கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில், தூத்துக்குடி

முகவரி :
கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில்,
கட்டாரிமங்கலம்,பேய்குளம்
தூத்துக்குடி மாவட்டம் – 628613.
இறைவன்:
சங்கரலிங்க சுவாமி
இறைவி:
கோமதி அம்பாள்
அறிமுகம்:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகில் உள்ளது பேய்குளம் கிராமம். நடராஜரின் பஞ்ச விக்ரக தலங்களில் ஒரு தலமான கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில் (அழகிய கூத்தர் கோவில்) உள்ளது.
நாங்குநேரியில் இருந்து சாத்தான்குளம் செல்லும் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் பேய்குளம் உள்ளது. திருநெல்வேலி, சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், நாசரேத் பகுதியில் இருந்து பல் வசதி உண்டு.
புராண முக்கியத்துவம் :
நடராஜரின் பஞ்ச விக்ரக தலங்களில் ஒரு தலமான கட்டாரிமங்கலம் நடராஜர் கோவில் (அழகிய கூத்தர் கோவில்) உள்ளது. இந்தக் கோவிலைக் கட்டிய வீர பாண்டியன் என்ற மன்னன், ஆலயத்தை கட்டி முடித்ததும் கொடிமரம் நடுவதற்காக யாகம் ஒன்றை செய்தான். அப்போது வேதவிற்பன்னர்கள், ஐந்து தேவதைகளை அழைத்து கொடிமரத்தில் அமர வைத்தனர். ஊர்மக்கள் கூடி கொடிமரத்தை கோவிலுக்கு கொண்டு வந்தனர். அப்போது ‘எங்கள் ஊருக்கு காவல் தெய்வமாக இந்த தேவதைகளும் இடம்பெற வேண்டும்’ என்று பக்கத்து ஊர் மக்கள் கேட்டுக்கொண்டனர். அதோடு அவர்கள் அந்த தேவதைகளை அழைத்துப் போய் தங்கள் ஊர்களில் காவல் தெய்வமாக குடி வைத்துக்கொண்டார்களாம்.
கட்டாரிமங்கலம், அம்பலச்சேரி, புளியங்குளம், கருங்கடல், பேய்குளம் ஆகிய ஐந்து கிராமங்களில்தான் அந்த தேவதைகள் குடிபுகுந்தன. பேய்குளம் தேவதை குடிகொண்ட இடமாக மாறிய காரணத்தினால் இவ்வூர் காடு அழிந்து நகரமாக மாறிவிட்டது.
திருச்செந்தூர் சென்று வழிபடும் பக்தர்கள், அக்காலங்களில் பாத யாத்திரையாக செல்வார்கள். எனவே அவர்கள் தங்குவதற்காக வழி நெடுகிலும் அன்னதான சத்திரங்கள் அமைத்தனர். பொதிகை மலை அடிவாரத்தில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாத யாத்திரீகர்கள் தங்குவதற்காக பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாக மார்த்தாண்டன் என்ற ஒரு சிவ பக்தர் இந்தப் பகுதியில் ஒரு மடம் அமைத்தார். அந்த மடத்தில் சில பசுக்களையும் பராமரித்து வந்தனர்.
அதனால் இந்த மடம் ‘பசு மடம்’ என்று அழைக்கப்பட்டது. பின்னாளில் இங்கு வந்து தங்கிய சிவனடியார்களில் ஒருவர் இங்கு சிவபூஜை செய்து வந்தார். ஆண்டுதோறும் ஆடித் தபசு காட்சியை காண சங்கரன்கோவில் சென்று வருவார். வயதான காரணத்தினால் அவரால் சங்கரன் கோவில் செல்ல இயலவில்லை. அதனால் மிகுந்த வருத்தத்தில் சங்கரலிங்க சுவாமியையும், கோமதி அம்மாளையும் நினைத்து சிவசிந்தனையில் அமர்ந்து தியானம் செய்தார்.
அதன் பலனாக சங்கரன்கோவிலில் நடந்த தவசுக் காட்சியானது இவ்வூரில் இருந்த அவருக்கு தெரிந்தது. இதனால் ஆனந்தம் அடைந்தார். ‘தென்னகத்தில் இறைவன் தபசு காட்சி தந்த இந்த இடம் அல்லவா சின்ன சங்கரன்கோவில்’ என்று எண்ணினார். இறைவனிடம் ‘தனக்கு காட்சி தந்தது போலவே, இங்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் காட்சி தரவேண்டும்’ என்று கோரினார். இறைவனும் ‘அவ்வாறே ஆகட்டும்’ எனக் கூறி மறைந்தார்.
இதையடுத்து அந்த சிவனடியார், இங்கு சுவாமி மற்றும் அம்பாளை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம் தோறும் இங்கும் ஆடி தபசு காட்சி மிகச்சிறப்பாக நடைபெற வழி ஏற்படுத்தினார். சங்கரன்கோயில் சென்று தபசுக் காட்சி காண முடியாத பக்தர்கள். இங்கேயே ஆடித் தபசு காட்சியை கண்டு மகிழ்ந்தனர்.
அதன்பின் இந்த ஆலயத்தை வழிபட்ட சில பக்தர்கள். காசி விஸ்வநாதரைப் போன்று சிறிய லிங்கத்தையும் சிவஆகம விதிப்படி இங்கே பிரதிஷ்டை செய்தனர். ஆலயத்தையும் சிறப்பான முறையில் அமைத்து கருவறையில் கிழக்கு நோக்கி சங்கரலிங்க சுவாமியையும், அர்த்த மண்டபத்தில் தெற்கு நோக்கி கோமதி அம்பாளையும் அமைத்தனர். இந்த மண்டபத்தில் நடராஜப் பெருமான், சிவகாமி அம்பாள், ஐம்பொன்னால் ஆன மாணிக்கவாசகர், அதிகார நந்தி உள்ளது. முதல் பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரர், துர்க்கை அம்மன் மற்றும் பைரவர் போன்ற பரிகார தேவதைகளும் உள்ளனர். ஆலய பிரகாரத்தில் வேம்பு உள்ளது. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனடியில் புற்று மற்றும் சாஸ்தா சன்னிதி இருக்கிறது. இவ்விடத்தில் நாகங்களுக்கு பால் – பழம் படைப்பதால் நாகதோஷம் விலகும் என்பது நம்பிக்கை. இத்திருக்கோவிலின் தல விருட்சம், வில்வ மரம் ஆகும்.
https://www.dailythanthi.com/devotional/aalaya-varalaru/kattarimangalam-natarajar-temple-1149618



காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கட்டாரிமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தூத்துக்குடி
அருகிலுள்ள விமான நிலையம்
தூத்துக்குடி