளுக்கு சன்னதி உள்ளது. மதுரையிலிருந்து 14 கி.மீ.தூரத்தில் விராதனூர் உள்ளது. மதுரை மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து சிந்தாமணி, பனையூர் வழியாக நெடுங்குளம் செல்லும் பஸ்சில் செல்லலாம்.

புராண முக்கியத்துவம் :

 750 வருடங்களுக்கு முன், உத்திரகோசமங்கை என்ற ஊரிலிருந்து இரு குடும்பத்தினர், தங்கள் குலதெய்வமான அழகர்கோவில் பெருமாளுக்கு நேர்த்திக் கடன் செலுத்த வந்தனர். வழியில் விராதனூரில் இளைப்பாறினர். தங்கள் குழந்தையை அங்கிருந்த ஆலமரத்தில் தொட்டில் கட்டி உறங்க வைத்தனர். பெரியவர்களும் உறங்கி விட்டனர். விழித்த போது தொட்டிலில் குழந்தையைக் காணவில்லை.

மரத்தின் மீது அந்த குழந்தை அமர்ந்திருந்தது. இதைக்கண்ட பெற்றோர் கண்ணீர் விட்டு “”இறைவா! குழந்தையை காப்பாற்று,” என அழுதனர். அப்போது இறைவன் அந்த ஊரில் தனக்கு கோயில் அமைத்து வழிபடும்படி அசரீரியாக கூறினார். இறைவனின் கட்டளைப்படி அவர்களும் ரிஷபாரூடர் சிலை வைத்து, கோயில் கட்டி வழிபாடு செய்தார்கள். குழந்தையை காணாமல் அழுத கண்ணீரை போக்கியதால், இறைவனுக்கு “அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன்’ என்ற திருநாமம் சூட்டப்பட்டது.

நம்பிக்கைகள்:

குழந்தை பாக்கியம், மன வலிமை, திருமணத்தடை ஆகியவற்றுக்காக இங்கு மக்கள் வேண்டுதல் செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் ரிஷபாரூட மூர்த்தி உப மூர்த்தியாகத்தான் இருப்பார். ஆனால், மதுரை அருகே உள்ள விராதனூர் அழுத கண்ணீர் ஆற்றிய ஈஸ்வரன் கோயிலில் ரிஷபாரூடர் மூலவராக அருள்பாலிக்கிறார். பிரதோஷ காலங்களில் மூலவரையே ரிஷபாரூடராக வழிபடலாம் என்பது இக்கோயிலின் சிறப்பு.

ரிஷபாரூடர்:

அசுரர்கள் தொல்லையினால் தேவர்கள் கயிலாயம் சென்று தங்களை காப்பாற்ற சிவனிடம் முறையிட்டனர். சிவன் தேவர்களால் செய்யப்பட்ட தேரில் ஏறி அசுரர்களுடன் போருக்கு புறப்பட்டார். தேரின் அச்சு முறிந்து விட்டது. சிவனிடம் கொண்ட அன்பின் காரணமாக மகாவிஷ்ணு காளை உருவம் கொண்டு சிவனை ஏற்றிச் சென்றார். இதன் பின் சிவனுக்கு “ரிஷபாரூடர்’ என்ற திருநாமம் உண்டாயிற்று. விஷ்ணு இங்கு இடபவாகனமாக இருப்பதால் சிவனையும், சக்தியையும், பெருமாளையும் ஒரே மூலஸ்தானத்தில் தரிசிக்கலாம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

விராதனூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top