கடலங்குடி திருமூலநாதர் சுவாமி கோவில், மயிலாடுதுறை
முகவரி :
கடலங்குடி திருமூலநாதர் சுவாமி கோவில், மயிலாடுதுறை
கடலங்குடி,
மயிலாடுதுறை மாவட்டம், தமிழ்நாடு
Ph: +91 85249 23740, +91 96888 83382
இறைவன்:
திருமூலநாத சுவாமி
இறைவி
சௌந்தரநாயகி
அறிமுகம்:
சௌந்தரநாயகி கும்பகோணம் – சீர்காழி பேருந்து தடத்தில் திருப்பனந்தாள் மற்றும் பந்தநல்லூர் வழியாக செல்லும் பேருந்தில் ஏறி, கடலங்குடி என்ற ஊரில் இறங்கினால் அருகிலேயே ஆலயம் உள்ளது.ஆலயம் காலை 7 மணி முதல் 12 மணி வரையும் மாலை 4 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் திறந்திருக்கும்.
புராண முக்கியத்துவம் :
தட்சன் மிகப் பெரிய வேள்வி ஒன்று செய்தான். ஆனால் அந்த வேள்விக்கு சிவபெருமானை அழைக்கவில்லை. அக்னி பகவான் அந்த வேள்வியில் கலந்து கொண்ட தால் சிவபெருமானின் சீற்றத்திற்கு ஆளாகி உடல் முழுவதும் ரோகம் பெற்றான். பின் இத்தலத்திற்கு வந்த அக்னிபகவான் இங்குள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி, திருமூலநாதரையும், சவுந்திர நாயகியையும் வழிபட்டு ரோகம் நீங்கி அழகிய திருமேனி பெற்றான். இதுவே இத்தலத்தின் வரலாறு.
நம்பிக்கைகள்:
உடல் எனப்படும் மேனியில் பிணியுடையோர் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படும் இக்கோவிலின் திருக்குளத்தில் நீராடி திருமேனியழகரையும் அன்னை சவுந்திர நாயகியையும் வழிபட்டால் பிணி தீர்ந்து, அழகிய திருமேனியை அடைவர்.
சிறப்பு அம்சங்கள்:
மண்ணியாற்றுக்கு வடக்கேயும், கொள்ளிடம் நதிக்கு தெற்கேயும் இத்தலம் அமைந்திருப்பதால், நீர் வளத்திற்குப் பஞ்சமின்றி எங்கு நோக்கினும் பசுமையாக காட்சியளிக்கிறது இந்தக் கிராமம். அந்தப் பசுமைச் சூழலில்தான் இறைவனும் இறைவியும் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர். இத்தலத்துக்கு கிழக்கே திருப்புன்கூர், வைத்தீஸ்வரன் கோவில், மேற்கே பந்தனைநல்லூர், திருச்சிற்றம்பலம், வடக்கே விளத்தொட்டி ஆகிய தலங்கள் உள்ளன.கோவில் ஊருக்கு நடுவே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலின் எதிரே திருக்குளமும் ஆலய வாசலில் வளைவு மட்டுமே உள்ளது. உள்ளே நுழைந்தவுடன் கொடிமர விநாயகர், கொடிமர பீடம் பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன.
அடுத்து அழகிய கோபுரம். தெற்குப் பிரகாரத்தில் தல விநாயகர், தட்சிணாமூர்த்தி தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்க, மேற்குப் பிரகாரத்தில் திருமாளிகைப் பகுதியில் சுப்பிரமணியர், காசி விசுவநாதர், பெருமாள், மகாலட்சுமி, சரஸ்வதி ஆகியோர் திருமேனிகள் உள்ளன. கருவறையின் தெவக்கோட்டத்தில் நடன கணபதியையும், தட்சிணாமூர்த்தியையும் தரிசிக்கலாம். கோட்டத்தின் மேற்குப் பகுதியில் லிங்கோத்பவரையும் வடக்கு பகுதியில் பிரம்மா, துர்க்கை ஆகியோரையும் தரிசிக்கலாம். வடக்குப் பிரகாரத்தில் சண்டீசர் சன்னிதியும் உள்ளது.கோவிலின் உள்ளே நுழையும் போது வாசலின் தென்பால் விநாயகரும், வடபால் சுப்பிரமணியரும் உள்ளனர். உட்கோவில் மண்டபத்தில் தெற்கு நோக்கி சவுந்தரநாயகி சன்னிதியும், நடராஜர் சன்னிதியும் உள்ளன. சூரியன், பைரவர், நால்வர் திருமேனிகளும் உள்ளன.
கருவறை சதுரமாக அமைந்துள்ளது. மூலவர் திருமூலநாதர் சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். திருமூலநாதருக்கு திருமேனியழகர் என்ற பெயரும் உண்டு. இந்த சிவலிங்கம் மிக அழகானது. ருத்ர பாகமான பாணம் உயர்ந்துள்ளது. விஷ்ணுபாகமான ஆவுடையார் அகன்றுள்ளது. பிரம்ம பாகமான பீடம் சதுரமாக உள்ளது. இவ்வளவு அழகான திருமேனி உடைய இறைவனுக்கு திருமேனியழகர் என்ற பெயர் மிகவும் பொருத்தமே.அழகருக்கேற்ற அழகியாக, சவுந்திர நாயகியாக அன்னை அருள்பாலிக்கிறாள். அங்க மாலையும், அலர்ந்த பூவும் மேற் கரங்களில் அழகு செய்ய கீழ் கரங்கள் அபய வரத முத்திரை காட்ட, நின்ற கோலத்தில் சாந்தம் தவழும் முகத்துடன் நான்கு கரங்களுடன் அன்னை காட்சி தருகிறாள்.
திருவிழாக்கள்:
தினமும் இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. தவிர விநாயகர் சதுர்த்தி, ஆண்டுக்கு ஆறுமுறை நடராஜருக்கு நீராட்டு விழாக்கள், ஆடிப்பூரம், ஐப்பசி அன்னாபிஷேகம், கந்த சஷ்டி சூரசம்ஹாரம், திருக்கல்யாணம், கார்த்திகை மாத சோம வாரங்கள், திருக்கார்த்திகை, மார்கழி மாத தின பூஜை, திருவாதிரை, பொங்கல், நவராத்திரி, விஜயதசமி, நால்வர் திரு நட்சத்திரங்கள் ஆகிய நாட்களில் சிறப்பு பூஜையும், பங்குனி உத்திரத்தன்று ஏகதின உற்சவமும் நடைபெறுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடலங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி