நிரவி ஜம்புநாதர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி :
நிரவி ஜம்புநாதர் சிவன்கோயில்
நிரவி, திருநள்ளாறு கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609604.
இறைவன்:
ஜம்புநாதர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
இக்கோயில் மேற்கு நோக்கியது முகப்பில் ராஜகோபுரம் இல்லை சுதையால் அலங்கரிக்கப்பட்ட நுழைவாயிலாக இருக்கிறது. உயர்ந்த கருங்கல் தூண்களுடன் கூடிய முகப்பு மண்டபம் உள்ளது. அதனை கடந்து மகாமண்டபம், அர்த்தமண்டபம் கருவறை உள்ளது. இறைவன் மேற்கு நோக்கியும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவன் சற்று பெரிய அளவிலான லிங்கமூர்த்தியாக உள்ளார். மகாமண்டபத்தில் வடமேற்கு பகுதியில் கிழக்கு நோக்கி வரதராஜ பெருமாள் மற்றும் லட்சுமி சன்னதியும், தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதியும் உள்ளன. தென்மேற்கில் விநாயகர் உள்ளார். கருவறை கோட்டங்களில் தென்முகன் துர்க்கை உள்ளனர். வடகிழக்கில் நவக்கிரக மண்டபம் உள்ளது. மேற்கு நோக்கிய பைரவர் சூரியன் சன்னதி உள்ளது,அதனை ஒட்டி நீண்ட மண்டபத்தில் விநாயகர்,லிங்க பாணங்கள், நாகர்கள், உள்ளனர். ஒரு பெரிய மரத்தின் கீழ் ஒரு லிங்கம் உள்ளது, மருதமரம் போல் தெரிகிறது, ஆனால் ஜம்பு நாதர் என்றால் நாவல் கீழிருப்பவர் என பொருள் படுகிறது. உள்ளூர் மக்கள் காலை மாலை என வழிபட்டு செல்கின்றனர். அதனால் கோயில் நல்ல ஈர்ப்புடன் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
விஜயநகர பேரரசின் பிரதிநிதியாக இப்பகுதியை ஆண்டு வந்தவர் திருமலைராயன் இவரது காலம் 1453-68 ஆகும். திருமலைராயன் மன்னன் மணம் செய்துவந்த சோழகுல பெண் உறையூரை சேர்ந்தவள், அவள் தினமும் திருஆனைக்கா இறைவனை வழிபட்டு வருவது வழக்கம். திருமலைராயன்பட்டினம் வந்த பின் அவ்வாறு வணங்க இயலாமல் போனது. அவளது மனக்குறையை தீர்க்க மன்னன் இங்கு ஒரு சிவாலயம் அமைத்து இங்குள்ள இறைவனுக்கு ஜம்புநாதர் என்றும் இறைவிக்கு அகிலாண்டேஸ்வரி என பெயரிட்டான். இது ஒரு செவி வழி கதையாகும். பின்னர் தான் மகளின் நோய் தீர இப்பகுதியில் 108 சிவாலயங்களை கட்டினார் எனபது வரலாறு. உ.வெ.சா அவர்கள் திருமலைராயன்பட்டினம் பற்றி எழுதும்போது இக்கோயில் பற்றியும் சில வரிகள் எழுதியுள்ளார். இத்தல இறைவன் சூரியனால் வழிபடப்பெற்றவர், இரவி என்றால் சூரியன், சிவபெருமானை சூரியன் பூஜித்த தலமாதலின் சூரியனுக்கு உரிய பெயரான இரவி என்பது இவ்வூருக்கு வழங்கப்பட்டு வந்தது, நாளடைவில் மருவி நிரவி என தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கவி காளமேகத்துடன் போட்டிகவி பாட அழைத்து அவரை அவமதித்த அதிமதுர கவிராஜ சிங்கம் என்பார் வாழ்ந்த ஊராகும்.










காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நிரவி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி