மேலூர் (மேலநெடுங்காட்டாங்குடி) அகத்தீஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி :
மேலநெடுங்காட்டாங்குடி அகத்தீஸ்வரர் சிவன் கோயில்,
மேலூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610001.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
அன்னபூரணி
அறிமுகம்:
திருவாரூரின் வடக்கில் உள்ள கங்களாஞ்சேரி சென்று அங்கிருந்து நாகூர் சாலையில் உள்ள சூரனூரின் தெற்கில் 3-கிமீ தூரம் சென்றால் மேலநெடுங்காட்டாங்குடி அடையலாம். தற்போது மேலூர் என அழைக்கப்படுகிறது. பல காலமாக சிதிலம் அடைந்த நிலையில் இருந்த கோயில் முற்றிலும் புதிதாய் மேற்கு நோக்கி கட்டப்பட்டுள்ளது. இறைவன் அகத்தீஸ்வரர் இறைவி அன்னபூரணி தெற்கு நோக்கி உள்ளார். இறைவன் எதிரில் அழகிய நந்தி உள்ளார். கருவறை வாயிலில் சுப்ரமணியரும், விநாயகரும் உள்ளனர். வழக்கமாக இடதுபுறம் விநாயகர் இருப்பார் இங்கு வலது புறம் வைக்கப்பட்டுள்ளது. சண்டேசர் வடபுறம் உள்ளார். வடகிழக்கில் பைரவர் உள்ளார். அருகில் ஒரு லிங்க பாணன் உள்ளது. தென்மேற்கில் வடக்கு நோக்கிய சப்தமாதர் சன்னதி உள்ளது. சிதைந்த கோயிலின் பல மூர்த்திகள் காணாமல் போயுள்ளதால் கோஷ்ட மூர்த்திகள் இல்லை. சப்தமாதரை விவசாயிகள் வணங்கினால் வேளாண்மை செழிக்கும், அன்னபூரணியை வணங்கினால் வீட்டில் உணவுப்பொருட்கள் பற்றாக்குறை என்பதே இருக்காது. அகத்தீஸ்வரரை வணங்கினால் முக்தி கிடைக்கும்.
புராண முக்கியத்துவம் :
கயிலையில் இறைவனது திருமண வைபவம் நடைபெற்றபோது, வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்து பூமி சமநிலை தவறியது. பூமியை சமநிலைக்குக் கொண்டு வர, இறைவனது கட்டளை ஏற்று தென்னகம் புறப்படுகிறார் அகத்தியர், தான் பூஜை செய்யும் இடங்களிலெல்லாம் இறைவனின் ரிஷபாரூட காட்சியை தரிசிக்கவேண்டும் என வேண்ட சம்மதித்தார் இறைவனும். தென்திசை புறப்பட்ட அகத்திய முனிவர், தாம் நினைத்த இடங்களிலெல்லாம் சிவசக்தியரின் திருமண வைபவத்தை தரிசிக்க விரும்பினார். அதன் பலனாக எண்ணற்ற திருத்தலங்கள் தோன்றின. அகத்தியர் விரும்பிய இடங்களில் தம் திருமண வைபவத்தை தரிசிக்கும்படி செய்த இறைவன், நமக்கெல்லாம் அருள்புரிய வேண்டும் என்பதற்காக மேலும் பல திருத்தலங்களில் கோயில்கொள்ள விரும்பி, அகத்தியரையே மறைமுகமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் செய்தார். அப்படி அமைந்த பல திருத்தலங்களில் ஒன்று மேலநெடுங்காட்டாங்குடி






காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி