பழங்காமூர் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :
பழங்காமூர் காசிவிஸ்வநாதர் திருக்கோயில்,
பழங்காமூர்,
திருவண்ணாமலை மாவட்டம் – 632317.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் இருந்து செய்யார் செல்லும் வழியில், ஆரணியிலிருந்து 3.கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பழங்காமூர். ஊரின் மையத்தில் கிழக்கு பார்த்தபடி காசிவிஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
தொண்டை நன்நாட்டில் உள்ள மிகப்பழமை வாய்ந்த தலங்களும் ஒன்றாகத் திகழ்கிறது பழங்காமூர் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம். ஈசனின் இடபாகம் பெற வேண்டிய அம்பிகை காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு, திருவண்ணாமலை நோக்கி வரும் வழியில் ஓர் வாழைக்காட்டில் (கதலிவனம்) வாழைப்பந்தல் அமைக்கின்றாள்! மணல் லிங்கம் பிடித்து வழிபட எத்தனிக்கின்றாள்! நீர் தேவை! உடன் தனது பிள்ளைகளாக கணபதியையும், கந்தனையும் அழைத்து நீர் கொண்டு வர கட்டளையிடுகின்றாள்!
கணபதி மேற்கு நோக்கி சென்றார். அங்கே ஜவ்வாது மலை அடிவாரத்தில் ஜமதக்னி முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அதை கண்ட கணபதி, காகமாக உருவெடுத்து, புனிதம் மிகுந்த அவரது கமண்டலத்தைக் கவிழ்க்க, அதிலிருந்து கங்கையைக் காட்டிலும் புண்ணியம் மிகுந்த நீர் நதியாகப் பெருக்கெடுத்து ஓடியது. அந்நதியே கமண்டல நதியானது. இந்தக் கமண்டல நதியோடு, சம்புவராயநல்லு என்னுமிடத்தில் நாக நதி இணைவதால் இந்த நதியை கமண்டல நாக நதி என்று அழைப்பர்! கமண்டல நாகநதியின் வடகரையில், காசியைப் போன்றே அமையப்பெற்றுள்ள ஊர்தான் பழங்காமநல்லூர் என்னும் பழங்காமூர். வாரணாசியைப் போன்றே இங்கும் ஸ்ரீகாசி விஸ்வநாதர், அன்னை ஸ்ரீ விசாலாட்சியோடு கோயில் கொண்டு அருட்பாலிக்கிறார்.
த்ரோயுகத்தில் இத்தலத்தில் ரிஷ்ய சிருங்கர் எனும் கலைக்கோட்டு முனிவர் வாழ்ந்து வந்தார். அவர் பன்னெடுங்காலமாய் கமண்டல நதியில் ஸ்நானம் செய்து, வடகரையில் உள்ள காசி விஸ்வநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தார்! ஒரு சமயம் வசிஷ்டரின் ஆலோசனைப்படி தென்னகம் வந்த தசரதரின் வேண்டுகோளுக்கிணங்க அக்கரைக்கு(கமண்டல நதியின் தென்கரைக்கு) சென்று புத்திரகாமேஷ்டி யாகத்தை அவருக்கு அற்புதமாய் நடத்தித் தந்தார். மேலும், தசரத மகா சக்ரவர்த்தியின் விருப்பிற்க்கிணங்கி, தசரதரின் துணையோடு ஸ்ரீ புத்திரகாமேஷ்டி ஈஸ்வரையும், நிறுவி, வழிபாடுகள் நடத்தினார்.
ரிஷ்யசிருங்கரின் காலத்திற்கும் முன்பே கமண்டலநதியின் வடகரையில் தானாக பூமியிலிருந்துத் தோன்றியப் பெருமானாக ஸ்ரீ காசி விஸ்வநாதர் வீற்றெழுந்து அருட்பாலித்து வருவது சிறப்புக்குரியதாகும்! கருவறையுள் அழகே உருவாய் லிங்கத் திருமேனி கொண்டு சாய்ந்த நிலையில் அற்புதமாக திருக்காட்சி தந்து, அருள்புரிகின்றார் ஸ்ரீ காசி விஸ்வநாதர். இறைவனுக்கு(வாம பாகத்தில்) இடப்புறம் ஸ்ரீ விசாலாட்சி அம்பாள் புன்னகை ததும்ப, புன்முறுவலுடன் அருள்மழை பொழிகின்றாள்.
நம்பிக்கைகள்:
இத்தல அம்பாளுக்கு மாங்கல்யம் சாற்றுவதாக வேண்டிக்கொள்ள விரைவில் மாங்கல்ய பாக்கியம் கிட்டும். நாகதோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு நாக பிரதிஷ்டையை முறைப்படி செய்து, தோஷநிவர்த்தி அடைகின்றனர். சிறந்த வேலை வேண்டுவோர் பிரதோஷத்தை நடத்திட நல்ல வேலை கிடைக்கப் பெறுகின்றனர். பிள்ளைச் செல்வம் இல்லாதோர் சுவாமி – அம்பாளுக்கு தேன் கலந்த பால் மற்றும் தயிரினால் அபிஷேகம் செய்து பலனடைகின்றனர்.

காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பழங்காமூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஆரணி
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை