ஒத்தக்கால் மண்டபம் புற்றிடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்
முகவரி :
அருள்மிகு புற்றிடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில்,
கோவை–பொள்ளாச்சி தேசிய நெடுங்சாலை,
ஒத்தக்கால் மண்டபம்,
கோயம்புத்தூர் மாவட்டம் – 641032
போன்: +91 98422 03577
இறைவன்:
புற்றிடங்கொண்டீஸ்வரர்
இறைவி:
பூங்கோதையம்மன்
அறிமுகம்:
கோவை அருகே ஒத்தக்கால் மண்டபத்தில் அமைந்துள்ள புற்றிடங்கொண்டீஸ்வரர் திருத்தலம். பரபரப்பான சாலையோரத்தில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இந்த திருத்தலம் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
கோவையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஒத்தக்கால் மண்டபம். கோவை காந்திபுரத்தில் இருந்து ஒத்தக்கால்மண்டபம் செல்ல ஏராளமான டவுன் பஸ்கள் உண்டு.
புராண முக்கியத்துவம் :
கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்த சோழர்களில் ஒருவன், இந்தப் பகுதியில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தான். திருவாரூரில் எழுந்தருளிய புற்றிடங்கொண்டீசுவரரின் திருநாமத்தையே இங்குள்ள இறைவனுக்கும் அவன் சூட்டி வழிபட்டதாக தெரிகிறது. அம்பிகையும் அன்றைய காலத்திலேயே பிரதிஷ்டை செய்யப்பட்டது. காலவெள்ளத்தில் கோவில் சிதலமடைந்து விட்டது. அதை தொடர்ந்து இங்குள்ள சிவனடியார்கள் ஒன்று சேர்ந்து நிறைநிலை வழிபாட்டு மன்றம் ஒன்றை ஏற்படுத்தி கோவில் திருப்பணியில் ஈடுபட்டனர். ஐந்து மாடங்கள் கொண்ட கோபுரம், கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரம், விநாயகர், சுப்பிரமணியர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமைத்து, கடந்த 5.4.1995-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
நம்பிக்கைகள்:
இங்கு வேண்டுதல் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் இறைவனுக்கு வைக்கும் கோரிக்கைகளை தினமும் நடக்கும் வேள்வி பூஜையில் வாசிக்கப்பட்டு, நிவர்த்தி காண படுகிறது.
சிறப்பு அம்சங்கள்:
தமிழ்முறைப்படி பூஜைகள் : பொதுவாக மற்ற திருத்தலங்களில் சாமிக்கு அர்ச்சனை செய்யும் போது சமஸ்கிருத மொழியில் மந்திரங்களை அர்ச்சர்கள் கூறுவார்கள். ஆனால் இந்த திருத்தலத்தில் தமிழ்முறைப்படி தான் பூஜைகள் நடைபெறுகின்றன. தமிழிலேயே தான் திருவாசகம், சிவபுராணம், தேவார பாடல்கள் பாடப்பட்டு புற்றிடங்கொண்டீசுவரருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடத்தப்படுகிறது. பக்தர்கள் அர்ச்சனை செய்ய வரும் போது, தமிழிலேயே செய்யப்படுகிறது. மற்ற சன்னிதிகளிலும் தமிழ் முறைப்படி தான் பூஜைகள் நடக்கின்றன.
ஆலய அமைப்பு: ‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்று கூறுவார்கள். தூரத்தில் இருந்து வரும் போதே இந்த ஆலயத்தில் முன்கோபுரம் மற்றும் மூலஸ்தான கோபுரங்களை தரிசிக்கலாம். கோவில் உள்ளே நுழைந்தவுடனேயே நம் கண்ணில் தென்படும் புற்றிடங்கொண்டிடீஸ்வரரை தரிசனம் செய்யலாம். ஆனாலும் நாம் அதற்கு முன்பாக உள்ள கொடி மரம், பலிபீடம் போன்றவற்றை தரிசிக்க வேண்டும்.
பின்னர் தெற்குப்புறமாக பிரகாரத்தை வலம் வர வேண்டும். அங்கே கன்னி மூலையில் விநாயகப்பெருமான் வீற்றிருக்கிறார். அவரை வணங்கி விட்டு நகர்ந்தால் வடமேற்கு மூலையில் சுப்பிரமணியர் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். 6 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். சுப்பிரமணியருக்கு அருகிலேயே பைரவர் வீற்றிருக்கிறார். பின்னர் கருவறைக்குள் செல்லும் முன்பாக, வழியில் உள்ள நந்தியம்பெருமானை தரிசித்து, இறைவனைக் காண்பதற்கு உள்ளே செல்ல அனுமதி கேட்க வேண்டும். அதன் பிறகே கருவறையில் வீற்றிருக்கும் மூலவரான புற்றிடங்கொண்டீஸ்வரை தரிசிக்க வேண்டும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு செய்த திருப்பணியின் காரணமாக, கருவறை சற்று உயரமாக அமைந்துள்ளது. அதன் உள்ளே லிங்கத் திருமேனியராக, இறைவன் புற்றிடங்கொண்டீஸ்வரர் வீற்றிருக்கிறார். அவர் மீது ஆதிசேஷன், குடை போன்று எழுந்தருளியுள்ளார். மூலவருக்கு வலதுபுறம் இறைவனைப் போற்றித் தொழுது அருள்பெற்ற 63 நாயன்மார்கள் எழுந்தருளி இருக்கிறார்கள். இவர்களை வணங்கினாலே இறைவனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும். மூலவர் சன்னிதிக்கு தென்புறத்தில் தட்சிணாமூர்த்தியும், மேற்கில் அண்ணாமலையாரும், வடக்கே பிரம்மாவும், துர்க்கை தேவியும் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள்.
மூலவரை வணங்கியவாறே தனிச் சன்னிதியில் எழுந்தருளியிருக்கிறார் சண்டிகேசுவரர். சுவாமிக்கு இடதுபுறம் அகிலத்தை ரட்சிக்கும் அன்னை பராசக்தி, ‘பூங்கோதை நாயகி’ என்ற திருநாமத்துடன் இந்த ஆலயத்தில் எழுந்தருளியுள்ளார். நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கிய வண்ணம் நின்ற திருக்கோலத்தில் வீற்றிருக்கிறார் அன்னை. அவளது இரு திருக்கரங்களில் தாமரை ஏந்தியபடியும், மற்ற இரு கரங்களில் அபய ஹஸ்த முத்திரையுடனும் காட்சி தருகிறார். அம்மன் சன்னிதிக்கு தெற்கே இச்சா சக்தியும், மேற்கே கிரியா சக்தியும், வடக்கே ஞானசக்தியும் எழுந்தருளி உள்ளனர். அவரை தரிசித்து விட்டு நகர்ந்தால், நடராஜர்-சிவகாமி அம்மாள் சன்னிதி உள்ளது. ஆடல்வல்லானாகிய நடராஜர், இங்கு ஆனந்த தாண்டேசுவரராக இருந்து அருள்பாலிக்கிறார்.
1008 மலர் போற்றி வழிபாடு: இந்த திருத்தலத்தில் உள்ள யாக சாலை மண்டபத்தில், தினமும் மாலை 3 மணிக்கு, 2 கலசங்களில் சுவாமியையும், அம்மனையும் எழுந்தருள செய்து சிறப்பு வேள்வி பூஜை நடக்கிறது. அதைத் தொடர்ந்து அந்த கலசங் களில் உள்ள புனித நீரை கொண்டு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக பூஜை நடக்கிறது. பின்னர் உற்சவ மூர்த்திகள் இருவரும் கோவிலின் மகா மண்டபத்தில் தென்மேற்கு புறத்தில் உள்ள ஊஞ்சலில் எழுந்தருளுகின்றனர். அதைத் தொடர்ந்து 1008 மலர்களை கொண்டு உற்சவ மூர்த்திக்கு தமிழ்மொழியில் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். மேலும் இந்த திருத்தலத்தில் 60 வயது, 70 வயது, 80 வயது பூர்த்தியானவர்களுக்கு சிறப்பு பூஜை நிகழ்ச்சிகளும் நடக்கிறது.
திருவிழாக்கள்:
இந்தக் கோவிலில் சித்திரை மாதம் திருத்தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. சித்ரா பவுர்ணமி அன்று திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. தெப்பத் தேர்த் திருவிழாவும் நடக்கிறது. தெப்ப உற்சவம் நடைபெறுவதற்காக, கோவிலுக்கு எதிரே சாலையைக் கடந்து புதிதாக தெப்பக்குளம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, மார்கழி திருவாதிரை, ஆனி திருமஞ்சனம், கிருத்திகை, பவுர்ணமி ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக கோவில் நடை திறந்தே இருக்கும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஒத்தக்கால்மண்டபம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கோயம்பத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்