பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி
முகவரி :
பேட்டவாய்த்தலை மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோயில்,
பேட்டவாய்த்தலை,
திருச்சி மாவட்டம் – 639112.
இறைவன்:
மத்யார்ஜுனேஸ்வரர் / மார்த்தாண்டேஸ்வரர்
இறைவி:
பாலாம்பிகை அம்மாள்
அறிமுகம்:
திருச்சி மாவட்டத்தில் பேட்டவாய்த்தலை என்ற கிராமத்தில் உள்ளது அருள்மிகு மத்யார்ஜூனேஸ்வரர் ஆலயம். இக்கோவிலின் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டால் பெண்களுக்கு வரும் மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் நிவர்த்தியாகும் என்று சித்தர் அருள்வாக்கு சொல்லி உள்ளார். இந்த ஆலயத்தில் உள்ள இறைவன் பெயர் அருள்மிகு மத்யார்ஜுனேஸ்வரர் இறைவனின் மற்றொரு பெயர் மார்த்தாண்டேஸ்வரர். இறைவியின் பெயர் அருள்மிகு பாலாம்பிகை அம்மாள்.
திருச்சி–கரூர் நெடுஞ்சாலையில் இத்தலம் அமைந்துள்ளது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் பேருந்தில் பயணம் செய்து பேட்டைவாய்த்தலையில் இறங்கிக் கொள்ளலாம். திருச்சி சத்திரம்பேருந்து நிலையத்திலிருந்து நகரப் பேருந்துகளும் உள்ளன. ஊரின் உள்ளே 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த ஆலயம்.
புராண முக்கியத்துவம் :
இந்த ஆலயம் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது. சோழ மன்னர்கள் பிரம்மஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்யும் பொருட்டு திருவிடைமருதூரில் சிவாலயம் ஒன்றை அமைத்தனர். அப்போது அந்த தோஷம் முழுமையாக நிவர்த்தி அடையாததால் நதி ஒன்றை உருவாக்கி, அதன் அருகே ஒரு சிவாலயம் அமைக்க வேண்டுமென ஒரு அசரீரி கூற, மன்னனும் அதன்படியே ஒரு நதியை வெட்டி அதன் தென் கரையில் ஆலயம் அமைத்தான். இப்படி அமைக்கப்பட்டதே இந்த ஆலயம்.
மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் வெட்டிய ஆறுதான் உய்யகொண்டான். காவிரியின் துணை நதியான இந்த ஆறு திருச்சி மாநகரின் மையப்பகுதி வரை சென்று பாசனத்துக்குப் பயன்படுகிறது. தன் முன்னோர்கள் திருவிடைமருதூரில் எழுப்பி கொண்டாடி வந்த சிவாலயத்தில் உள்ள இறைவனின் பெயரான மத்யார்ஜூனேஸ்வரர் பெயரையே இத்தல இறைவனுக்கும் மன்னன் சூட்டினான்.
நம்பிக்கைகள்:
இந்த ஆலயத்தின் கருவறை அமையும் நேரத்தில் மன்னரின் பிரம்மஹத்தி தோஷம் முழுவதும் நீங்கியது. நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாத மன்னனுக்கு குழந்தை பாக்கியமும் உண்டாயிற்று. அதை நினைவு படுத்தும் வகையில் இங்குள்ள மண்டபத்தின் தென்பகுதியில் ஒரு தூணில் பிரம்மஹத்தி உருவம் பொரிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
இக்கோவிலின் அம்மனுக்கு விரதமிருந்து வழிபட்டால் பெண்களுக்கு வரும் மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் நிவர்த்தியாகும் என்று சித்தர் அருள்வாக்கு சொல்லி உள்ளார். அந்த சித்தரின் உருவம் இங்குள்ள மண்டபத்தின் வடபுறம் ஒரு தூணில் பொறிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு உள்ள மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகளை ஒரு சீட்டில் எழுதி சித்தரின் திருமேனி இருக்கும் தூணில் கட்டுகின்றனர். பின், இங்குள்ள இறைவனையும், இறைவியையும், சித்தரையும் பிரார்த்தனை செய்ய, அவர்கள் பூரண நலம் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. அந்த சித்தர் இந்த ஆலய இறைவனுடன் ஜோதி உருவில் ஐக்கியமானதாக ஐதீகம்.
இக்கோவில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு பேட்டைவாய்த்தலை என்றும் வெட்டுவாய்த்தலை என்றும் இரு பெயர்கள் உள்ளன. ஆறுகளிலிருந்து வெட்டப்படும் கால்வாய்களின் முதல் இடத்திற்கு தலைவாய் என்ற பெயர் உண்டு. காவிரியிலிருந்து வெட்டப்பட்ட உய்யகொண்டான் வாய்க்காலின் தலைமை இடத்தைக் கொண்டு உள்ளது இந்த ஊர். மேலும் வண்டிகள் கூடும் இடத்தை பேட்டை என்பர். எனவே இந்த ஊர் பேட்டைவாய்த்தலை என அழைக்கப்படலாயிற்று.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பேட்டவாய்த்தலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி