ஊராட்சிக்கோட்டை வரதராஜப்பெருமாள் திருக்கோயில், ஈரோடு
முகவரி :
ஊராட்சிக்கோட்டை வரதராஜப்பெருமாள் திருக்கோயில்,
ஊராட்சிக்கோட்டை, வேதகிரி மலை,
ஈரோடு மாவட்டம் – 638301.
இறைவன்:
வரதராஜப்பெருமாள்
இறைவி:
ஸ்ரீதேவி, பூதேவி
அறிமுகம்:
ஈரோடு மாவட்டம் பவானி நகருக்கு அருகே ஊராட்சிக்கோட்டை என்ற சிற்றூரில் அமைந்துள்ளது வேதகிரி எனும் மலை. பஞ்சகிரி என்று போற்றப்படும் ஐந்து மலைகளில் முதன்மையான மலை இது. காவிரி ஆற்றுக்கு மேற்குப் புறமாக உயர்ந்தோங்கி நிற்கும் இந்த மலையில் சிறப்புமிக்க சைவ வைணவக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு ஸ்ரீதேவி, பூதேவி சமதேராக வரதராஜப்பெருமாள் கோயில் கொண்டுள்ளார். வேதகிரீஸ்வரர் சன்னதிக்கு மேற்கில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து 5 கி.மீ தொலைவில் பேருந்து பாதையின் அருகில் இக்கோயில் உள்ளது. பவானி புதிய பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சிக்கோட்டைக்கு பேருந்து வசதி உள்ளது.
புராண முக்கியத்துவம் :
இம்மலை கோயில் அமைந்திருக்கும் இடம் ஒரு காலத்தில் சங்கரலிங்கம் என்ற சிற்றரசன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஸ்ரீரங்கநாதனின் மேல் பக்தி கொண்டிருந்த மன்னன் அவரை தரிசிக்க ஆண்டிற்கு இரண்டு முறை குடும்பத்தோடு ஸ்ரீரங்கம் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒரு சமயம் அவரது மகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. அதற்கு பார்க்காத வைத்தியமில்லை மகளின் வயிற்று வலியை குணப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஒருநாள் விடியற்காலையில் மன்னன் கனவு ஒன்று கண்டால். அதில் அரங்கநாதர் தோன்றி உன் கோட்டை அமைந்திருக்கும் வேதகிரி மலைமேல் ஒரு நீருற்று உள்ளது. தொடர்ந்து ஒன்பது தினங்கள் அதிகாலையில் அந்த நீரை அருந்தி வர நோய்கள் குணமாகும். இனிமேல் என்னை நீ இங்கே வந்து சேவிக்க வேண்டியதில்லை. இருக்கும் இடத்திலேயே எனக்கு கோயில் அமைத்து வழிபடலாம் என்று கூறினான்.
மன்னன் அதன்படியே செய்தான். மகளின் வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் நீங்கியது. பின்னர் அந்த அதிசய நீரூற்று சுரக்கும் நீரை அருந்தி பயனடைய சங்கரலிங்கம் ஏற்பாடுகளை செய்தான். இன்றும் இந்த நீரூற்றை மலை உச்சியில் நாம் காணலாம். பலர் இதில் பயனடைய சங்கரலிங்கம் ஏற்பாடுகளை செய்தார். இந்த நீர் ஊற்றை ”நந்திப்பாளி” என்றும் ”பொழுது கானா சுனை’ எனவும் பக்தர்கள் அழைக்கிறார்கள். இச்சுனை நீரில் சூரிய ஒளி படுவது இல்லை. இது குளிர்பதனப் பெட்டியில் வைத்து இருக்கும் நீரைப் போன்ற மிக மிக குளிர்ச்சியாக இருக்கிறது. சகல நோய்களையும் நீக்க வல்லது. அதன் அருகிலேயே 1867இல் வெட்டப்பட்ட கல்வெட்டு ஒன்றையும் காணலாம்.
நம்பிக்கைகள்:
திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை வரம் வேண்டுவோரும் கோயிலின் தல விருட்சமான ஆலமரத்தின் கிளைகளில் துணி தொட்டில் மற்றும் துணி குறிப்புகள் தட்டிச் செல்கின்றன
சிறப்பு அம்சங்கள்:
வேதகிரீஸ்வரர் சன்னதிக்கு மேற்கில் வரதராஜ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சன்னதியின் முன் மண்டபத்தில் நம்மாழ்வார், ராமானுஜர் சன்னதிகள் உள்ளன. மண்டபத்தின் நுழைவு வாயிலின் தெற்கில் நாகர் மற்றும் வேணுகோபாலர் இருக்க, வடக்கில் ஆஞ்சநேயர் உள்ளார். பெருமாள் கோயிலின் அர்த்த மண்டபத்தில் விஷ்வக்சேனர் காணப்படுகிறார். மூலஸ்தானத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கியவாறு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மூவருக்கும் ஒரே பீடம் அமைக்கப்பட்டுள்ளது. பெருமாள் கோயிலில் மகாமண்டபத்தின் தளம் மற்றும் சுவர் கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளன.
வடபுறத்தில் வேத நாராயணப் பெருமாள் தாமரை பீடத்துடன் காணப்படுகிறார். இவருடைய பாதங்களுக்கு அருகில் வேதவியாசர் இடது கையில் சுவடி ஏந்தி வலது கையில் சின்முத்திரை காட்டியவாறு சிரித்த முகத்துடன் காட்சி அளிக்கிறார். வேத நாராயணப் பெருமாள் வேதங்களைக் கேட்கும் வண்ணம் இருக்கும் காட்சியை இங்கு காணலாம். இந்த அழகிய சிலைகள் மிகவும் தொன்மை வாய்ந்தவை. இவ்வாலய கோபுரங்கள் சுதை வேலைப்பாடு செய்யப்பட்டு வண்ணங்கள் தீட்டப்பட்டு உள்ளன. வரதராஜ பெருமாளின் சன்னதிக்கு மேற்குப்புறமாக சக்தி தீர்த்தம் என்கிற புனித கிணறு காணப்படுகிறது. அரசமரத்தின் கீழ் ஆண் பெண் உருவங்கள் செதுக்கப்பட்ட நாயக்கர் காலத்து சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலின் பழைய தூண் ஒன்றில் தலைப்பாகை அணிந்து ஒருவனின் புடைப்பு சிற்பம் காணப்படுகிறது. இது நாயக்கர் மன்னர்கள் மற்றும் மைசூர் மன்னர்கள் தொடர்பு இக்கோயில் உடனிருந்து உணர்த்துவதாக சொல்கின்றனர்.
திருவிழாக்கள்:
சத்தியநாராயண பூஜை, மார்கழியில் அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசியில் சொர்க்கவாசல் திறப்பு ஆகியவை இங்கு கொண்டாடப்படுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஊராட்சிக்கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
ஈரோடு
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்