படுதார்கொல்லை சோளீஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி :
படுதார்கொல்லை சோளீஸ்வரர் சிவன்கோயில்,
திருமலைராயன்பட்டினம் கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609606.
இறைவன்:
சோளீஸ்வரர் / சோழீஸ்வரர்
இறைவி:
சிவகாமி அம்மன்
அறிமுகம்:
இவ்வூர் திருமலைராயன்பட்டினம் மேற்கில் திருமலைராயன் ஆற்றின் கரையோரம் உள்ளது. திருமலைராயன் பட்டினம் பகுதி அரண்மனை இருந்த பகுதி இது எனப்படுகிறது. பனங்காட்டூர், படுதார்கொல்லை, அகரகொந்தகை, கொத்தமங்கலம், அனந்தநல்லூர், ஆகிய ஊர்கள் மிக அருகருகே அமைந்துள்ளது. இங்கு கிழக்கு நோக்கிய பெரிய சிவாலயம் உள்ளது. கோயிலின் எதிரில் ஒரு அழகிய சதுரவடிவ குளமும் நீர் நிறைந்து காணப்படுகிறது. கோயிலுக்கு தென்புறத்தில் ஒரு வழியுள்ளது, இதுவே பிரதான வழியாக உபயோகிக்கப்படுகிறது. இறைவன் சோளீஸ்வரர் – சோழீஸ்வரர் ஆக இருக்கலாம். இறைவி சிவகாமி அம்மன். கூம்பு வடிவ மண்டபங்களுடன் நாயக்கர் கால கட்டுமானமாக இருக்கிறது.
முற்றிலும் செங்கல் தளியாக உள்ளது. கருவறை அர்த்தமண்டபம், முக மண்டபம் என உள்ளது, அதில் தெற்கு நோக்கிய அம்பிகையின் கருவறையும் உள்ளது. இந்த மண்டபங்களின் வெளியில் தனித்த சிறிய மண்டபத்தில் நந்தி உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன் உள்ளார் அவரின் முன்னர் ஒரு சிறிய மண்டபம் போல கட்டுமானம் செய்துள்ளனர். பின்புறம் லிங்கோத்பவர் உள்ளார் வடக்கில் துர்க்கை மட்டும் உள்ளார். சண்டேசர் தனி சன்னதியில் உள்ளார். பிரகார சிற்றாலயங்களில் வினைதீர்த்த விநாயகர் அருகில் முருகன் சன்னதி, அடுத்து ஒரு நீண்ட மண்டபமும், அதனை ஒட்டி மகாலட்சுமியும் உள்ளனர். வடபுறம் ஒரு பெரிய பலா மரம் உள்ளது இக்கோயிலின் தலவிருட்சமாக இருக்கலாம். நவகிரகம் தனி மண்டபத்தில் உள்ளது. வடகிழக்கில் பைரவர் சூரியன் சிற்றலயங்களில் உள்ளனர். பயன்பாட்டில் உள்ள ஒரு கிணறும் உள்ளது. 4.6.2015 அன்று கடைசியாக குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. காலை பூஜையும் சிறப்பு நாட்களில் அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.











காலம்
100 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
படுதார்கொல்லை
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி