பிரமனூர் கைலாசநாதர் திருக்கோயில், சிவகங்கை

முகவரி :
அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்,
பிரமனூர், திருப்புவனம் வழி,
சிவகங்கை மாவட்டம் – 630610.
போன்: +91 9787594871
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
காமாட்சியம்மன்
அறிமுகம்:
‘பிரமனூர் கைலாசநாதர் கோவில் தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டத்திலுள்ள பிரமனூரில் அமைந்துள்ள ஒரு சிவன் கோவில் ஆகும். மதுரையில் இருந்து 23 கிமீ தூரத்தில் இது அமைந்துள்ளது. நிலவளம், நீர்வளம் மிகுந்து நான்குபுறமும் நெல்வயல்கள், தென்னந்தோப்புகள், கரும்பு வயல்கள் சூழ்ந்திருக்க ஊரின் தென்மேற்குப் பகுதியில் காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் கோயில் எழிலோடு காட்சியளிக்கிறது.
புராண முக்கியத்துவம் :
ஈசன் விஸ்வரூபம் எடுத்து நின்றபோது அவரது திருவடியும் திருமுடியும் காண நாரணனும் நான்முகனும் போட்டியிட்டார்கள். அப்போது பிரம்மா, தாழம்பூவின் துணையோடு, இறைவனின் சிரத்தினைக் கண்டதாகப் பொய் கூறினார். அதனால் சிவனின் கோபத்துக்கும், அவரது சாபத்துக்கும் ஆளானார், பிரம்மா. தன் தவறை உணர்ந்த பிரம்மா, சாபவிமோசனம் பெற சிவனை வேண்டினார். மனமிரங்கிய மகேசன், பூலோகம் சென்று தன்னை வழிபட்டு சாப விமோசனம் பெறலாம் என்றார். பூலோகம் வந்த பிரம்மா, வைகையாற்றின் தென்கரைத் தலம் ஒன்றில் லிங்கம் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்யலானார். அதனால் அவருக்கு ஏற்பட்ட சாபம் விலகியது.
இறைவனுக்கு நன்றி தெரிவித்த பிரம்மா, எதிர்காலத்தில் தனது பெயராலேயே இவ்வூர் அழைக்கப்படவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதனையும் நிறைவேற்றி அருளினார் ஈசன். அதன்படி பிரம்மனூர் என இத்தலம் அழைக்கப்படுகிறது. படைத்தல், அழித்தல், காத்தல் ஆகிய தொழில்களைச் செய்து வரும் மும்மூர்த்திகளும் தத்தம் தேவியரோடு எழுந்தருளியுள்ள ஆயிரம் ஆண்டு பழமைவாய்ந்த தலம் பிரமனூர்.
நம்பிக்கைகள்:
கைலாசநாதரை வழிபட்டால் செய்வினைக்கோளாறுகளும், பித்ரு தோஷம் உள்பட சகல தோஷங்களும் நீங்குகிறது என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
மூலவர் விமானம் பாண்டியர்கால கலையம்சத்தை நினைவூட்டுகிறது. பிராகாரத்தை வலம் வருகையில் தட்சிணாமூர்த்தி, கன்னி மூலை கணபதி, லிங்கேத்பவர், ஸ்ரீதேவி – பூதேவி சமேத வேங்கடநாதர், வள்ளி -தேவசேனா முருகன், சண்டிகேஸ்வரர், பிரம்மா, துர்க்கை, நவகிரகம், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம்.
திருக்கார்த்திகையன்று கோயில் வாசலில் நடைபெறும் பிரமாண்டமான சொக்கப்பனை கொளுத்தும் வைபவத்தில் தாழை மடல்களைப் பயன்படுத்துவது சிறப்பு. ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா வருவார். பிரதோஷ வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடத்தப்படுகின்றன.
திருவிழாக்கள்:
தமிழ்ப் புத்தாண்டு, நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை மகா தீபம், ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி ஆகியவை வெகு, விமரிசையுடன் கொண்டாடப்படுகின்றன. திருக்கார்த்திகையன்று கோயில் வாசலில் நடைபெறும் பிரமாண்டமான சொக்கப்பனை கொளுத்தும் வைபவத்தில் தாழை மடல்களைப் பயன்படுத்துவது சிறப்பு. ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் சுவாமி வீதியுலா வருவார். பிரதோஷ வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடத்தப்படுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பிரமனூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிவகங்கை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை