Thursday Dec 26, 2024

குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் கோவில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி

குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் கோவில் ஏர்பேடு மண்டலம், பாப்பநாயுப்பேட்டை – குடிமல்லம் சாலை, ஆந்திரப் பிரதேசம் 517526

இறைவன்

இறைவன்: பரசுராமேஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி

அறிமுகம்

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரயில் நிலையத்திலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவிலும், காளஹஸ்தியிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது குடிமல்லம். இந்தக் கிராமத்தில் சுவர்ணமுகி ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது அருள்மிகு பரசுராமேஸ்வரர் ஆலயம். இந்தக் கோயிலில் காணப்படும் சிவலிங்க வடிவம்தான் இந்தியாவின் மிகப் பழைமையான லிங்கம் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து. இந்த லிங்கம் கி.மு.2 அல்லது 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும் என்று தொல்லியல் துறையினர் மதிப்பிட்டிருக்கிறார்கள். மிகவும் பழமைவாய்ந்த கோவிலாக கருதப்படும் இந்த கோவிலின் மூலவர் சிவபெருமான், மும்மூர்த்திகளையும் சேர்த்து லிங்கத்தின் வடிவில் காட்சியளிக்கின்றார். இந்த கோவிலில் பிரம்மனாவர் யட்சன் ரூபத்திலும், விஷ்ணுவானவர் பரசுராமர் ரூபத்திலும், சிவபெருமான் லிங்க ரூபத்தில் மும்மூர்த்திகளாக திகழ்கின்றனர். இந்தக் கோவிலில் வீற்றிருக்கும் பரசுராமேஸ்வரர் ஆறு அடி பள்ளத்தில் காட்சியளிக்கின்றார். இதனால் இந்த கிராமத்திற்கு ‘குடிபள்ளம்’ என்று பெயர் வந்தது. ‘குடி’ என்றால் தெலுங்கில் வசிக்கும் ஊரை குறிக்கிறது. குடிபள்ளம் என்னும் பெயர் நாளடைவில் மருவி குடிமல்லம் என்று மாறிவிட்டது.

புராண முக்கியத்துவம்

தந்தையின் கட்டளைப்படி, பரசுராமர் தனது தாயைக் கொன்ற பாவம் தீர இந்தத் தலத்துக்கு வந்து தவமிருந்து சிவபெருமானை வழிபட்டார். அங்குக் காணப்பட்ட அதிசயச் செடியில் தினமும் ஒரு பூ மட்டும்தான் மலரும். பரசுராமர் தினமும் அருகில் பாய்ந்தோடும் சுவர்ணமுகி ஆற்றில் நீராடி அந்த மலரைப் பறித்துக் கொண்டுவந்துதான் சிவபெருமானை வழிபடுவார். அந்த ஒற்றை மலருக்குக் காவலாக சித்திரசேனன் எனும் காவலனையும் நியமித்தார் பரசுராமர். இந்த சித்திரசேனன் சிவபெருமானின் அதிதீவிர பக்தன். ஒருநாள் பரசுராமர் வேட்டைக்குச் சென்றுவிட செடியில் பூ மலர்ந்தது. குறிப்பிட்ட நேரத்துக்குப் பரசுராமர் திரும்பி வராததால் சித்திரசேனன் அந்த மலரைப் பறித்து சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டுவிட்டான். திரும்பி வந்ததும், மலர் பறிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த பரசுராமருக்குக் கடும் கோபம் வந்தது. உடனே சித்திரசேனனைத் தாக்கினார். இதனால் இருவருக்கும் இடையே போர் ஏற்பட்டது. வெற்றி, தோல்வி இல்லாமல் பல ஆண்டுகள் இது நடைபெற்றது. கடைசியாகச் சிவபெருமான் தோன்றி இருவரையும் சமாதானப்படுத்தி தன்னுள் ஐக்கியமாக்கிக்கொண்டார். அதனால்தான் இந்தத் தலத்தில் சித்திரசேனன், பரசுராமன், லிங்கம் என்று சிவபெருமான் பரசுராமேசுவரராக அருள்புரிகிறார். இந்த திருக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆறு அடி பள்ளத்தில் கருவறை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோயிலில் அம்மன், ஆனந்தவல்லி என்று அழைக்கப்படுகிறார். தனிச் சந்நிதியில் கிழக்குப் பார்த்து அருள்பாலிக்கிறாள். அர்த்த மண்டபம், மகா மண்டபம் என்ற அமைப்புகளுடன் கோயில் எளிமையாகக் காணப்படுகிறது. பல்லவர்கள் காலத்தில் இந்தக் கோயில் கற்றளியாக மாற்றப்பட்டிருக்கிறது. இந்தக் கோயிலில் மற்றொரு விசேஷமாக அறுபது ஆண்டுகளுக்கு ஒருமுறை கருவறையில் நீர் ஊறி சிவலிங்கம் நீர்மயமாக மாறிவிடுகிறது. 2005 – ம் ஆண்டு இதுமாதிரி நடந்துள்ளது. அடுத்து 2065 – ம் ஆண்டு இதே மாதிரியான அதிசயம் நிகழும் என்று பக்தர்கள் கூறுகிறார்கள்.

நம்பிக்கைகள்

சிவபெருமான் மும்மூர்த்திகளின் அவதாரமாக அருள்புரிவதால் இந்தத் தலம் `குழந்தைப் பேறு’ வழங்கும் சந்தான பிராப்தித் தலமாகப் போற்றப்படுகிறது. இதற்குச் சாட்சியாகப் பல்வேறு தாய்மார்கள் கோயிலில் உள்ள நெல்லி மரத்தில் சிறிய தொட்டில் கட்டிச் செல்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

தொன்மைச் சிறப்பு மிக்க இந்தத் தலத்தில் சிவபெருமான் மும்மூர்த்திகளும் இணைந்த லிங்க வடிவில் காட்சியளிக்கிறார். லிங்கத்தின் அடிப்பாகத்தில் சித்திரசேனன் எனும் யட்சன் காணப்படுகிறான். இவனுக்கு `பிரம்மயட்சன்’ என்று பெயர். அவனுக்கு மேலே ஒரு கையில் பரசு மற்றும் மற்றொரு கையில் வேட்டையாடப்பட்டுத் தொங்கும் ஆட்டுக் கிடாவுடன் நின்றுகொண்டிருக்கிறார் சிவபெருமான். கையில் பரசு இருப்பதால் இவர் பரசுராமர் என்றும் அழைக்கப்படுகிறார். நின்ற உருவத்துக்கு மேலே சிவலிங்கத்தின் உருண்டையான ருத்ரபாகம் காணப்படுகிறது. பிரம்மன் யட்ச ரூபத்திலும், விஷ்ணு பரசுராம அவதார வடிவத்திலும், சிவபெருமான் லிங்க வடிவத்திலும் என்று மும்மூர்த்திகளும் ஒருசேர எழுந்தருளி அருள்புரிவது இங்கு மட்டுமே என்று சொல்லப்படுகிறது. பொதுவாக லிங்கத்துக்கு அடியில் ஆவுடையார் அமைந்திருக்கும். ஆனால், இங்கு மட்டும் சதுர வடிவிலான `அர்க்க பீடம்’ அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலின் மற்றொரு விசேஷம் இதன் கருவறையும் அரை வட்டமாகக் காட்சியளிக்கிறது. அதனால் இது `லிங்க கீர்த்தி விமானம்’ என்று அழைக்கப்படுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குடிமல்லம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

ரேணிகுண்டா

அருகிலுள்ள விமான நிலையம்

திருப்பதி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top