நாசிக் திரிவேணி சங்கமம், மகாராஷ்டிரா
முகவரி :
நாசிக் திரிவேணி சங்கமம்,
பஞ்சவடி, நாசிக் மாவட்டம்,
மகாராஷ்டிரா மாநிலம் – 422003.
இறைவன்:
இராமர், சிவன்
அறிமுகம்:
புராணங்களும் இதிகாசங்களும் பஞ்சவடி என்று சிறப்பிக்கும் இடத்தைத் தன்னகத்தே கொண்டது நாசிக். இராமாயாணக் காலத்தில் 14 ஆண்டுகள் வன வாசத்தின்போது, பெரும்பாலான நாட்களை தம்பி லட்சுமணனுடனும் சீதாதேவியுடனும் ராமன் கழித்தது பஞ்சவடியில்தான். தற்போது பஞ்ச்வாடி என்றே அழைக்கிறார்கள். இங்கு கோதாவரியுடன் அருணா, வருணா ஆகிய நதிகளும் சங்கமமாகின்றன. ஆகவே இந்தத் தலம் திரிவேணி சங்கமம் என்று போற்றப்படுகிறது. இந்தத் திரிவேணியில் 12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா மிகவும் கோலாகலமாக – பிரமாண்டமாக நடைபெறுகிறது. மகாளயம், தை மாதம் மற்றும் ஆடி மாத அமாவாசை தினங்களில் புனித நீராடி, முன்னோர் வழிபாடு செய்ய உகந்த புண்ணிய க்ஷேத்திரங்களில் நாசிக் பஞ்சவடி திரிவேணி சங்கமமும் ஒன்று.
நாசிக் செல்ல ரயில் மார்க்கமாகச் செல்லலாம். ரயில் நிலையத் திலிருந்து பஞ்சவடி திரிவேணி சங்கமம் செல்ல போக்குவரத்து வசதிகள் நிறைய உள்ளன. பஞ்ச்வாடியில் தங்கும் விடுதி உண்டு;
புராண முக்கியத்துவம் :
வனவாசக் காலத்தில் தந்தை தசரதர் மறைந்த செய்தியை அறிந்தார் ராமன். அவர், இந்தப் பஞ்சவடி திரிவேணி சங்கமத்தின் கரையில் தந்தை தசரதருக்காக தர்ப்பணம் கொடுத் தாராம். ஆகவே, முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த தீர்த்தத் தலமாக – இறந்தவர்கள் அமைதி கொள்ளும் இடமாக விளங்குகிறது நாசிக்கின் பஞ்சவடி – திரிவேணி சங்கமம்.
இங்கே ராமர், லட்சுமண், சீதை, ஹனுமான் மற்றும் ராவணன் ஆகியோரின் பெயரில் தனித்தனியே குண்டம் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அவரவர் விரும்பும் இடத்தில் முன்னோருக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுகிறார்கள்.
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோர் இறந்தபோது அவர்களின் அஸ்தியும் திரிவேணி சங்கமத்தில் கரைக்கப்பட்டது. இருவருக்கும் இங்கே நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
திரிவேணி சங்கமத்துக்கு வரும் பொதுமக்கள் அதிகாலை 5 மணிக்கே தங்களின் முன்னோருக்கான தர்ப்பணாதி காரியங்களை நிறைவேற்றி, கோதாவரியில் புனித நீராடி வழிபடுகின்றனர். ஆற்றில் மழைக்காலம் தவிர மற்ற காலங்களில் நீரோட்டம் குறைவாகவே இருக்கும். அதேநேரம் எப்போதும் தண்ணீர் வற்றாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
நம்பிக்கைகள்:
அனுதினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து தங்களின் முன்னோர்களுக்காக தர்ப்பணம் கொடுத்து வழிபடு கிறார்கள். இறந்துபோன உறவுகளின் அஸ்தியைக் கொண்டு வந்து, இந்தத் தீர்த்தத்தில் கரைப்பதும் உண்டு. இதனால் இறந்தோரின் ஆன்மா முக்தி பெறும் என்பது நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
இங்குள்ள கோதாவரி மாதா கோயில் 12 ஆண்டுக்கு ஒரு முறை கும்பமேளாவின்போது மட்டும் திறக்கப்படுகிறது. தொடர்ந்து ஒரு வருடகாலம் கோயில் திறந்துவைக்கப்படும். கோதாவரியின் கரையில் பிரமாண்டமான அனுமன் சிலையை தரிசிக்கலாம். பெருமழைக் காலத்தில் கரையோரத்தில் உள்ள பல கட்டடங்கள் வெள்ளத்தில் மூழ்கும் நிலையிலும் அனுமன் சிலை முழுமையாக மூழ்கியது இல்லை.
பக்தர்கள் இந்தத் தலத்தை மகாராஷ்டிராவின் காசி என்றே சிறப்பிக்கிறார்கள். இதை மெய்ப்பிக்கும் விதம் திகழ்கிறது, நதிக் கரையில் உள்ள ஒரே கல்லில் கட்டப்பட்ட காசிவிஸ்வநாதர் திருக்கோயில். பல நூற்றாண்டுகளைக் கடந்த ஆலயம் இது. இதன் அருகில் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தையும் தரிசிக்கலாம். நாசிக் நகரைச் சுற்றிலும் ஶ்ரீராமனை நினைவூட்டும் இடங்களும் நிறைய உள்ளன. அயோத்திக்கு அடுத்தபடியாக நாசிக் நகரைப் போற்றுகிறார்கள் ஶ்ரீராம பக்தர்கள்.
திருவிழாக்கள்:
12 வருடங்களுக்கு ஒருமுறை கும்பமேளா மிகவும் பிரமாண்டமாக நடைபெறுகிறது. மகாளயம், தை மாதம் மற்றும் ஆடி மாத அமாவாசை தினங்களில் புனித நீராடி, முன்னோர் வழிபாடு செய்யப்படுகிறது.
காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பஞ்ச்வாடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாசிக்
அருகிலுள்ள விமான நிலையம்
நாசிக்