தாருகாபுரம் மத்தியஸ்வரர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :
தாருகாபுரம் மத்தியஸ்வரர் திருக்கோயில்,
தாருகாபுரம்,
திருநெல்வேலி மாவட்டம் – 627755.
இறைவன்:
மத்தியஸ்வரர்
இறைவி:
அகிலாண்டேஸ்வரி
அறிமுகம்:
தென்காசி வாசுதேவநல்லூர் அருகே உள்ளது தாருகாபுரம். இங்கு அமைந்துள்ள மத்தியஸ்வரர் ஆலயம், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. பஞ்ச பூதத் தலங்களில் இது நீர் தலமாகும். அந்த வகையில் சங்கரன்கோவில் கோமதியம்மாள் சமேத சங்கரலிங்க சுவாமி ஆலயம் மண் தலமாகவும், கரிவலம்வந்த நல்லூர் பால்வண்ண நாதர் கோவில் நெருப்பு தலமாகவும், தென்மலை திரிபூரநாதர் ஆலயம் காற்று தலமாகவும், தேவதானம் நச்சாடை தவிர்த்த சிவனார் ஆலயம் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது.
பஞ்சபூதத் தலங்களில் மத்தியில் அமைந்திருக்கும் ஆலயம்தான் மத்தியஸ்வரர் ஆலயம். இந்த ஆலயம் நீர் தலம் என்பதற்கு இணங்க, குளத்தின் கரைக்குள்தான் ஆலயமே இருக்கிறது. மழை காலங்களில் ஆலயத்துக்குள் உள்ள கர்ப்பக்கிரகத்தினை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்கும். தானும் குளிர்ச்சியாகி, தன்னை தேடி வருபவர்களையும் குளிர்ச்சியாக வைக்கும் ஈசன் அமைந்திருக்கும் ஆலயம் இதுவாகும்.
தென்காசி அருகே உள்ள வாசுதேவ நல்லூரில் இருந்து தலைவன் கோட்டை செல்லும் சாலையில் 2 கிலோ மீட்டர் தொலைவில் தாருகாபுரம் இருக்கிறது. தென்காசியில் இருந்து ஏராளமான பஸ் வசதிகள் உள்ளன.
புராண முக்கியத்துவம் :
ஒரு காலத்தில் சேர, சோழ, பாண்டியர்களுக்கு தங்களது எல்லைகளை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டது. அந்த சமயத்தில் தங்களது மனக்குறையை அகத்திய பெருமானிடம் முறையிட்டார்கள். அகத்தியரோ, “உங்கள் பிரச்சினையை சிவ பெருமான் நிச்சயம் தீர்த்து வைப்பார்” என்று கூறினார். அதன்படி மூவேந்தர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்காக சிவபெருமான், நாதகிரி முனிவராக தாருகாபுரம் வனத்தில் வாழ்ந்து வந்தார். குறிப்பிட்ட காலத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் இங்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் பிரச்சினையை நாதகிரியாரிடம் கூறினார்கள். பிரச்சினையை அவர் உடனே தீர்த்து வைத்தார். அவர் கூற்றின் படி சேர, சோழ, பாண்டியர்கள் அவரவர் இடத்துக்கு சென்று ஆட்சி புரிய ஆரம்பித்தனர். அவர்கள் மத்தியமாக இருந்து தீர்ப்பு கூறிய சிவபெருமான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சென்று மறைந்து விட்டார். அந்த இடம் தற்போது சித்தர் பீடமாகவே கோவிலுக்குள் காட்சியளிக்கிறது.
நம்பிக்கைகள்:
துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் காலை 10.30 மணி முதல் பகல்12 மணி வரை சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் எதிரிகள் தொல்லை நீங்கும், திருமணத் தடை விலகும். இங்குள்ள ஜுரதேவருக்கு மிளகு அபிஷேகம் செய்து வழிபட்டால் காய்ச்சல் குணமாகும்.
சிறப்பு அம்சங்கள்:
மத்தியஸ்தவமாக இருந்து மூவர் பிரச்சினையும் தீர்த்த ஈசன் ‘மத்தியஸ்வரர்’ என்று அழைக்கப்பட்டார். அதன்பின் சுயம்பு லிங்கமாக குளத்தங்கரையில் காட்சி தந்தார். பாண்டிய மன்னன் இந்த இடத்தில் கோவில் கட்டி வணங்க ஆரம்பித்தான். இத்தல இறைவனுக்கு ‘பிணக்கருத்த பெருவுடையார்’ என்ற பெயரும் உண்டு. ‘பிணக்கு’ என்றால் ‘பிரிவு’ என்று பொருள். மனப்பிரிவை நீக்கிய பெருமான்தான் பிற்காலத்தில் ‘பிணக்கருத்த பெருவுடையார்’ என்று பெயர் பெற்றார்.
இத்தல அம்பாள் அகிலாண்டேஸ்வரி அகிலத்தினை காக்கும் தாய். இவளை வணங்கி நிற்போர்கள் பலர் வெளிநாட்டில் நல்ல வேலையில் இருந்து, நற்பலனைப் பெற்றுள்ளார்கள். இவருக்கு சிவபெருமானின் வலது புறத்தில் தனிச் சன்னிதியில் அமர்ந்து அன்னையானவள் அருள்பாலிக்கிறார்.
ஆலயத்திற்குள் நுழையும் போது, ஆலய மேற்கூரையில் மூலிகை வண்ணங்கள் நமது நெஞ்சை கொள்ளை கொள்ளும் அளவுக்கு பூசப்பட்டுள்ளன. பலி பீடம், கொடி மரம், நந்தி ஆகியவை பிரமாண்டமாக காட்சி தருகின்றன. அதையும் தாண்டி உள்ளே சென்றால் இடது புறம் விஷ்ணு உள்ளார். இத் தலத்தில் வள்ளி- தெய்வானை சமேதராக முருகப்பெருமான் அருள்கிறார். வள்ளியும் தெய்வானையும் ஒருவரையொருவர் பார்த்தபடி முருகப்பெருமானை வணங்குவது போல் வீற்றிருக்கின்றனர். இந்த அமைப்பு வேறு எங்கும் இல்லாத அம்சம் என்று கூறுகிறார்கள். இவர்களை வணங்கினால், கணவன்- மனைவி இடையே உள்ள கருத்துவேறுபாடு மறைந்து, வாழ்க்கை இன்பமயமாக அமையும்.
இக்கோவிலில் உள்ள பைரவர் சிறப்பு அம்சம் மிக்கவர். இவர் தலையில் சூரிய சின்னம் உள்ளது. இவரை ‘சத்ரு சம்ஹார பைரவர்’ என்று அழைக்கிறார்கள். தேய்பிறை அஷ்டமியில் இவரை வணங்கினால் தீராத பிரச்சினைகளும் தீர்ந்து விடும். இந்த பைரவரை தரிசிக்க நாளுக்குநாள் கூட்டம் அதிகரித்து வந்ததன் காரணமாக, ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் வகையில், ஆள் உயர கண்ணாடி ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் வழியாகவும் பைரவரை தரிசிக்க முடியும். ஆலயத்தின் உள்ளே நாதகிரி முனிவர் தரிசனம் தந்து பின் முக்தி பெற்ற இடத்தில் உயிரோட்டமான முறையில் சித்தர் வழிபாடும் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும்
இந்த ஆலயமானது, தலைவன்கோட்டை ஜமீனுக்கு பாத்தியப்பட்டது. ஜமீன்தார் வாரிசுகள் வைகாசி விசாக தெப்ப உற்சவத்தினை மிகச்சிறப்பாக நடத்துகிறார்கள். 10 நாள் திருவிழா, தேரோட்டத்துடன் பழங்காலத்தில் நடைபெற்று வந்திருக்கிறது. 1952-ம் ஆண்டு வரை நடந்த தேரோட்டம் இப்போது இல்லை. தற்போது வைகாசி விசாகம் அன்று சிறு சப்பரம் மட்டுமே பவனி வருகிறது. கிரக தோஷம் அகற்றும் தட்சிணாமூர்த்தி இந்த ஆலயம் பெருஞ் சிறப்புகளை கொண்டது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, சிவனின் அம்சம். இவர் தனது காலடியில் 9 நவக்கிரகங்களையும் அடக்கி அதன் மேல் அமர்ந்து அருள்பாலிக்கிறார். எனவே இங்கு நவக்கிரகங்களுக்கு என்று தனி சன்னிதி இல்லை. தட்சிணாமூர்த்தியை வணங்கினாலே அனைத்து கிரகங்களையும் வணங்கியதற்கு சமமாகும். இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
திருவிழாக்கள்:
பிரதோஷ நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படுகின்றன. இங்கு பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த வேளையில் நாதகிரி மலையை சுமார் 1000-க்கு மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமியை வணங்குவார்கள். திருக்கார்த்திகை திருவிழாவும் இக்கோவிலில் மிகச்சிறப்பாக நடைபெறும். சங்கடஹர சதுர்த்தி விழா, சிவராத்திரி விழாவும் முக்கியமான விழாக்களாக கருதப்படுகிறது. சிவராத்திரி நேரத்தில் பஞ்சபூத தலங்களுக்கும் சென்று வழிபட்டு வரும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம்.












காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தாருகாபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சங்கரன்கோயில்
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி