Thursday Dec 26, 2024

அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், திருநாகேஸ்வரம்

முகவரி

அருள்மிகு நாகநாத திருக்கோயில், திருநாகேஸ்வரம், திருவிடைமருதூர், தஞ்சாவூர் மாவட்டம் – 612204

இறைவன்

இறைவன்: நாகேஸ்வரர், நாகநாதர் இறைவி: பிறையணி வானுதலாள் (கிரிகுஜாம்பிகை தனி சன்னதி)

அறிமுகம்

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். இதனால் பாடல் பெற்ற தலம் என்ற சிறப்புப் பெற்றுள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி தென்கரைத்தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும். தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மீ. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது. சண்பக மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்தப் பகுதி சண்பகாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்பட்டு வந்தது. திருநீலக்குடி சப்தஸ்தானத்தில் திருநீலக்குடி, இலந்துறை, ஏனாதிமங்கலம், திருநாகேஸ்வரம், திருபுவனம், திருவிடைமருதூர் மற்றும் மருத்துவக்குடி ஆகிய ஏழூர்த் தலங்களில் இத்தலமும் அடங்கும். இத்தலத்தின் அருகில் வைணவத் தலமான திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன்) திருக்கோயிலும் உள்ளது தல விருட்சம் – பின்னை மரம் பூஜை முறை – காமிய ஆகமம் கோயிலின் புராண பெயர் – புன்னகாவனம் பிரதான வாயில் கிழக்கு கோபுரம் – ஐந்து நிலைகளையுடையது. நிருத்த கணபதி, நந்தி, சூரியதீர்த்தம் உள்ளன. நூற்றுக்கால் மண்டபம் சூரியதீர்த்த்தின் கரையில் மழுப்பொறுத்த விநாயகர் சன்னதி, இரண்டாம் பிரகாரத்தில் நாகராஜா உருவமுள்ளது. சேக்கிழார் திருப்பணி செய்த மண்டபமுள்ளது. சேக்கிழார் அவர் தாயார், தம்பி உருவங்கள் உள்ளன. இத்தலத்திற்கு மிகு அருகில் ஒப்பிலியப்பன் திருக்கோயில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

சிவபெருமானை மட்டுமே வணங்கி வந்தார் பிருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட பார்வதி சிவனிடம் அர்த்தநாரீஸ்வர வடிவம் வேண்டி கடும் தவம் புரிந்தாள். பார்வதியின் தவத்திற்கு மகிழ்ந்த இறைவன், அவளுக்கு தன் உடலில் பாதி கொடுத்து உமையொருவரானார். அர்த்தநாரீஸ்வர வடிவம் உலகின் பல பகுதிகளில் அமைய வேண்டும் என வேண்டினாள். அதன்படி இத்தலத்தில் அர்த்தநாரீஸ்வர வடிவில் சிவ பார்வதி காட்சியளிக்கின்றனர். மூலவர் நாகேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மன் பிறையணி வானுதலாள். சுசீலர் என்ற முனிவரின் மகன் சுகர்மன். ஒருசமயம் அவன் வனத்தின் வழியே சென்று கொண்டிருந்தபோது, நாக அரசனான தக்ககன் என்ற பாம்பு தீண்டியது. இதையறிந்த முனிவர் கோபம் கொண்டார். தன் மகனை தீண்டிய தக்ககன் மானிடனாக பிறக்கும்படி சபித்துவிட்டார். சாபவிமோசனம் பெற, தக்ககன் காசிப முனிவரிடம் ஆலோசனை கேட்டான். “பூலோகத்தில் லிங்க பிரதிஷ்டை செய்து, சிவபூஜை செய்து வழிபட்டால் சாபம் நீங்கும்’ என்றார் அவர். அதன்படி பூமிக்கு வந்த தக்ககன், சிவலிங்க பூஜை செய்தான். சிவன் அவனுக்கு காட்சி தந்து சாபவிமோசனம் கொடுத்தார். இவரே இத்தலத்தில் அருளுகிறார். நாகமாகிய தக்ககனுக்கு அருளியதால் இவர், “நாகநாதர்’ என பெயர் பெற்றார்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது.

