Thursday Dec 26, 2024

ஆனைமலை முருகன் குடைவரைக்கோயில், மதுரை

முகவரி

ஆனைமலை முருகன் குடைவரைக்கோயில், ஆனைமலை, நரசிங்கம், ஒத்தக்கடை, மதுரை மாவட்டம் – 625107.

இறைவன்

இறைவன்: முருகன் இறைவி: தெய்வானை

அறிமுகம்

மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலை யில் சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது ஒத்தக்கடை. இங்குள்ள யானைமலையின் ஒரு பகுதியில் குடைவரையாகத் திகழ்கிறது லாடன் முருகன் கோயில். கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில், தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. லாட தேசத்திலிருந்து வந்த லாடன் சித்தர் தங்கியிருந்து வழிபட்ட தலமாதலால் அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இன்றைய குஜராத் பகுதியே அன்றைய லாட தேசமெனவும் குறிப்பிடுகின்றனர். மதுரையை ஆண்ட பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் வட்டக்குறிச்சியைச் சேர்ந்த நம்பிரான் பட்டர் சோமாசியார் செய்வித்த குடைவரைக் கோயில் இது என கல்வெட்டுச் சான்றுகள் கூறுகின்றன. மேலும், இந்த ஆனை மலையில் சமண முனிவர்களின் கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் காணப்படுகின்றன.

புராண முக்கியத்துவம்

கி.பி 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இக்குடைவரைக் கோயில் முற்கால பாண்டியர் காலத்தியது. இது முருகப்பெருமானுக்காக குடைவிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இது சதுரமான சிறிய கருவறையும் நீள் சதுர முகமண்டபத்தையும் உடையது. முகமண்டபத்தை இரு தூண்கள் அலங்கரிக்கின்றன. கருவரையில் இருகரங்களை உடையவராய் முருகப்பெருமான் அமர்யதிருக்க அவர் அமர்ந்துள்ள நீண்ட இருக்கையிலேயே அவரது இடது புறம் தெய்வானை அமர்ந்து விளங்குகிறார். முருகனுக்கான பிரத்யேக குடைவரைக் கோயில் இது மட்டுமே என்கிறார்கள் பக்தர்கள். இங்கு முருகப்பெருமான் முப்புரி நூலும், போர்த் தெய்வங்கள் அணியும் சன்ன வீரம் எனும் அணிகலனும் அணிந்துள்ளார். ஆக, சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானையை மணமுடித்த பிறகான கோலத்தில் அருள்கிறார் எனலாம். தெய்வானை கையில் மலர்ச் செண்டு தாங்கி வீற்றிருக்கிறாள். அர்த்த மண்டபத்தில் சேவற் கொடியும், மயில் வாகனமும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. அதன் அருகிலேயே நம்பிரான் பட்டர் சிலையும், பாண்டிய மன்னர் சிலையும் காணப்படுகின்றன. முகமண்டபத்தின் ஒருபுறம் சிதைந்த ஒரு விலங்கின் உருவமும், மறுபுறம் மன்னனை ஒத்த உருவம் கையை உயர்த்தி மண்டியிட்டு வணங்கும் நிலையில் சிற்பங்களாக உள்ளன. புடைப்புச்சிற்பங்களுக்கு உரிய வழிபாட்டு முறைகள் வித்தியாசமானவை. இவ்வகையான சிற்பங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுவதில்லை. இவ்வகையான கோயில்களில் உற்சவ மூர்த்திகளுக்கே அபிஷேக ஆராதனைகளைச் செய்வர். இந்த லாடன் கோயிலில் உற்சவ மூர்த்திகள் இல்லாத காரணத்தால், இங்கு பூஜை, திருவிழாக்கள் இல்லை. பக்தர்கள் கோயிலின் வெளி மண்டபத்தில் நெய் விளக்கு ஏற்றியும், கோயில் வாயிற்கதவுக்கு பூமாலை அணிவித்தும் வழிபடுகின்றனர்.

காலம்

8 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நரசிங்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மதுரை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top