நிரவி குமரன்கோயில் (அருணநந்தீஸ்வரர் சிவன்கோயில்), காரைக்கால்

முகவரி :
நிரவி குமரன்கோயில் (அருணநந்தீஸ்வரர் சிவன்கோயில்),
நிரவி, திருநள்ளாறு கொம்யூன்,
காரைக்கால் மாவட்டம் – 609604.
இறைவன்:
அருணநந்தீஸ்வரர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. மன்னன் கட்டிய ஜம்புநாதர் கோயிலும் இதன் வடக்கில் உள்ள அருணநந்தீஸ்வரர் கோயிலும் ஆகும். முற்காலத்தில் பெரிய கோயிலாக இருந்து சிதைந்த கோயிலை தற்போது சிறிய அளவில் திருப்பணி செய்யப்பட்டு உள்ளது. 1989 ல் இக்கோயில் வளாகத்தில் திருப்பணி செய்ய பள்ளம் தோண்டியபோது பதினொரு ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. மாலிக்காபூர் படையெடுப்பில் இருந்து பாதுகாக்க மறைத்து வைக்கப்பட்ட சிலைகளாகலாம். 2015ல் குடமுழுக்கு நடைபெற்றது. பெரிய வளாகத்தில் கோயில் அமைந்துள்ளது.
இறைவன் அருணநந்தீஸ்வரர் சிறிய லிங்கமூர்த்தியாக கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். அவரின் கருவறை வாயிலில் ஒருபுறம் இரு விநாயகர்களும் மறுபுறம் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார்கள். நேர் எதிரில் சிறிய நந்தி, இறைவி ஆனந்தவல்லி தெற்கு நோக்கியுள்ளார். கருவறை கோட்டங்களில் விநாயகர் தென்முகன், லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். வழமை போல் சண்டேசர். வடகிழக்கில் ஒரு லிங்கம் தனித்து ஒரு தகர கொட்டகையில் உள்ளது. மேற்கு நோக்கிய பைரவர் சூரியன் சன்னதிகளும் உள்ளன.
புராண முக்கியத்துவம் :
அருணன் வழிபட்டதால் இத்தல இறைவனுக்கு அருணன்ஈஸ்வரர் என பெயர், இது தற்போது அருணநந்தீஸ்வரர் எனப்படுகிறது. இந்த அருணன் யார்? பாற்கடலில் இருந்து அமுதம் கிடைத்தது, தேவர்கள் முன் வரிசையில் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர். அப்போது ஸ்வர்பானு என்ற அரக்கன் தனக்கு அமுதம் கிடைக்காது என தேவர்கள் வரிசையில் அமர்ந்து அமுதத்தை உண்டான். அவனது சூழ்ச்சியை சூரியன் காட்டிகொடுக்க, மோகினி வடிவத்தில் இருந்த விஷ்ணு, ஸ்வர்பானுவை சட்டுவத்தால் அடித்தார். அப்போது அவன் உடல் தலை வேறு, உடல் வேறானது. உடல் துண்டிக்கப்பட்ட ஸ்வர்பானு திருமாலை நோக்கி கடும் தவம் புரிந்தான். இதனால் மகிழ்ந்த விஷ்ணு அவன் தவத்தை ஏற்று, பாம்பின் உடல், பாம்பின் தலை கொண்ட இரண்டு உருவங்களாக ஸ்வர்பானுவை சிருஷ்டித்தார்.
பாம்பின் உடலும், மனிதனின் தலையும் கொண்டது ராகுவானது. பாம்பின் தலையும் மனித உடலும் கேதுவானது. இவர்கள் சூரியன் மேல் கோபம் கொண்டு மறைத்து இருளாக்க சூரியன் ஒளியிழந்தான். மீண்டும் பூலோகத்தில் பல லிங்க பூஜை செய்து சுட்டெரிக்க ஆரம்பித்தான், இதை கட்டுப்படுத்த அனுப்பப்பட்டவரே அருணன். இவரால் சூரியனின் வெப்பம் கட்டுப்படுத்தப்படுகிறது. அருணன் கருடனின் அண்ணன், சூரியனின் தேரை ஓட்டுபவர், சூரியன் வரும் முன்னே தோன்றுவதால் அதிகாலை நேரத்தை அருணோதயம் என்பர். இப்படி நமக்கு பல நன்மைகளை தரும் அருணன் வணங்கிய கோயில் தான் இந்த கோயில். குமரன்கோயில் என முருகனை சிறப்பிப்பது ஏன் என தெரியவில்லை.








காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நிரவி
அருகிலுள்ள இரயில் நிலையம்
காரைக்கால்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி