ஊராட்சிக்கோட்டை வேதகிரீஸ்வரர் திருக்கோயில், ஈரோடு
முகவரி :
ஊராட்சிக்கோட்டை வேதகிரீஸ்வரர் திருக்கோயில்,
ஊராட்சிக்கோட்டை, வேதகிரி மலை,
ஈரோடு மாவட்டம் – 638301.
இறைவன்:
வேதகிரீஸ்வரர்
இறைவி:
வேதநாயகி
அறிமுகம்:
ஈரோடு மாவட்டம் பவானி நகருக்கு அருகே ஊராட்சிக்கோட்டை என்ற சிற்றூரில் அமைந்துள்ளது வேதகிரி எனும் மலை. பஞ்சகிரி என்று போற்றப்படும் ஐந்து மலைகளில் முதன்மையான மலை இது. காவிரி ஆற்றுக்கு மேற்குப் புறமாக உயர்ந்தோங்கி நிற்கும் இந்த மலையில் சிறப்புமிக்க சைவ வைணவக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு கோயில் கொண்டுள்ள சிவபெருமான் வேதகிரீஸ்வரர் என்றும் அம்பாள் வேதநாயகி என்றும் அழைக்கப்படுகிறார்கள். ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து 5 கி.மீ தொலைவில் பேருந்து பாதையின் அருகில் இக்கோயில் உள்ளது. பவானி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சிக்கோட்டைக்கு பேருந்து வசதி உள்ளது.
புராண முக்கியத்துவம் :
தேவேந்திரன் இந்த தேவ கிரியை வலம் வந்து வேதகிரீஸ்வரர் வணங்கி தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கி கொண்டதாக தல வரலாறு சொல்கிறது.
இம்மலை கோயில் அமைந்திருக்கும் இடம் ஒரு காலத்தில் சங்கரலிங்கம் என்ற சிற்றரசன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஸ்ரீரங்கநாதனின் மேல் பக்தி கொண்டிருந்த மன்னன் அவரை தரிசிக்க ஆண்டிற்கு இரண்டு முறை குடும்பத்தோடு ஸ்ரீரங்கம் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவரது மகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அதற்கு பார்க்காத வைத்தியமில்லை மகளின் வயிற்று வலியை குணப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒருநாள் விடியற்காலையில் மன்னன் கனவு ஒன்று கண்டால். அதில் அரங்கநாதர் தோன்றி உன் கோட்டை அமைந்திருக்கும் வேதகிரி மலைமேல் ஒரு நீருற்று உள்ளது. தொடர்ந்து ஒன்பது தினங்கள் அதிகாலையில் அந்த நீரை அருந்தி வர நோய்கள் குணமாகும். இனிமேல் என்னை நீ இங்கே வந்து சேவிக்க வேண்டியதில்லை. இருக்கும் இடத்திலேயே எனக்கு கோயில் அமைத்து வழிபடலாம் என்று கூறினான்.
மன்னன் அதன்படியே செய்தான். மகளின் வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் நீங்கியது. பின்னர் அந்த அதிசய நீரூற்று சுரக்கும் நீரை அருந்தி பயனடைய சங்கரலிங்கம் ஏற்பாடுகளை செய்தான். இன்றும் இந்த நீரூற்றை மலை உச்சியில் நாம் காணலாம். பலர் இதில் பயனடைய சங்கரலிங்கம் ஏற்பாடுகளை செய்தார். இந்த நீர் ஊற்றை ”நந்திப்பாளி” என்றும் ”பொழுது கானா சுனை’ எனவும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இச்சுனை நீரில் சூரிய ஒளி படுவது இல்லை. இது குளிர்பதனப் பெட்டியில் வைத்து இருக்கும் நீரைப் போன்ற மிக மிக குளிர்ச்சியாக இருக்கிறது. சகல நோய்களையும் நீக்க வல்லது. அதன் அருகிலேயே 1867இல் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றையும் காணலாம்.
நம்பிக்கைகள்:
நம் வேண்டுதல்கள் எதுவானாலும் அதை நிறைவேற்றி வைக்கும் பெரும் வரப்பிரசாதமாக வேதகிரீஸ்வரர் விளங்குகிறார்.
சிறப்பு அம்சங்கள்:
சுனை அமைந்திருக்கும் இடத்தில் இருந்த பதினெட்டு படிகள் ஏறினால் வலப்புறம் வேத விநாயகர் திருக்கோயில் உள்ளது. விநாயகரை வணங்கி பின் மேலே சென்றால் வேதகிரீஸ்வரர் கோயிலை அடையலாம். இது தோரண வாயிலில் இருபுறமும் யாளி சிற்பங்கள் நம்மை வரவேற்கின்றன. 10 தூண்களால் அமைக்கப்பெற்ற முன்மண்டபத்தின் விதானத்தை அழகிய சுதை வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மண்டபத்தின் மையத்தில் வேதகிரீஸ்வரர், கல்யாண சுப்பிரமணியர், வேதநாயகி சந்நிதிகள் கிழக்கு முகமாக உள்ளன. சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் சோமஸ்கந்தர் கல்யாண சுப்பிரமணியர் எழுந்தருளி உள்ளது சிறப்பு. மண்டபத்தில் வடகிழக்கு பகுதியில் நவகிரகங்களும் வடமேற்கு பகுதியில் பைரவரும் வேதகிரீஸ்வரர் இடப்புறமாக சண்டிகேஸ்வரர் மனைவியருடன் அம்பாள் சன்னதியின் தென்மேற்கு மூலையில் மங்கள விநாயகர் தரிசனம் கிடைக்கிறது.
திருவிழாக்கள்:
வேதகிரி மலைக்கோயிலில் தினசரி மூன்று கால பூஜைகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு தமிழ் மாத முதல் தேதியன்று வேத நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள். சனிக்கிழமை தோறும் விசேஷ அலங்காரங்கள், தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு வழிபாடு, அமாவாசை மற்றும் பிரதோஷ பூஜைகள், பவுர்ணமி தோறும் கிரிவலம் ஆகியவை இங்கு வெகுசிறப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை மகா தீபம், மாசியில் மகா சிவராத்திரி, பங்குனி உத்திர திருவிழா ஆகியவை விசேஷமாக நடக்கின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஊராட்சிக்கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஈரோடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்