வடமறைக்காடு ஒப்பிலாமணியர் திருக்கோயில், காரைக்கால்

முகவரி :
வடமறைக்காடு ஒப்பிலாமணியர் திருக்கோயில்,
காரைக்கால் வட்டம்,
காரைக்கால் மாவட்டம் – 609602.
இறைவன்:
ஒப்பிலாமணியர்
இறைவி:
சுந்தராம்பாள்
அறிமுகம்:
வேதாரண்யம் மறைக்காடு என அழைக்கப்படுவது போல் இத்தலம் வடமறைக்காடு என அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கிய உயர்ந்த ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் உள்ளது. அதனை கடந்தால் வலது புறம் சௌந்தராம்பாள் சன்னதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய சுதைகள் அலங்கரிக்க, வாயிலில் இரு துவாரபாலகியர் இருவர் உள்ளனர். அம்பிகை அழகிய பெரிய வடிவுடன் காட்சியளிக்கிறார். இறைவன் ஒப்பிலாமணியர் சற்று நடுத்தர அளவுடைய லிங்கமாக கருவறை கொண்டுள்ளார்.
கருவறையின் பிரஸ்தரம் வரை கருங்கல்லால் சோழர்கால காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது கோபுர வாயிலில் ஒரு சோழஅரசனின் சிலை ஒன்று கம்பீரமாக நிற்கிறது யாரென அறியமுடியவில்லை. முகப்பில் அர்த்த மண்டபம் மகா மண்டபம் என உள்ளது அதனை அடுத்து ஒரு நீண்ட மண்டபம் ராஜகோபுரம் வரை உள்ளது அதில் நந்தி இறைவனை நோக்கியபடி உள்ளார். கருவறை கோட்டத்தில் தென்முகன் லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சண்டேசர் சண்டேஸ்வரி என இருவரும் ஒன்றாக சன்னதி கொண்டுள்ளனர். தென்மேற்கில் ஒரு வேம்பு ஒன்று வழிபாட்டில் உள்ளது. அருகில் செல்வவிநாயகர் சிற்றாலயம், செல்வசுப்பிரமணியர் எனும் பெயரில் முருகன் வள்ளி தெய்வானையுடன் ஒரு சிற்றாலயம் கொண்டுள்ளார். அம்பிகையின் சன்னதியை ஒட்டியவாறு ஒரு பெரிய பலாமரம் ஒன்று சற்று பட்டுபோய் மீண்டும் உயிர்த்தெழுந்து வருகிறது. வடகிழக்கில் நவகிரகங்கள், மற்றும் நால்வர், பைரவர், சனி ஆகியோர் உள்ளனர். இக்கோயிலின் எதிரில் ஒரு குளம் ஒன்றும் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
இறைவனுக்கும் இறைவிக்கும் கயிலையில் திருமணம் நடைபெறுகிறது, அதனை காண தேவர்கள் அனைவரும் வந்து சேர வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது அதனால் அகத்தியரை தென்புலம் நோக்கி செல்ல இறைவன் பணிக்கிறார், ஈசனின் ஆணைப்படி தென்னாடு வந்த அகத்தியர் இந்த வடமறைக்காடு வந்ததாகவும் அந்த தருணத்தில் இறைவன் இறைவி திருமணம் கயிலையில் நடைபெறுகிறது இத்திருமணத்தை நேரில் காண இயலாமல் போனதே என வருந்திய அகத்தியருக்கு இறைவன் தனது திருமண காட்சியை காட்டியருளினார். இத்தகு பெருமைமிகு தலத்தில் இறைவன் ஒப்பிலாமணியர் எனும் பெயர் கொண்டு அருள்புரிகிறார். இறைவி சுந்தராம்பாள் எனும் பெயர் கொண்டுள்ளார்.
ஆண்டு தோறும் இங்கு திருமணக்காட்சி தந்ததை முன்னிட்டு, சித்திரை மாதம் வளர்பிறையில் திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது.
ஒருமுறை இலங்கையை சேர்ந்த செட்டியார் ஒருவர் வேதாரண்யம் எனும் மறைக்காட்டு இறைவன் கோயில் திருப்பணியை செய்ய பெரும் பொருளுடன் ஒரு படகில் இந்தியா வந்து கொண்டிருந்தார், வரும் வழியில் இறைவன் திருவிளையாடலாக பெரும்புயல் படகை அலைக்கழித்தது, செட்டியாரோ இறைவன் திருநாமத்தை ஜபித்தவாறு தன்னை காப்பாற்றி கரை சேர்க்குமாறு வேண்டி படகில் அமர்ந்திருந்தார், அப்போது வானின்று ஒரு அசரீரி ஒலித்தது, விரைவில் புயல்காற்று அடங்கும் இப்படகு எங்கு தஞ்சமடைகிறதோ அங்கே எனக்கு உள்ள ஒரு கோயிலை மறைக்காடாக எண்ணி திருப்பணி செய்து வழிபடுவாய் என கூறியது. சற்று நேரத்தில் புயல் காற்று ஓய்ந்தது படகு இந்த காரைக்கால் பகுதியை வந்தடைந்தது இந்த கோயிலை கண்டு அவர் நல்ல முறையில் திருப்பணிகள் செய்து வழிபட்டார் அதுமுதல் இத்தலம் வடமறைக்காடு என வழங்கப்படுகிறது.











காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி