செஞ்சேரி வேலாயுதசுவாமி திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி :
அருள்மிகு வேலாயுதசுவாமி திருக்கோயில்,
செஞ்சேரி,
கோயம்புத்தூர் – 641669.
போன்: +91- 4255- 266 515, 268 515,268 415
இறைவன்:
வேலாயுதசுவாமி
அறிமுகம்:
செஞ்சேரிமலை என்பது தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் சூலூர் வட்டத்திற்கு உட்பட்ட ஓர் கிராமமாகும். இங்கு மலைமேல் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மந்தரகிரி வேலாயுத சுவாமி திருக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
புராண முக்கியத்துவம் :
ஒரு சமயம் கயிலையில் வீற்றிருக்கும் நந்திதேவரிடம், மந்திரகிரியின் சிறப்புகளை எடுத்துரைக்குமாறு மார்க்கண்டேயன் வினவ, அவர் கூறலானார்; சூரபத்மன் என்ற அரக்கன் கடுமையான தவமிருந்து ஈசனிடமிருந்து பெற்ற வரத்தினால் தேவர்களுக்கும் மக்களுக்கும் துன்பம் கொடுத்துவந்தான். இதையறிந்த ஈசன், சூரனை அடைக்கும் பொருட்டு கார்த்திகேயனைப் படைத்தார். ஈசனின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றி, சரவணப் பொய்கையில் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்த கர்த்திகேயனை பின்னர் கயிலைக்கு அழைத்து வந்தனர். தன் அவதார நோக்கத்தை தந்தையிடம் கேட்டுக்கொண்ட முருகன், சூரபத்மனையும் அரக்கர்களையும் அழிக்க, தேவசேனைகளுக்குத் தலைமை தாங்கிப் புறப்படத் தயாரானான். அடிவாரத்தில் வாமதேவர் தவக்குடில் உள்ளது.
இங்கு வியாசர், அத்திரி, கலைக்கோட்டு முனிவர், குச்சிகன், கேரிகோசிகன், அகத்தியர் போன்றோர் தவம் புரிந்திருக்கிறார்கள். ஒருமுறை நாரதர் இக்குடிலுக்கு விஜயம் செய்தபோது, யார் தவத்தில் சிறந்தவரோ, அவருக்கு என் வணக்கம்! என்றார். தவத்தில் சிறந்தவர் அகத்தியர். எனவே நாரதரின் வணக்கம் அவருக்கே உரியது என அனைவரும் நம்பினர். ஆனால் வியாச முனிவரோ இக்கூற்றை ஏற்க மறுத்து, அகத்தியனைவிட யாமே தவத்தில் சிறந்தவன் என இருமாப்புக் கொண்டார். அப்போது ஈசன் அங்கு தோன்றி அகத்தியரே சிறந்த தவசீலர் என உரைத்தார். அகத்தியர் வடக்கு நோக்கி அமர்ந்து மீண்டும் தவத்தில் ஈடுபட்டார். தவத்தை மெச்சிய ஈசன், அகத்தியரின் விருப்பப்படி, சயிலோகதீர்த்தம் எனும் சுனையை ஏற்படுத்தி, இங்கு நீராடுபவர்களின் பாவம் அறவே நீங்கி அருள்பெறுவர்! என ஆசி கூறினார். என்றும் வற்றாத இச்சுனை ஞானத் தீர்த்தம் என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. கோயிலின் வடக்குப் பகுதியில் உள்ள இத்தீர்த்ததில் நீராடி முருகனை வழிபட்டால் மனநோய், தீய சக்திகளின் பாதிப்புகளிலிருந்து விடுபடலாம் என்கிறார்கள்.
நம்பிக்கைகள்:
புதிதாக தொழில் தொடங்கவும், திருமணம் நடத்துவதற்காகவும் இங்கு முருகனிடம், “பூக்கேட்டல்’ எனும் சடங்கை செய்கின்றனர். சஷ்டி விரதமிருந்து நெய் தீபமேற்றி இவரை வழிபட்டால் குழந்தை பாக்யம் நிச்சயம் என்கின்றனர். ஜாதகரீதியாக பூர்வ புண்ணிய சாபம் உள்ளவர்கள் 11 பவுர்ணமியில் தாமரை மாலை சாற்றி மாதுளம் பழங்களை நைவேத்தியமாகப் படைத்து நெய் தீபமேற்றி வணங்கினால், அந்த சாபம் நீங்கும் என நம்புகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
இத்தலத்தில் உள்ள திருமால் தனது வலது கையில் லிங்கத்தை வைத்தபடி காட்சி தருவது விசேஷமான தரிசனம். நவக்கிரக சன்னதியில் சூரியபகவான் மேற்கு நோக்கியிருக்க, பிற கிரகங்கள் அவரை நோக்கியபடி அமைந்துள்ளது. இத்தலத்தில் வேலாயுதர் 12 கரங்களுடன் காட்சி தருகிறார். இவர் சேவல் கொடியை வைத்திருப்பதோடு, இடது கையில் சேவலையும் வைத்திருக்கிறார்.
தனிச்சன்னதியில் நடராஜர், சிவகாமியம்பாள் காட்சி தருகின்றனர். கைலாசநாதர், பெரிய நாயகி, விநாயகருக்கும் சன்னதிகள் உள்ளன. அருகிலேயே சக்தி மலை, திருமால் மலை, பிரம்மா மலை என்ற மூன்று மலைகள் இருக்கிறது. அடிவாரத்தில் மலைப்படி துவங்கும் இடத்தில் இருபுறமும் விநாயகர், முருகன் சன்னதிகள் உள்ளன. 230 படிகள் கொண்ட மலைப்பாதை வழியாகச் செல்லும்போது குமரன், சப்தகன்னியர், இடும்பன் ஆகியோரை தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம். வாகனங்கள் மலைமீது செல்ல தனிப்பாதையும் உள்ளது. கோயிலில் நுழைந்ததும் கொடிமரத்தையடுத்துத் மகாமண்டபம் உள்ளது.
திருவிழாக்கள்:
தமிழ்க்கடவுளான வேலாயுதசாமிக்கு தமிழ்ப்புத்தாண்டான சித்திரை முதல் நாளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஈசனுக்கு உகந்த ஆரூத்ரா தரிசனம், ஆனித் திருமஞ்சனம் மற்றும் முருகனுக்குகந்த கிருத்திகை, சஷ்டி, வைகாசி விசாகம், தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் சிறப்பு விழாக்களாகும். தேர்த்திருவிழாவில் சுற்றுவட்டார கிராமத்திலிருந்து திரளான மக்கள் கலந்து கொள்வர்.ர்





காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செஞ்சேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்புத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்புத்தூர்