ஏரிவாய் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி
ஏரிவாய் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை அஞ்சல், வாலாஜாபாத் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் – 631601.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் இறைவி: ஸ்ரீ கமலவல்லி தாயார்
அறிமுகம்
வாலாஜாபாத்-காஞ்சி சாலையில் ஐயன் பேட்டை கிராமத்திலிருந்து சுமார் ஒரு கிமீ தூரத்தில் அமைந்துள்ள ஏரிவாய் கிராமம். காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள ஏரிவாய் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கமலவல்லி தாயார் சமேத ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் கோவிலின் நிலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. பச்சை பசேல் என காட்சியளிக்கும் வயல்களின் நடுவே இடிபாடுகளுடன் கூடிய நிலையில் திருக்கோயில். சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை தெளிவுபடுத்தும் ஒத்தயடிப்பாதை வழியாக பயணித்தால், நம்மை . வரவேற்பது இடிந்திருக்கும் முன்வாயில். அதையும் தாண்டி பயணித்தால், தமிழகத்தில் உள்ள கவனிப்பாரற்று கிடக்கும் பல கிராமத்து கோயில்களின் நிலை தான் இங்கும். — முற்றிலும் இடிந்து விழுந்த மதில் சுவர்கள், பரவிக்கிடக்கும் காட்டு முள் செடிகள். உள்ளே நுழைந்தால், சுமார் 300 சதுர அடியில் ஒரு முன் மண்டபம். அதன் பின் சிறிய அர்த்த மண்டபம், பின் கருவறை. கருங்கற்களால் அமைக்கப்பட்ட மேற்கூரை. அதை துளைத்துக்கொண்டு ஆலம் விழுதுகள் கோயிலின் உள்ளே இறங்கியுள்ளன. ஜெய விஜய துவாரபாலகர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஆலம் விழுதுகள் இருபுறமும் கருங்கல் சுவற்றை ஒட்டி தரையில் நன்கு ஊன்றியுள்ளன. நல்ல வேளையாக கருவறையிலும், அர்தமண்டபத்திலும் பெருமாள் திருவருளால் அதுபோன்ற சேதம் எதுவுமில்லை.
புராண முக்கியத்துவம்
உள்ளே நின்ற கோலத்தில் திருக்காட்சி அளிக்கும் ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள். அவரின் வலப்புறத்திலே வீற்றிருக்கும் ஸ்ரீ கமலவல்லி தாயார். கண் கொள்ளா திருக் காட்சி. திருமேனிகள் அவ்வளவு அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன. திருச்சி உறையூரில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஸ்ரீ அழகிய மணவாளப்பெருமாள் போலவே இந்த திருமேனியும் இருப்பதாக உள்ளூர்க்காரர்கள் பலர் தெரிவித்தனர். அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இத் திருக்கோயில் வருவதாக அறிகிறோம். ஆனால் எவ்வித நித்ய பூஜையோ அல்லது பராமரிப்புக்கோ அவர்கள் மூலமாக எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை. ஏரிவாய் கிராம மக்களின் முயற்சியால் தற்போது அந்த கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் எனும் கல்லூரி மாணவன் மூலம் கோயிலில் இரு வேளை விளக்கேற்றி பூஜை நடக்கிறது. கோயிலின் மேற்கூரையில் நன்கு வளர்ந்த ஓர் ஆலமரம். அதன் விழுதுகள் கருவறையின் வெளிச்சுவர்களில் நன்கு பரவியிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன் கிராம மக்கள் தங்கள் முயற்சியால் அந்த மரத்தை முடிந்த அளவிற்கு வெட்டி கோயிலை ஓரளவிற்கு பாதுகாத்துள்ளனர். “அண்ணாமலையார் அறப்பணிக்குழு பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஏரிவாய்
அருகிலுள்ள இரயில் நிலையம்
வாலாஜாபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை