பேராவூரணி மருங்கபள்ளம் மருந்தீஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

முகவரி :
பேராவூரணி மருங்கபள்ளம் மருந்தீஸ்வரர் கோயில்,
மருங்கபள்ளம், பேராவூரணி,
தஞ்சாவூர் மாவட்டம் – 614802.
இறைவன்:
ஒளஷதபுரீஸ்வரர், மருந்தீஸ்வரர்
இறைவி:
பெரிய நாயகி
அறிமுகம்:
நோய் தீர்க்கும் மருந்தின் பெயரால் இறைவன் அழைக்கப்படுகிறார். ‘ஒளஷதபுரீஸ்வரர்’, ‘மருந்தீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் இந்த இறைவன் அருள்பாலிக்கும் ஆலயம் மருங்கபள்ளம் என்ற ஊரில் உள்ளது. ‘ஔஷதம்’ என்பதற்கு மருந்து என்று பொருள்.
இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். தன்னை வணங்கும் பக்தர்களின் வியாதிகளை படிப்படியாகக் குறைத்து, அவர்கள் பரி பூரண குணம் பெற இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் அருள்புரியக் கூடியவர் என்பதில் சந்தேகமே இல்லை. தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது மருங்கபள்ளம்.
புராண முக்கியத்துவம் :
சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர், ஒரு முறை மருங்கபள்ளம் கிராமத்திற்கு வந்தார். அப்போது அவருக்கு அருகே இருந்த ஒரு ஆலயம் பற்றியும், அங்கு அருள்பாலிக்கும் இறைவனின் சக்தி பற்றியும், ஆலயத்தைச் சுற்றி விளைந்து கிடந்த பச்சிலைகள் பற்றியும் சொல்லப்பட்டது. தீராத வியாதியால் தவித்து வந்த மன்னர் ஆலய திருக்குளத்தில் நீராடி மருந்தீஸ்வரரையும், பெரியநாயகியையும் ஆராதித்து வணங்கி வந்தார். அத்துடன் அங்கு இருந்த சித்த வைத்தியர் ஆலோசனைப்படி பச்சிலைகளையும் உட்கொண்டு வந்தார். மன்னரின் நோய் படிப்படியாக குணமாகி சில நாட்களில் முற்றிலும் குணமடைந்தார். மனம் மகிழ்ந்த மன்னர், தற்போது மருங்கப்பள்ளம் பகுதியை ஆலயத்திற்குத் தானமாக வழங்கினார். அதுவரை ‘மருந்து பள்ளம்’ என்று இருந்த, அந்த ஊர் பெயர் மருவி தற்போது ‘மருங்கப்பள்ளம்’ என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்ததும் பிள்ளையார் பீடம், நந்தி மண்டபம் உள்ளன. அடுத்துள்ள வசந்த மண்டபத்தின் வலதுபுறம் இறைவி பெரிய நாயகியின் சன்னிதி உள்ளது. அன்னைக்கு நான்கு கரங்கள். மேல் இரு கரங்களில் தாமரை மலர்களைச் சுமந்தபடியும் கீழ் இரு கரங்களில் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் அன்னை அருள்பாலிக்கிறாள்.
ஆலயம் பல நூறு ஆண்டுகள் பழமையானது. வசந்த மண்டபத்தை அடுத்து மகாமண்டபமும், அதையடுத்து அர்த்தமண்டபமும் உள்ளன. அர்த்த மண்டப நுழைவு வாசலில் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். அவர்களுக்கு வலது புறம் அனுக்ஞை விநாயகர் அருள்பாலிக்கிறார். கருவறையில் மருந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.
தேவக் கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகா கணபதி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் திருமேனிகள் உள்ளன. திருச்சுற்றில் முருகன், வள்ளி, தெய்வானை ஆகியோர் மேற்கிலும், கிழக்கில் சனி பகவான், பைரவர், லட்சுமி நாராயணன் ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர். இங்கு சனி பகவானுக்கு மட்டுமே சன்னிதி உள்ளது.






காலம்
1000ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மருங்கபள்ளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பேராவூரணி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி