பேரையூர் நாகநாதசுவாமி திருக்கோயில், புதுக்கோட்டை
முகவரி :
பேரையூர் நாகநாதசுவாமி திருக்கோயில்,
பேரையூர் அஞ்சல், புதுக்கோட்டை மாவட்டம்,
தமிழ்நாடு – 622 404,
போன்: 04322-221084
இறைவன்:
நாகநாதசுவாமி
இறைவி:
பிரகதாம்பாள்
அறிமுகம்:
நாகநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் (இந்தியா) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பேரையூரில் உள்ள ஒரு சிவன் கோயிலாகும். பேரையூர், ஒரு பனைமர நிழல் கொண்ட வளமான கிராமத்தில் புகழ்பெற்ற இக்கோயில் உள்ளது. நாகநாதசுவாமி கோவில் நாக வழிபாட்டிற்கு நன்கு அறியப்பட்டதாகும், மேலும் மலட்டு பெண்கள் இந்த கிராமத்திற்கு பல நூற்றாண்டுகளாக யாத்திரை மேற்கொண்டு நாகங்களின் கல்லில் சிலைகளை நிறுவி வருகின்றனர். பேரையூர் வெள்ளாற்றின் தென்கரையில் உள்ளது. இங்கு சிவபெருமான் நாகநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
பேரையூர் புதுக்கோட்டையிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது, இது புதுக்கோட்டை – குழிப்பிறை – பொன்னமராவதி பேருந்து வழித்தடத்தில் இருந்து வெறும் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. புதுக்கோட்டையிலிருந்து வழக்கமான பேருந்து மற்றும் டாக்ஸி வசதி உள்ளது.
புராண முக்கியத்துவம் :
நாகராஜன் வணங்கிய தலம். எனவே இறைவன் நாகநாதர் எனப்படுகிறார். நாகநாதருக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். பால் அவரது உடலில் பட்டவுடன் நீல நிறமாக மாறும் அதிசயத்தைக் காணலாம். இத்திருத்தலத்தின் பெருமை கிருதயுகத்திலே நான்முகனாகிய பிரம்மன் புண்ணிய நதிகளைக் கோயில் திருக்குளத்தில் சேர்த்து நீராடி பிறை சூடிய பெருமானைத் தரிசித்து துதித்த தலம். சர்ப்பத்தினால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெறுவதற்கு சூரியபகவான் இங்கு வழிபட்டார். இந்திரன் சாபவிமோசனம் பெற்ற அருள்தலம். வருணனின் மகன் தவமியற்றி கலி நீங்கிய பெரும்தலம். நாகராஜன் பணிந்தேத்தும் திருத்தலம். பஞ்சமாபாதகம் செய்த ஒருவன் இறைவனின் பூஜைக்குச் சாம்பிராணி தந்ததால் அவனது எமவாதை குறைந்தது.
நம்பிக்கைகள்:
இங்குள்ள நாகநாதரை வழிபட்டால் எண்ணியவை எண்ணியபடி நடக்கும். ராகுதோஷம் நீங்க திருநாகேஸ்வரத்திற்கும், கேது தோஷம் நீங்க காளஹஸ்திக்கும் செல்வதற்குப் பதிலாக பேரையூர் நாகநாதரைத் தரிசித்தால் 2 கிரகங்களின் தோஷங்களும் நீங்கும். திருமணம் தடைபட்டுவந்தால் அது நீங்கி திருமணம் நடக்கும். குழந்தைப்பேறு உண்டாகும். மாங்கல்ய தோஷம் அகலும். செய்த தவறுகளுக்கு பரிகாரம் கிடைக்கும் திருத்தலம்.
சிறப்பு அம்சங்கள்:
இத்தலத்தின் அமைப்புகள் : கம்பீரமான பெரிய மதிற்சுவர்கள். அதன்மீது வரிசையாகக் கல்நாகர்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயில் எதிரே அமைந்துள்ளது திருக்குளம். உள்ளே பெரிய மண்டபம் காணப்படுகிறது. கிழக்கிலும், மேற்கிலும் இருவாசல்கள் உள்ளன. இரு வாசல்களிலும் கோபுரங்கள் காணப்படுகின்றன.
பெரிய மண்டபத்தைக் கடந்து சென்றால் துவாரபாலகர்கள் காணப்படுகிறார்கள். உள்ளே கொடிரம், பலிபீடம், நந்திவிக்ரகம் ஆகியவை காணப்படுகின்றன. அங்கே சென்றால் முதலில் காணப்படுவது “ஓம்’ என்னும் வடிவில் அமைந்துள்ள புஷ்கரணி. இந்த புஷ்கரணி புண்ணிய புஷ்கரணியாகும். இது ஒரு சுனைநீர் ஆகும். இதிலிருந்து சுவாமிக்கு அபிஷேகத்திற்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. இச்சுனையில் நீர்மட்டம் குறையும்பொழுது பக்கச்சுவரில் திரிசூலக் குறியொன்று காணப்படுகிறது. சூலத்திற்கு சரிமட்டத்தில் நீர் அமைந்திருக்கும் வேளையில் பங்குனி மாதம் மீன லக்னத்தில் சப்தம் எழுகிறது. மற்ற நேரங்களில் நீர்மட்டம் சூலத்திற்கு சரிமட்டமாக இருந்தாலும் அந்த முழக்கம் கேட்பதில்ல
மூலஸ்தானத்தில் இறைவன் சுயம்புவாக அமைந்திருக்கிறார். மூலஸ்தானம், அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளுடன் கூடியது. மூலஸ்தானத்தைவிட்டு வெளியே வந்தால் நடராஜரும் சிவகாமியும் தென்முகமாக எழுந்தருளி இருக்கிறார்கள். அடுத்து சுனையை பார்த்தவாறு விநாயகர் விக்ரகங்கள். இக்கோயிலின் பிரகாரத்தில் பிரார்த்தனையாகச் செலுத்தப்பட்ட கல்லில் ஆன நாகர் சிற்பங்கள் உள்ளன. நாகர் சிற்பங்களை அடுத்து சமயக்குரவர்கள் நால்வரும் சேக்கிழார் பெருமானும் காட்சி தருகின்றனர். அவர்களுக்கு எதிரே சின்முத்திரை காட்டி தட்சிணாமூர்த்தி தென்முகமாக அமர்ந்துள்ளார். மேற்கு பிரகாரத்தில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் காட்சிதருகின்றனர்.
பிரகாரத்தை வலம்வந்து வலப்புறம் திரும்பினால் அம்பிகையின் சன்னிதானம் அபயவரதஹஸ்தங்கள் இவைகளுடன் கருணை தாங்கும் பார்வையும் அன்பு தவழும் முகமாக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் அன்னை பிரகதாம்பாள். நவக்கிரக மண்டலத்தில் இறைவன், இறைவி இருவருக்கும் தனித்தனியே கொடிமரம் உள்ளது. இரண்டு இடங்களிலும் நந்தி உள்ளது. பங்குனி மாதம் மீன லக்னத்தில் இங்கு அமைந்துள்ள சுனையிலிருந்து பேர நாதம் (மிருதங்க முழக்கம்) எழுவதால் பேரேஸ்வரம் என்று வழங்கப்படுகிறது. இதுவே பேரையூர் என்று மருவியுள்ளது.
திருவிழாக்கள்:
ஆடிப்பூரத்தில் அம்பாளுக்கு கொடியேற்றி விழா நடக் கும். பங்குனி சித்திரையில் நாகநாதருக்கு கொடியேற்றுவிழா நடைபெறுகிறது.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பேரையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி