பாலக்காடு வடக்கன்தரை பகவதி அம்மன் திருக்கோயில், கேரளா

முகவரி :
அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோயில்,
வடக்கன்தரை, பாலக்காடு,
கேரளா மாநிலம்.
போன்: +91 491 250 0229 +91-491 250 4851
இறைவி:
பகவதி அம்மன்
அறிமுகம்:
பாலக்காடு வடக்கங்கரை ஸ்ரீ பகவதி அம்மன் கோவில், கேரள மாநிலம் பாலக்காட்டில் அமைந்துள்ளது. வடக்கங்கரை ஸ்ரீ பகவதி ஆலயம் பகவதி அம்மன் கோவிலில் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது. இக்கோயில் கண்ணகி அம்மன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கண்ணகி முழு உருவ வடிவில் வழிபடப்படும் கேரளாவில் உள்ள ஒரே கண்ணகி கோவில் இதுவாகும்.
புராண முக்கியத்துவம் :
கற்புக்கரசி கண்ணகி மதுரையை எரித்தபின் மலையாள தேசத்திற்குச் சென்றாள். அவளுடன், கன்னடத்து பகவதி, கண்ணுகொட்டும் பகவதி மற்றும் புல்லுக்கோட்டை ஐயன் ஆகியோர் சென்றனர். இவர்கள் தெய்வ அனுகூலம் பெற்றவர்கள் என்பதை அறிந்த மலையாள மக்கள் நடப்பதிமன்னம் என்ற இடத்தில் கண்ணகிக்கும், பிராயரி என்ற இடத்தில் கன்னடத்து பகவதி, கண்ணு கொட்டும் பகவதிக்கும் கோயில் கட்டினர். அந்நியர் படையெடுப்பின் போது கோயில் சேதமடைந்தது. பகவதி சிலையும் நொறுக்கப்பட்டது. பக்தர்கள் பகவதி சிலை இருந்த பீடத்தை எடுத்து, திருபுராய்க்கல் வடக்கன் தரை என்ற இடத்திலுள்ள விஷ்ணுகோயில் அருகில் வைத்து வழிபட்டு வந்தனர். நாளடைவில் பீடத்திற்கும், அத்திமரத்திற்கும் பகவதியின் அருள் கிடைத்ததால் பகவதி அங்கு வாசம் செய்ய வந்தாள். தன்னை தேடிவரும் பக்தர்களுக்கு வேண்டிய பலனையும் அளித்தாள். இதையடுத்து பெரிய அளவில் கோயில் கட்டப்பட்டு, பீடத்தில் பகவதியின் ரூபமாக சிறிய கல்தூண் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
நம்பிக்கைகள்:
இங்கு பாடப்படும் தோற்றப்பாடலைக் கேட்டால் நமது பாவங்களும், பீடைகளும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பெண் குழந்தைகளுக்கு வியாதி அல்லது பிற காரணங்களால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டாலோ, அவர்களின் கல்வி, எதிர்காலத்தில் நல்ல கணவன் அமைவது போன்றவற்றிற்காக தெத்திப்பூவை சந்தனத்தில் நனைத்து ரத்த புஷ்பாஞ்சலி என்னும் அலங்கார பூஜை செய்யப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
கிருஷ்ணர் கிழக்கு முகமாகவும், அம்மன் மேற்கு முகமாகவும் அருள்பாலிக்கின்றனர். கண்ணகி கணவனை இழந்த கோலத்தில் பகவதியாக அருள்பாலிப்பதால் முல்லைப்பூ, பத்தி, குங்குமம் ஆகியவை சன்னதியில் பயன்படுத்துவதில்லை. கோயிலுக்குள் அழகான தீர்த்தக்குளம் உள்ளது.
தோற்றப் பாடல்: கண்ணகி வரலாற்றை அடிப்படையாக கொண்ட தோற்றப்பாட்டு மாசி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையிலும், சித்திரை மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தன்று நடக்கும் திருவிழாவிலும் பாடப்படுகிறது. விழா துவக்க நாளில், குரல் வளமுள்ள பக்தர்கள் இதைப் பாடுவர். பகவதியின் கதை இந்த பாடலில் வர்ணிக்கப்படுகிறது. இந்தப் பாடலைக் கேட்டால், நமது பாவங்களும், பீடைகளும் நீங்கி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பாடல் கோஷ்டியினர் 41 நாட்கள் விரதமிருந்து வருகின்றனர்.
ரத்த புஷ்பாஞ்சலி: பகவதி சன்னதிக்கு குழந்தைகளை அழைத்து வந்தால் பால பீடைகள் எனப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் விலகுகிறது. தன் கணவனை இழந்த நிலை யாருக்கும் வரக்கூடாது என்று இத்தலத்து பகவதி (கண்ணகி) உறுதி எடுத்துள்ளதால், பெண்கள் இவளிடம் சுமங்கலியாக இருக்க வரம் கேட்கின்றனர். பெண் குழந்தைகளுக்கு வியாதி அல்லது பிற காரணங்களால் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டாலோ, அவர்களின் கல்வி, எதிர்காலத்தில் நல்ல கணவன் அமைவது போன்றவற்றிற்காக தெத்திப்பூவை சந்தனத்தில் நனைத்து ரத்த புஷ்பாஞ்சலி என்னும் அலங்கார பூஜை செய்யப்படுகிறது.
இரட்டி மதுரம்: பாயாசத்தில் வழக்கத்தை விட அதிக இனிப்பு சேர்த்து செய்யப்படும் இரட்டி மதுரம் என்ற நைவேத்யம் பகவதிக்கு பிரியமானது. அவரவர் ஜென்ம நட்சத்திரத்தன்று இந்த நைவேத்யம் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் நாம் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டத்தை பகவதி அளிப்பதாக நம்பிக்கையுள்ளது. இதுதவிர காட்டுப் பாயாசம், பால் பாயாசம், பகவதி சேவை பாயாசம் ஆகியவை இரவு நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
வேலை திருவிழா: திருச்சூரில் பூரம் திருவிழா போன்று வடக்கன்தரை பகவதி கோயிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரம்மாண்டமான வேலை திருவிழா நடக்கிறது. சுவாமி, யானைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரும் நடத்தும் திருவிழா இது. விழாவின் பத்து நாட்களும் வடக்கன்தரா மக்கள் விரதம் கடைப்பிடிக்கின்றனர். இந்நாட்களில் கும்மாட்டி வழிபாடு விசேஷம். கும்மாட்டி என்றால் அம்மன், பூதகணம் உள்ளிட்ட வேடமிட்டு வருவதாகும். தமிழகத்தில் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் பக்தர்கள் வேடமிட்டு நேர்ச்சை செலுத்துவது போல இங்கும் செய்கின்றனர். மரத்தடியில் 36 கிண்ணம் கொண்டு விளக்கேற்றும் பாலமரம் முறிப்பு என்ற நிகழ்ச்சி வித்தியாசமானது.
திருவிழாக்கள்:
சித்திரையில் பிரதிஷ்டா தினம், மாசி கடைசி வெள்ளியில் வேலை திருவிழா துவக்கம் (மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை), நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி.








காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பாலக்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாலக்காடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்