கடுவெளி பரமநாதர் திருக்கோவில் (சித்தர் ஜீவசமாதி), திருவாரூர்

முகவரி :
கடுவெளி பரமநாதர் திருக்கோவில் (சித்தர் ஜீவசமாதி),
எடையூர்-சங்கேந்தி, திருத்துறைப்பூண்டி தாலுகா,
திருவாரூர் மாவட்டம் – 614701.
9600973323
இறைவன்:
பரமானந்தர், பரமநாதசுவாமி
இறைவி:
வாலாம்பிகை, வாலைக்குமரி
அறிமுகம்:
கடுவெளி சித்தர் ஜீவசமாதி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் எடையூர்-சங்கேந்தி கடைத்தெருவில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பட்டுக்கோட்டையில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் பஸ்கள் மற்றும் திருத்துறைப்பூண்டியில் இருந்து பட்டுக்கோட்டை செல்லும் பஸ்கள் 15 நிமிடத்திற்கு ஒரு முறை வந்து செல்கிறது. இங்கு கடுவெளி சித்தர் ஜீவசமாதி உள்ளது. ஆலயம் அமைந்துள்ள ஊர் கடுவெளி. சித்தர் உறைந்ததும் இங்கேதான். அதன் அருகில் உள்ள ஊர் சித்தாலத்தூர். அதாவது கடுவெளி சித்தர் அடக்கமானதால், கடுவெளி சித்தர் ஆலத்தூர் என்பது மருவி கடுவெளி சித்தராலத்தூர் என அழைக்கப்பட்டது.
புராண முக்கியத்துவம் :
சிவபெருமானின் அருளைப் பெற்றவர்களும், அந்த இறைவனின் சித்தப்படி நடப்பவர்களுமே சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். இதனாலேயே ‘சித்தன் போக்கு சிவன் போக்கு’ என்ற சொல் வழக்கு வந்தது. மனிதர்களின் பிறப்பை உணர்ந்து இறைவனுடன் இணையச் செய்வதற்காகவே அவதரித்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் பிறந்த இடமும், அவர்கள் உலாவிய இடமும், சித்தர்கள் சமாதி அடைந்த இடமும், சித்தர்கள் அருளாசி கிட்டும் இடமும் சித்தர் பீடமாக இன்றும் வணங்கப்பட்டு வருகின்றன.
அப்படிப்பட்ட சித்தர்களில் ஒருவர்தான் கடுவெளி சித்தர். இவர் திருஇரும்பை மாகாளத்தில் (திண்டிவனம்) பிறந்து, வாழ்ந்துள்ளார். பின்னர் தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகில் உள்ள கடுவெளியில் சில காலம் தங்கியுள்ளார். பின்னர் காஞ்சீபுரம் சென்று அங்கிருந்து கடுவெளியில் ஒளிவடிவான பரம்பொருளை தேடி வந்து சித்தாடல் புரிந்து 35 பாடல்களை இயற்றி உள்ளார்.
பாமரர்களிடம் பிரபலமானது, இவரது நந்தவனத்தில் ஓர் ஆண்டி பாடல். இதைப் பாடியவர் பெயர் அதிகம் பெயருக்குத் தெரியாது. அவர் தான் கடுவெளிச் சித்தர்.
சித்தாலத்தூர் கிராமத்தில் விவசாயம் பார்க்கும் குடியில் பிறந்து வளர்ந்து வந்தவர் கடுவெளியார்.
கடுவெளி சித்தர் சிவன் மீது கொண்ட அளவிலாத அன்பு காரணமாக வேதாரணியம் திருமறைக்காடரை நித்தம் மனதில் வேண்டி பூஜை செய்து வந்தார் சில முறை வேதாரணியம் சென்று வழிபாடு செய்து வந்தார், அவர் வெட்ட வெளியில் மாடுகளை மேய்த்து வரும் நாட்களில் ஒரு திடலில் இருந்த ஸ்ரீ பரம நாதர் சிவ லிங்க திருமேனி ஸ்ரீ வாலாம்பிகை அம்மனையும் பூஜித்தும் வந்தார்.
கடுவெளி சித்தர் இத்தலத்து பரமநாதசுவாமி ஆன சிவபெருமானை துதித்து உள்ளமுருக பாடியபோது, அவருடைய பக்தியை கண்டு மகிழ்ந்த சிவபெருமான், தம்முடைய பேரன்பை வெளிப்படுத்தும் வண்ணம் கடுவெளியில் உள்ள சிவலிங்கத்தை இரண்டாக பிளக்க வைத்தார். சிவலிங்கம் பிளவுபட்டு அதிலிருந்து சிவபெருமான் வெளிப்பட்டார்.
வெட்டவெளியில் அமர்ந்து நமசிவாய மந்திரத்தை ஜெபித்தபோது பரமநாதசுவாமி ஆன சிவபெருமான் வெளிப்பட்டு பரமானந்தத்தைக் காட்டியமையால் இத்தலத்தின் சிவபெருமானைப் பரமானந்தர் – பரமநாதசுவாமி என்று அழைத்தனர். சித்த புருஷர்கள் யாவரும் சிவனோடு உறைகின்ற தேவியை சக்தி கொடுப்பதற்காக வணங்கி வந்தனர். ஆனால் கடுவெளிச் சித்தர் அம்பிகையை வாலைக்குமரியாகவே வணங்கினார். இதனால் பரமானந்த ஈஸ்வரன் உறையும் தேவிக்கும் வாலாம்பிகை என்ற திருநாமம் ஏற்பட்டது.
‘நந்தவனத்திலோர் ஆண்டி-அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி- அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி’ -என்ற பிரபலமான பாடலை இயற்றியவர் இந்த கடுவெளி சித்தர் தான்.
பறக்கும் ஆற்றல் பெற்றவர் மறையும் ஆற்றல் பெற்றவர்,தனது சக்தியால் அவர் திருவையாறு பாண்டிச்சேரி காஞ்சிபுரம் மதுரை போன்ற பல இடங்களுக்கு சென்று வந்தார்,இவர் ஜீவசமாதி அவர் சித்தி பெற்ற அரச மரத்தடியில் உள்ள விநாயகர் கோவில் முன் உள்ளது .
நம்பிக்கைகள்:
இங்கு வெட்டவெளியாக, கடுவெளியாக சித்தர் அருள் நிலவுவதால் நீண்ட காலங்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கடுவெளி சித்தரை வணங்கினால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
சிறப்பு அம்சங்கள்:
கடுவெளி சிவபெருமானை வணங்கினால், ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்படும் தோஷங்கள் யாவும் நீங்கும். மேலும் கடுவெளியில் மோட்ச தீபம் ஏற்றி நமது முன்னோர்களை நினைத்து கடுவெளி சித்தரையும், பரமநாதரையும் வணங்கினால் முற்பிறப்பு பாவங்களும், பித்ரு சாபங்களும் நீங்கி வாழ்க்கை வளமாகும்.
திருவிழாக்கள்:
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளன்று கடுவெளி சித்தருக்கு யாகம் வளர்த்து அபிஷேகம் செய்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீப ஆராதனை செய்யப்படும். ஆண்டுதோறும் சித்ராபவுர்ணமி அன்று திருவிழா நடத்தப்படுகிறது.







காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடுவெளி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி