Thursday Sep 19, 2024

மேல்பட்டாம்பாக்கம் ஆதி அங்காளம்மன் திருக்கோயில், கடலூர்

முகவரி :

மேல்பட்டாம்பாக்கம் ஆதி அங்காளம்மன் திருக்கோயில்,

மேல்பட்டாம்பாக்கம்,

கடலூர் மாவட்டம் – 607104.

இறைவி:

ஆதி அங்காளம்மன்

அறிமுகம்:

       கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் என்ற சிறு கிராமத்தில், 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆதி அங்காளம்மன் திருக்கோவில் உள்ளது. அங்காளம்மன் என்ற பெயரில் நிறைய திருத்தலங்கள் இருந்தாலும், சிறப்பு வாய்ந்த திருத்தலங்களில் ஒருசிலவே உள்ளன. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தலங்களில் ஒன்றுதான், மேல்பட்டாம்பாக்கம் அங்காளம்மன் ஆலயம். கடலூர் – பண்ருட்டி செல்லும் பேருந்து, விழுப்புரம் – நெல்லிக்குப்பம் செல்லும் பேருந்துகளில் இந்த ஆலயம் செல்லலாம்.

புராண முக்கியத்துவம் :

 சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில், அதிக அளவில் பர்வதராஜ குலத்தை சேர்ந்த மக்கள் வசித்து வந்தனர். இவர்களுக்கு முக்கிய தொழிலானது, மீன்பிடித் தொழில். இவர்கள் தங்கள் தொழிலை அருகில் உள்ள தேவனாம்பட்டினம் கடற்கரையில் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் மீன்பிடித் தொழிலில் மிகப் பெரிய மந்த நிலை ஏற்பட்டது. கடலில் விரித்த மீனவர்களின் வலையில் மீன்கள் சிக்கவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. இதனால் செய்வதறியாது திகைத்த மக்கள், தங்களின் குலதெய்வமான அங்காளம்மனை வழிபட முடிவு செய்தனர். அன்னைக்கு ஓர் ஆலயம் அமைக்கவும் தீர்மானித்தனர். ஆனால் தொழில் நடைபெறாததால், எவரிடமும் பொருளாதாரம் இல்லை. அப்படியிருக்க அன்னைக்கு எப்படி கோவில் கட்டுவது என்று அனைவரும் கலங்கினர்.

இறுதியில் ஒரு முடிவுக்கு வந்த மக்கள், பராசக்தியை மனதார நினைத்தபடி கடற்கரைக்குச் செல்வோம். அங்கு அங்காளம்மனுக்கு வழிபாடு செய்துவிட்டு வருவோம். தொழில் நல்லபடியாக நடைபெற்றால், அதில்வரும் பொருளைக் கொண்டு அன்னைக்கு கோவில் கட்டலாம் என்று நினைத்தனர். அதன்படியே அம்மனை வழிபட்டு விட்டு, மீனவர்கள் வழக்கம் போல கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். ஒரு குறிப்பிட்ட தூரம் சென்றவுடன், தங்கள் வலையில் மிக கனமான பொருள் ஏதோ ஒன்று மாட்டியதை மீனவர்கள் உணர்ந்தனர். பராசக்தியின் அருளால் நமக்கு ஏராளமான மீன்கள் கிடைத்துள்ளது என்று நினைத்த மீனவர்கள், வலையை தூக்கிப் பார்த்தபோது, அதில் ஒரு சின்ன கருங்கல் மட்டுமே இருந்தது கண்டு அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ‘இந்தச் சின்னக் கல் எப்படி இவ்வளவு கணமாக இருக்க முடியும்’ என்று அதிர்ச்சியில் உறைந்தனர்.

அந்தக் கல்லில் ஏதோ ஒரு சக்தி இருப்பதாக நினைத்த மீனவர்கள், அதை கடற்கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது ஒரு பெண்ணின் மீது அருள் வந்தது. அவர், “நீங்கள் கொண்டு வந்திருப்பது சாதாரண கல் அல்ல.. தேவியான நானே வந்திருக்கிறேன். எனக்கு கோவில் கட்டி வழிபடுங்கள். உங்கள் துன்பங்கள் எல்லாம் நீங்கும்” என்றார்.  உடனே மீனவ மக்கள், “தாயே எங்களிடம் கோவில் கட்டும் அளவுக்கு பொருளாதாரம் இல்லையே. தொழில் வேறு மந்தமாக நடைபெறுகிறது” என்று தங்களது இயலாமையை எடுத்துரைத்தனர். “நாளை நீங்கள் கடலுக்கு செல்லுங்கள். உங்கள் வாழ்வு செழிக்கும். நான் துணை நிற்பேன். இனி உங்களுக்கு எந்த குறையும் இருக்காது” என்று பராசக்தியின் மறு உருவாய் அந்தப் பெண் அருள்வாக்கு கூறினார்.

அந்த நம்பிக்கையோடு வலையை எடுத்துக்கொண்டு மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். அன்று மட்டும், அவர்கள் கரைக்கு எடுத்து வர முடியாத அளவுக்கு அதிகப்படியான மீன்கள் வலையில் சிக்கியது. மீனவர்கள் மெய்சிலிர்த்துப் போனார்கள். அந்த மீன்களை விற்பனை செய்து கிடைத்த பணத்தைக் கொண்டு உடனடியாக ஒரு ஆலயம் கட்டும் முடிவுக்கு வந்தனர். அதன்படி ஒரு சிறிய கீத்துக் கொட்டகை அமைத்து, கடலில் கிடைத்த அம்மனின் அருள் சக்தி நிறைந்த கல்லை, அங்கு பிரதிஷ்டை செய்தனர். அதற்கான வழிபாடுகளும் தினமும் நடந்து கொண்டிருந்தது.