சிறப்பு அம்சங்கள்

முத்தேவியர் தரிசனம்: அம்பாள் பிறையணியம்பாள் தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவள் தவிர, இக்கோயிலில் ஒரே சன்னதியில் கிரிகுஜாம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் காட்சி தருகின்றனர். பிருங்கி முனிவருக்காக இங்கு முத்தேவியரும் காட்சி தந்தனர். இதன் அடிப்படையில் இச்சன்னதியில் முத்தேவியரும் காட்சி தருகின்றனர். மார்கழியில் இந்த மூன்று அம்பிகைக்கும் புனுகு சாத்துகின்றனர். அப்போது 45 நாட்கள் இந்த அம்பிகையரை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை கடைசி வெள்ளியன்று இவரது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைக்கின்றனர். இவளது சன்னதியில் பாலசாஸ்தா, சங்கநிதி மற்றும் பதுமநிதியும் இருக்கின்றனர். இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. ராகு வரலாறு: ராகு பகவான், சுசீல முனிவரால் தனக்கு ஏற்பட்ட சாபம் நீங்க இத்தலத்து இறைவனை வழிபட்டார். எனவே இத்தலத்து இறைவன் “நாகநாதர்’ எனப் பெயர் பெற்றார். அன்று முதல் இது ராகு தோஷ நிவர்த்தி தலமாக விளங்குகிறது. சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம் மற்றும் காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்குகிறது. இருந்த போதிலும் இத்தலத்தில் ராகுபகவான் தனது மனைவிகளான சிம்ஹி, சித்ரலேகாவுடன் மங்கள ராகுவாக தம்மை வழிபடுவோருக்கு பல நலன்களையும் அருளும் தருவது சிறப்பு. நாகத்திற்கு சிவன் அருள் செய்த தலமென்பதால், நவக்கிரகங்களில் ஒருவரான ராகு, இத்தலத்தில் சிவனை வழிபட தேவியருடன் வந்தார். தினமும் சிவதரிசனம் பெற வேண்டி இங்கேயே மனைவியருடன் தங்கி விட்டார். பிற்காலத்தில், ராகுவுக்கு இங்கு தனிச்சன்னதி எழுப்பப்பட்டது. இவருடன் நாகவல்லி, நாககன்னி என்ற மனைவியரையும் சேர்த்து பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் அனுக்கிரஹம் புரியும் “மங்கள ராகு’வாக அருளுவது விசேஷம். பொதுவாக ராகு மனித தலை, நாக உடலுடன்தான் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் மனித வடிவில் காட்சி தருகிறார். ராகுவை, இந்த கோலத்தில் காண்பது அபூர்வம். கிரகங்களில் ராகு பகவான் யோககாரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம், கடன், வெளிநாட்டு பயண யோகம் ஆகியவற்றை அருள்வார். தோஷ பரிகாரம்: இத்தலம் ராகு தோஷ பரிகார தலமாக இருக்கிறது.நாகதோஷம் உள்ளவர்கள் இவருக்கு பாலபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கிறார்கள். இதனால் தோஷ நிவர்த்தியாவதாக நம்பிக்கை இருக்கிறது. பாலபிஷேகத்தின்போது, பால் நீல நிறத்தில் மாறுவது கலியுகத்திலும் நாம் காணும் அதிசயம். தினமும் காலை 9.30, 11.30, மாலை 5.30 மணி மற்றும் ராகு காலங்களில் இவருக்கு பாலபிஷேகம் செய்யப்படுகிறது. ராகு பகவான், இத்தலத்தில் சிவராத்திரியின் போது சிவனை வழிபட்டு அருள்பெற்றாராம். இதன் அடிப்படையில் தற்போதும் சிவராத்திரியின் போது, இரண்டு கால பூஜையை ராகுவே செய்வதாக ஐதீகம். சிவராத்திரி மற்றும் ராகு பெயர்ச்சியின்போது மட்டும் ராகு பகவான் உற்சவர் வீதியுலா செல்கிறார். ராகு பெயர்ச்சி விசேஷ பூஜை: ராகுபெயர்ச்சியின் போது பரிகார பூஜை செய்து கொள்ளலாம். சிறப்பம்சம்: கிரிகுஜாம்பிகை சன்னதியில் விநாயகரும், அருகில் ராகுபகவான், “யோகராகு’ என்ற பெயரிலும் இருக்கின்றனர். எனவே, இவர் இப்பெயரில் அழைக்கப்படுகிறார். கேதுவிற்கு அதிபதி விநாயகர். இந்த விநாயகரையும், யோக ராகுவையும் வணங்கினால் ராகு,கேது தோஷம் நிவர்த்தியாவதாக நம்பிக்கை.

திருவிழாக்கள்

பிரதோஷம், கார்த்திகை வழிபாடு, மகா சிவராத்திரி, அர்த்த ஜாம பூஜை போன்ற திருவிழாக்கள் மிக விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநாகேஸ்வரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top