சுருளி பூதநாராயணசுவாமி திருக்கோயில், தேனி

முகவரி :
அருள்மிகு பூதநாராயணசுவாமி திருக்கோயில்,
சுருளிமலை,
தேனி மாவட்டம் – 625 521.
போன்: +91- 4554- 276715
இறைவன்:
பூதநாராயண பெருமாள்
அறிமுகம்:
தேனியிலிருந்து 48 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது சுருளி தீர்த்தம் என்னும் அழகிய ஊர். அங்கு மகாவிஷ்ணு, பூதநாராயண பெருமாள் எனும் திருநாமம் ஏற்று, கோயில் கொண்டு இருக்கிறார். தேனியில் இருந்து கம்பம் சென்று, பின்னர் அங்கிருந்து டவுன் பஸ்ஸிலோ ஷேர் ஆட்டோவிலோ சுருளிதீர்த்தத்தை அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
ஒரு முறை சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்த ராவணேஸ்வரன் ஈரேழு உலகம், அண்டசராசரங்கள், நவக்கிரகங்கள், 12 ராசிகள், 27நட்சத்திரங்கள், தேவர்கள் ஆகியோர் தனக்கு கீழே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான். தான் பெற்ற வரத்தின் பலனால் அவன், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். ராவணனின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட எண்ணி பாதிக்கப்பட்ட அனைவரும் யாவரது கண்களுக்கும் புலப்படாமல் ககனமார்க்கமாக சென்று, மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தேவர்களைக் காணாத ராவணன் சனி பகவானை அனுப்பி அவர்களை கண்டறிந்து வரும்படி பணித்தான். அது முடியாமல் போனதால் நாரதரிடம், தேவர்களின் மறைவிடத்தை கண்டறியும்படி அவருக்கு ஆணையிட்டான். அப்படி தேடி வரும் போது ஒரு புற்றின் நடுவே மகரிஷி தவம் செய்து கொண்டிருந்ததைக் கண்டார். நாரதர் அவரிடம் தேவர்கள் இருப்பிடம் பற்றி கேட்க, அவர் தேவர்கள் ஆலோசனை நடத்தும் இடத்தைக் கூறினார். நாரதர் மூலமாக இச்செய்தியை அறிந்து கொண்ட ராவணேஸ்வரன், கடுங்கோபம் கொண்டு தேவர்களை அழிக்க தனது அரக்கர் படையுடன் புறப்பட்டான்.
அவனிடமிருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு மகாவிஷ்ணு, மகரிஷி தவம் செய்த இடத்தில், பஞ்சபூதங்களின் மொத்த வடிவில், பூதசொரூபத்துடன் விண்ணுக்கும் மண்ணுக்குமாக எழுந்து நின்றார். அவரது பூதகோலத்தைக் கண்டு பயந்த ராவணன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். அப்போது ரகசிய ஆலோசனையை முடித்துவிட்டு, அவ்விடத்திற்கு வந்த தேவர்கள் பூத நாராயணனாக உக்கிரத்துடன் இருந்த மகாவிஷ்ணுவிற்கு அன்னம் படைக்க, அதனை உண்ட அவர் தனது விஸ்வரூபத்தை அடக்கி ஒளிமயமாக காட்சியளித்தார். இவ்வாறு தேவர்களுக்கு பூதநாராயணனாக காட்சி தந்த மகாவிஷ்ணு இத்தலத்தில் வீற்றுள்ளார்.
நம்பிக்கைகள்:
இங்குள்ள சுரபி நதியில் நீராடி சுவாமியை வணங்கிட பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும், துன்பங்கள் நிவர்த்தியடைந்து நல்வாழ்வு கிட்டும், வேண்டும் வரம் கிடைக்கும், தீராத நோய்களும் தீரும் என்பது ஐதீகம்.
பித்ரு கடன் தீர்ப்பவர்: பூத வடிவம் கொண்டு நின்ற பெருமாளை பிரமனும் சிவபெருமானும் சாந்தப்படுத்தினர். மனிதர்களுக்கு விதிக்கப்பட்ட மூன்று கடன்களில் ஒன்று பித்ரு கடன். அதை நிறைவேற்றுவதற்கு உகந்த தலமாகக் கருதப்படுகிறது இந்தத் தலம். காரணம், காசியைப் போலவே இந்தத் தலத்திலும் சுருளியாறு, அருவியாறு, வெண்ணியாறு என மூன்று ஆறுகள் சங்கமிக்கின்றன. இந்தச் சங்கம தீர்த்தத்தில் நீராடி, பூதநாராயண பெருமாளை வழிபட்டு, அவருக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்தால், பித்ருக்களின் சாபம் நீங்கி நலம் பெறலாம் என்பது இந்தப் பகுதி மக்களின் நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்:
மதுரையை எரித்த கண்ணகி ஆவேசத்துடன் தெற்கே வந்த போது நெடுவேள்குன்றம் எனும் இச்சுருளிமலை வழியாகவே கடந்து சென்று பின் கூடலூர் வண்ணாத்திப்பாறை மலைக்குச் சென்றதாக தகவல் உண்டு. இயற்கையின் கட்டுக்கடங்காத சக்திக்கு உதாரணமாக உள்ள இம்மலையைக் குறித்து இளங்கோவடிகள் தனது சிலப்பதிகாரத்தில் அழகாக கூறியுள்ளார். புண்ணிய தீர்த்தங்களையும், பல அற்புதங்கள் புரியும் எண்ணற்ற மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள இம்மலையில் முனிவர்கள், சித்தர்கள், ரிஷிகள், தேவர்கள் தவம் புரிந்துள்ளனர். இத்தலத்தில் மகாவிஷ்ணுநின்ற கோலத்தில் பூதநாராயணனாக பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.
சிறப்புமிகு திரிவேணி சங்கமம்: வடக்கே காசி, தெற்கே ராமேஸ்வரம் ஆகிய தலங்களைப் போலவே, மூன்று நதிகளும் ஒன்று சேரும் இங்குள்ள திரிவேணி சங்கமத்தில் இறந்தவர்களின் அஸ்தியைக் கரைப்பது மிகவும் புண்ணியம் என்று சொல்லப்படுகிறது. மகாத்மா காந்தியின் அஸ்தியில் ஒரு சிறு பகுதி இங்கே கரைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
தர்ப்பண விசேஷம்: ஆடி அமாவாசை, புரட்டாசிமஹாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய தினங்களில் முன்னோர் களுக்கு இங்கு வந்து தர்ப்பணம் செய்துவிட்டு, இயன்ற அளவு தானம் செய்தால், இறந்த முன்னோர்களின் பரிபூரண ஆசிகள் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.
திருவிழாக்கள்:
தினமும் காலை, மாலை என இரண்டு கால பூஜை நடைபெறுகிறது. புரட்டாசி மாதம் முழுவதும் பெருமாளுக்கு லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.




காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சுருளி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை