நாகமங்கலம் ஸ்ரீ சௌம்யகேசவன் சுவாமி திருக்கோயில், கர்நாடகா

முகவரி :
நாகமங்கலம் ஸ்ரீ சௌம்யகேசவன் சுவாமி திருக்கோயில்,
நாகமங்கலா,
கர்நாடகா – 571432
இறைவன்:
சௌம்யகேசவன் சுவாமி
இறைவி:
சௌம்யநாயகி
அறிமுகம்:
சௌமியகேசவர்கோயில் என்பது 12 ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசின் ஆட்சியாளர்களால் நாகமங்கலத்தில் கட்டப்பட்ட கோயிலாகும். இது, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரமான மைசூரிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம்-சிரா நெடுஞ்சாலையில், 62 கி.மீ தொலைவில், அமைந்துள்ளது. வரலாற்று ரீதியாக, போசள மன்னர் விஷ்ணுவர்தனனின் ஆட்சியின் போது நாகமங்கலம் முக்கியத்துவம் பெற்றது. இது வைணவ நம்பிக்கையின் ஒரு முக்கிய மையமாக மாறியது. மேலும் அவரது ராணிகளில் ஒருவரான பொம்மலாதேவியிடமிருந்து ஆதரவைப் பெற்றது. இரண்டாம் வீர வல்லாளனின் ஆட்சியின் போது, நாகமங்கலம் ஒரு அக்ரகாரமாக இருந்ததுடன், மரியாதைக்குரிய வீர வல்லாள சதுர்வேதி பட்டரத்னாகரம் என்ற பெயரையும் கொண்டிருந்தது. தற்போது இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இந்த கோயில் பாதுகாக்கப்படுகிறது.
புராண முக்கியத்துவம் :
கலை வரலாற்றாசிரியர் ஆடம் ஹார்டியின் கூற்றுப்படி, சன்னதியின் அடிப்படை திட்டம் நட்சத்திர வடிவம் ஆகும். இது ஜகதி என்ற பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயில், சோப்புக்கல் பொருட்களால் கட்டப்பட்டுள்ளது. வரலாற்றாசிரியர் பெர்சி பிரவுனின் கூற்றுப்படி இது ஒரு ஹொய்சாலா பாணியில் அமைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த கோயில் நாகஹள்ளி, சதாசிவா கோயில் போன்ற வேறு சில ஹொய்சாலா கோயில்களில் காணப்படும் நாகரா அம்சங்களை (வட இந்திய பாணி) காட்சிப்படுத்துகிறது. கலை வரலாற்றாசிரியர்களான ஜெரார்ட் ஃபோகேமா மற்றும் பெர்சி பிரவுன் கருத்துப்படி, ஹொய்சாலா கோயில்களில் நாகரா அம்சங்கள் அரிதாகவே காணப்படுகின்றன. இந்த கோயில் ஒரு பெரிய கட்டமைப்பாகும். இது பல வம்சங்களின் ஆதரவைப் பெற்றுள்ளது மற்றும் பிற்கால விஜயநகர சாம்ராஜ்யத்தின் அம்சங்களை வெளிப்படுத்துகிறது. அதன் ஆட்சியாளர்கள் அதன் மேல் நுழைவாயிலையும், கோபுரத்தையும் எல்லைச் சுவர்கள் எனப்படும் பிரகாரத்தையும் சேர்த்துள்ளனர். விஜயநகர பேரரசிற்கு பிந்தைய சில அம்சங்களும் இக்கோயிலில் காணப்படுகிறது. நுழைவாயிலுக்கு மேலே உள்ள கோபுரம் 7 மாடி உயரமான சுண்ணாம்பு மற்றும் செங்கல் அமைப்புடன் கட்டப்பட்டுள்ளது. இங்கு, இந்து கடவுளர்களின் உருவங்கள் சுவர் பூச்சுக்கான சாந்துவைப் பயன்படுத்தி அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இக்கோவில் மூன்று பகுதிகளாக உள்ளது. ஒரு கர்ப்பக்கிருகம், முன் கூடம், பெரிய தூண்களைக் கொண்ட ஒரு திறந்த மண்டபம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. பெர்சி பிரவுன் மற்றும் ஜெரார்ட் ஃபோகேமா ஆகியோரின் கூற்றுப்படி, இவை ஹொய்சாலா பாணி கோவிலின் தரமான அம்சங்கள் எனப்படுகிறது. மூடிய மண்டபத்தில் இரண்டு பக்கவாட்டு ஆலயங்கள் உள்ளன. ஒன்று வடக்கிலும் மற்றொன்று தெற்கிலும் உள்ளது. கிழக்கே, பெரிய மண்டபம் நடைமேடையுடன் இணைகிறது. இது பக்தர்களால் கோயிலைச் சுற்றி வருவதற்கு ஏதுவாக உள்ளது. ஏனெனில் கோயிலின் உள்ளே இதுபோன்ற எந்த அம்சமும் இல்லை. சன்னதியின் விமானம் வழக்கமான அலங்காரமின்றி கோயிலுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு அழகிய தோற்றத்தை அளிக்கிறது. கோயிலில் காணப்படும், இந்து மத கடவுளின் வடிவம் விஷ்ணு, கருடன் பீடத்தில் காட்சியளிக்கிறார். மூடிய மண்டபத்தின் கூரையானது ஹொய்சாலா கட்டுமானங்களில் ஒரு நிலையான அம்சமான லேத் டர்ன் தூண்களால் ஆதரிக்கப்படுகிறது.
நம்பிக்கைகள்:
இந்த கோவில் ராகு கேது பரிகார பூஜைக்கு பெயர் பெற்றது. நாக சர்ப்ப தோஷத்திற்கு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. நோயிலிருந்து விடுபடவும், மனநலம் பெறவும், திருமணத் தடைகள் நீங்கவும், குழந்தை வரம் பெறவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர்.
திருவிழாக்கள்:
புரட்டாசி பிரம்மோத்ஸவம், பங்குனி உத்திரம், மாசி மகம், வைகாசி விசாகம், திரு கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, சிரவண தீபம் ஆகியவை இங்கு கொண்டாடப்படும் விழாக்கள்.





















காலம்
12 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மைய
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மேலுகோட்டை, சரவனபெலகுலா
அருகிலுள்ள விமான நிலையம்
மைசூர்