சில நாட்கள் கழித்து அந்த ஊருக்கு ஒரு முதியவர் வந்தார். அவர் தன்னை மாயவரத்தில் இருந்து வருவதாகவும், தன் பெயர் ‘மாயவரத்தான்’ என்றும் அங்குள்ளவர்களிடம் அறிமுகம் செய்து கொண்டார். மேலும் தான் ஒரு சிற்பி என்றும் கூறினார். மேலும் அவர் கூறுகையில், “என்னுடைய கனவில் வந்த பராசக்தி, இந்த இடத்தில் நான் ஒரு கல்லாக உருவம் இல்லாமல் இருக்கிறேன். நேரடியாக நீ அங்கு சென்று, எனக்கு ஒரு உருவ சிலையை அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டாள். அன்னை கூறியபடியே நான் இங்கே வந்திருக்கிறேன்” என்றார். அதைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் மெய்சிலிர்த்து போனார்கள். சில நாட்களிலேயே அழகான தெய்வீகத் தன்மையை உடைய ஒரு சிற்பத்தை, அந்த சிற்பி வடித்தார். மாசி மகத்தன்று அதை பிரதிஷ்டை செய்து, ஒரு சிறிய ஆலயமாக கட்டி வழிபாடு நடத்த தொடங்கினர். இன்றும் அந்த ஆலயத்தில் மாயவரத்தான் வடித்த சிலையே கருவறையில் உள்ளது. நாளடைவில் இந்த ஆலயம் பக்தர்களால் அம்மனின் அருள்பெற்று, பலராலும் திருப்பணி செய்யப்பட்டு பெரிய அளவில் கோவில் கட்டப்பட்டு விட்டது.

நம்பிக்கைகள்:

அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னையை ஊர்வலமாக தென்பெண்ணை நதிக்கரைக்கு கொண்டு செல்வார்கள். அங்கு அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெறும். அப்போது பக்தர்கள் வேண்டும் வரத்தை அன்னை அளிப்பாள் என்பது நம்பிக்கை. மாதந்தோறும் அமாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் இங்கு நடைபெறுகிறது. இதில் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபாடு செய்தால், நிச்சயம் மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது. வேண்டுதலின் படி குழந்தை பெறுபவர்கள், குழந்தை பிறந்தவுடன் இந்த ஆலயத்தில் உள்ள மகா மண்டபத்தில் வைத்துதான் பெயர் சூட்டும் விழாவை நடத்துகிறார்கள். மேலும் அம்மனின் பாதத்தில் குழந்தையை வைத்து ஆசிபெறுகிறார்கள்.

திருமண தடை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமை அன்று இவ்வாலயத்திற்கு வந்து, அம்மனுக்கு பூமாலை சூட்டி அம்மனின் திருநாமத்தை பாமாலையாக உச்சரித்தால், திருமணம் விரைவில் நடைபெறும் என்பதும் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

சிறப்பு அம்சங்கள்:

       மேல்பட்டாம்பாக்கம் அங்காளம்மன் கோவில் தெருவில் உள்ளது, ஸ்ரீ ஆதி அங்காளம்மன் திருத்தலம். சிறிய அளவிலான ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே சென்றால், மகா மண்டபம் காணப்படுகிறது. இங்கு திரிசூலம், பலிபீடம், கொடி மரம், சிம்ம வாகனம் ஆகியவற்றை தரிசிக்கலாம். சிம்ம வாகனத்துக்கு எதிரில் விநாயகரும், அகோர வீரபத்திரரும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். அவர்களை வணங்கிவிட்டு கடந்து சென்றால் அர்த்த மண்டபம் உள்ளது. அதற்கு அடுத்துள்ள கருவறையில் அங்காளம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். கட்டமான பீடத்தில், நான்கு திருக்கரங்களோடு ஒரு கையில் கத்தி, இன்னொரு கையில் கபாலம், உடுக்கை, திரிசூலம் ஏந்தி சிங்க வாகனத்தின் மீது அமர்ந்தபடி மிக அற்புதமாய் காட்சி தருகிறாள். கருவறை கோஷ்டத்தில் அருணாச்சி சமேத பாவாடைராயன் சன்னிதி உள்ளது. இதில் ஆடி மாத குலதெய்வ வழிபாடும், கும்ப படையலும் வெகு விமரிசையாக நடைபெறும். குலதெய்வ வழிபாடு மேற்கொள்ள வெளி மாவட்டத்தில் இருந்தும், வெளி மாநிலத்தில் இருந்தும் நிறைய பக்தர்கள் இங்கு வந்து செல்வதை காணலாம்.

திருவிழாக்கள்:

இத்திருத்தலத்தில் மாசி மக உற்சவம் ஐந்து நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி உற்சவம் மக நாளன்று தென்பெண்ணை நதிக்கரையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, அம்மனுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னையை ஊர்வலமாக தென்பெண்ணை நதிக்கரைக்கு கொண்டு செல்வார்கள். அங்கு அம்மனுக்கு தீர்த்தவாரி நடைபெறும். கருவறையில் இருக்கும் அம்மன், அதன் கீழே ஆதி அம்மனாக மீனவர்களால் 300 ஆண்டுகளுக்கு முன் கடலில் இருந்து எடுக்கப்பட்ட கருங்கல் உள்ளது. இதற்கும் தினமும் அபிஷேகம் ஆராதனை நடைபெறுவது சிறப்பம்சமாகும்.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மேல்பட்டாம்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பன்ரூட்டி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top