சிங்கப்பூர் தண்டாயுதபாணி திருக்கோயில்

முகவரி :
சிங்கப்பூர் தண்டாயுதபாணி திருக்கோயில்,
எண் 15, தேங்க் சாலை, கிளமென்சியு அவென்யூ
சிங்கப்பூர் – 238065
இறைவன்:
தண்டாயுதபாணி
அறிமுகம்:
சிங்கப்பூர் நகரின் மையப்பகுதியில் கிளமென்சியு அவென்யூ பகுதியில், டேங்க் ரோடு எனும் தேங்க் சாலையில், எண் 15-ல், தண்டாயுதபாணி ஆலயம் அமைந்துள்ளது. சிங்கப்பூர் அரசின் தேசிய நினைவுச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்ட ஆலயம், நகரத்தாரால் 19-ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட கோவில், ஆன்மிகப் பணியோடு சமூகப் பணிக்கு உதவிடும் ஆலயம் என பல்வேறு பெருமைகள் கொண்ட ஆலயமாகத் திகழ்வது, சிங்கப்பூர் தண்டாயுதபாணி திருத்தலம் ஆகும்.
புராண முக்கியத்துவம் :
1820-ம் ஆண்டு சிங்கப்பூருக்கு குடியேறிய சில நகரத்தார் சமூகத்தினர், 1859-ம் ஆண்டு அங்கு முருகப்பெருமானுக்கு ஒரு ஆலயம் எழுப்பினர். தொடக்க காலத்தில் இன்றைய ரிவர் வேலி சாலையும், கிளமென்சியு அவென்யூ என்ற இடமும் சந்திக்கும் பகுதியில் குளக்கரையின் அரச மரத்தடியில் வேல் ஒன்றை நிறுவி வழிபாடு செய்து வந்தனர். பின்னரே தனி ஆலயம் எழுப்பப்பட்டிருக்கிறது. தொடக்கத்தில் முருகனின் சன்னிதி மட்டுமே இந்த ஆலயத்தில் இருந்திருக்கிறது. 1878-ம் ஆண்டு, ஜம்பு விநாயகர், மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர், இடும்பன், தட்சிணா மூர்த்தி, பைரவர், விஷ்ணு துர்க்கை, நவ துர்க்கை மற்றும் நவக்கிரக சன்னிதிகளும் அமைக்கப்பட்டன. அதற்கு அடுத்த ஆண்டு முதல் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் இந்த ஆலயத்தின் விரிவாக்கப் பணிகள் நடைபெற்றன. அதன்படி 75 அடி உயர ராஜ கோபுரம், அர்த்த மண்டபம், அலங்கார மண்டபம், திருமண மண்டபம், பணியாளர் விடுதி, கோவில் அலுவலகம் போன்றவை அமைக்கப்பட்டன.
சிறப்பு அம்சங்கள்:
சிங்கப்பூர் நகரின் டேங்க் சாலையில், பிரம்மாண்டமான பரப்பளவில் இந்த முருகப்பெருமான் ஆலயம் அமைந்திருக்கிறது. ஐந்து நிலை கொண்ட 75 அடி உயர ராஜகோபுரம் நம்மை கம்பீரத் தோற்றத்துடன் வரவேற் கிறது. ஐந்து கலசங்களைத் தாங்கி நிற்கும் அந்த கோபுரம் கிழக்கு நோக்கி காட்சி தருகிறது. ராஜகோபுரத்திற்குள் நுழைந்ததும் மகா மண்டபம் தென்படுகிறது. நேர் எதிரில் இந்த ஆலயத்தின் மூலவரான முருகப்பெருமான், ‘தண்டாயுதபாணி’ என்ற திருநாமத்துடன் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கருவறை உள்ளது. தன்னை நாடி வரும் பக்தர்களின் வேண்டுதல் நிறைவேற்றித் தரும் வள்ளலாக இந்த ஆலய இறைவன் திகழ்கிறார். இங்கு வந்து வழிபடுபவர்களின் சிக்கல்கள் அனைத்தும் விரைவில் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஆலயத்தின் கருவறையில் வலதுபுறம் ஜம்பு விநாயகர், இடதுபுறம் இடும்பன், சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன் சன்னிதிகள் அமைந்துள்ளன. அலுவலகத்தின் எதிரில் நவக்கிரக சன்னிதியும், அதன் அருகே ஆலய அலுவலகமும் இருக்கிறது. ஆலயத் திருச்சுற்றில் விழா மண்டபம் உள்ளது.
வெள்ளி ரத உற்சவம் : தொடக்க காலத்தில் இரண்டு காளைகள் பூட்டிய ரதமாக வலம் வந்த வெள்ளிரதம், இன்று நவீன யுகத்திற்கு ஏற்றாற்போல் மோட்டார் வாகனம் மூலம் இழுக்கப்பட்டு வருகிறது. சிங்கப்பூரில் ராபில்ஸ் பிளேஸ், மார்க்கம் தெரு உள்ளிட்ட முக்கிய சாலைகளின் வழியே ரதம் நகர்வலம் வருகின்றது.
திருவிழாக்கள்:
தமிழகத்து விழாக்களையொட்டியே இவ்வாலய விழாக்களும் அமைந்துள்ளன. மீனாட்சி அம்மன், துர்க்கை அம்மன் ஆகியோருக்கு லட்சார்ச்சனை, நவராத்திரி விழா, கந்தசஷ்டி, கார்த்திகை தீபத் திருவிழா, ஆருத்ரா தரிசனம், மகா சிவராத்திரி, ராமாயணம் பாராயணம், பிரதோஷம், மாத கார்த்திகை என விழாக்கள் பலவும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதுதவிர, திருமுறைகள் முற்றோதல், சைவ சமய சொற்பொழிவுகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படுகின்றன.
இந்த ஆலயத்தின் பிரதான விழாவாக, தைப்பூசம் திகழ்கிறது. தமிழ்க்கடவுளான முருகப்பெருமான் தீய சக்திகளை வெற்றி கொண்டதன் ஐதீகத்தில், தை மாதப் பவுர்ணமியில் வரும் பூச நட்சத்திரத்தில் தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தின் முதல்நாள் வெள்ளி ரதத்தில் ஊர்வலமாக புறப்படும் முருகப்பெருமான், கியொங் செய்க் சாலையில் உள்ள ‘லயன் சித்தி விநாயகர்’ ஆலயம் சென்று, அங்குள்ள விநாயகரிடம் ஆசி பெற்று வேலினைப் பெற்றுக்கொண்டு, காவடிகள் சூழ ஊர்வலமாக மீண்டும் ஆலயம் திரும்புவார்.
தைப்பூச நாளன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், சிராங்கூன் சாலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள தண்டாயுதபாணி கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். அலகு குத்தியும், அலகு குத்திய காவடி, ரதக்காவடி என பல்வேறு விதமான காவடிகளும் எடுத்து வருகின்றனர். பெண்கள், பால்குடங்களைத் தலையில் சுமந்தபடி ஆலயம் வந்து, வேலுக்கு அபிஷேகம் செய்து வேண்டுதலை நிறைவு செய்கின்றனர். விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது.










காலம்
1859-ம் ஆண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேங்க் சாலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
ரிவர் வேலி சாலை
அருகிலுள்ள விமான நிலையம்
சிங்கப்பூர்