அருள்மிகு கோடி கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், இருஞ்சிறை
![](http://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/temp-0793.jpg)
முகவரி
அருள்மிகு கோடி கடம்பவனேஸ்வரர் திருக்கோயில், காத்தனூர் ரோடு, இருஞ்சிறை, நரிக்குடி – திருப்புவனம், விருதுநகர் மாவட்டம் – 626612.
இறைவன்
இறைவன்: கோடி கடம்பவனேஸ்வரர்
அறிமுகம்
கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் பாண்டியர் ஆட்சிக் காலத்தில் இத்தலம் காஞையிருக்கை என்னும் உள்நாட்டு பிரிவில் அடங்கி இருந்தது. அந்த வேளையில் இத்தலம் இந்திர சமான நல்லூர் என்னும் பெயரால் அழைக்கப்பட்டது. பிற்கால பாண்டியர் ஆட்சிக் காலத்தில் வேளாண் நிலங்களை திருக்கோயில் நித்திய பூஜை, விழாச் செலவினங்களுக்கு தர்மமாக வழங்கப்பட்டது. அவ்வாறு தர்மங்கள் அளிக்கப்பட்ட கோயில் அமைந்த ஊருக்கு நல்லூர் என்ற பின்னொட்டு சேர்த்து அழைக்கப்படும் வழக்கம் இருந்தது அதன்படி, இவ்வூர் சமான நல்லூர் என்று விளங்கியது. ஊரின் வடபுறம், கிழக்கு பார்த்த வண்ணம் கோயில் அமைந்துள்ளது. கி.பி. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் அந்நியர் படையெடுப்பின்போது இக்கோயில் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனாலும் கோயில் கட்டுமானம் சிதிலமானதே ஒழிய லிங்கேஸ்வரர் நந்தி தேவரையும் மக்கள் வழிபட்டு வந்தனர். மூலவருக்கு கோடி லிங்கேஸ்வரர் என்ற நீண்ட காலமாக விளங்கி வந்தது. அந்த சமயம், கோயிலை புனரமைத்து நேரத்தில் பிரசன்னம் பார்த்தனர். அப்போது ஆதியில் கடம்பவனத்தில் பரம்பொருள் எழுந்தருள வைக்கப்பட்டிருந்த செய்தி வெளிப்பட்டது. அதனால் அன்று முதல் மூலவரான இறைவனது நாமம் கோடி கடம்பவனேஸ்வரர் என்று திருத்தி அழைக்கப்பட்டு வருகிறது. பல நூற்றாண்டுகள் வெயிலிலும் மழையிலும் காய்ந்து கிடந்த லிங்கேஸ்வரர் மற்றும் நந்திதேவர் திருமேனிகளை சிறிய அறையை கோயில் வடிவில் அமைத்து நித்திய பூஜை விழா வெகு விமரிசையாக நடத்தி வருகின்றனர். எதிர்காலத்தில் சுதை கட்டுமானத்தில் பிரமாண்ட கோயில் ஒன்றை அமைத்திட முயற்சி எடுத்தும் பணியாற்றியும் வருகின்றனர். ஏனைய ஆலயங்களை போல் கிழக்குப் பார்த்தவண்ணம் இல்லாமல் சற்று வடக்கே திரும்பி ஈசான்ய மூலையை பார்த்தவண்ணம் கோயில் அமைந்துள்ளது. கருவறை மூலவராக ஆவுடை லிங்கேஸ்வர மூர்த்தியாக கோடி கடம்பவனேஸ்வரர் தெய்வமாக எழுந்தருளி உள்ளார். நம்பிக்கையோடு நாடி வரும் அடியவர்களுக்கு வேண்டிய வரம் தந்தருளும் பெரிய வரப்பிரசாதமாக எம் பெருமான் விளங்குகிறார். கருவறை எதிரே பிரம்மாண்ட நந்தி தேவர் மண்டபம் உள்ளது. திருவாசக முற்றோதல் மாதமாதம் சிறப்பாக நடைபெறுகிறது அடியார் கூட்டம் உழவாரப் பணிகளை செவ்வனே செய்து சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்கின்றனர்.
புராண முக்கியத்துவம்
திருஆலவாய் புராண நூலில் இவ்வூர்த் தலவரலாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒருசமயம், இந்திரனின் கோபவேசத்தால் வான்மேகங்கள் சிறை பிடிக்கப் பட்டிருந்தது. எனவே பருவத்தில் மழை பெய்யாமல் நின்று போனது. பாண்டிய நாடெங்கும் பயிர் விளைச்சல் இல்லாமல் மக்கள் பசி பட்டினியால் வாடிக்கிடந்தனர். இதனை கண்ட பாண்டியமன்னன் ஆலவாய் அண்ணலை கண்ணீர் ததும்ப வேண்டி நின்றார். அச்சமயம், இறைவன் அசரீரியாக மன்னனுக்கு ஒரு யோசனையை தெரிவித்தார். அதன்படியே, காஞையிருக்கை நாட்டுப் பகுதியில் சிறுசிறு குட்டைகளை வெட்டி அதில் தவளைகளை போட்டனர். இரவு நேரத்தில் அவை ஓயாது கூச்சலிட ஆரம்பித்தனர். அந்த வேளையில் மேகங்கள் எல்லாம் தாமதமின்றி மழை பொழிய ஆரம்பித்து. இவ்வாற் சிறைப்பிடிக்கப்பட்ட மேகங்கள், பாண்டிய மன்னனின் பக்தியால் விடுவிக்கப்பட்டதாக தல வரலாறு கூறுகிறது. அதை ஒட்டியே இந்த தலத்திற்கு இந்திர சமான நல்லூர் என்று காரணப் பெயர் உருவானது. காலப்போக்கில் பெயர் மருவி இன்றைக்கு இருஞ்சிறை என அழைக்கப்படுகிறது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் பெருமானால் பாடப்பட்ட திருஉத்தரகோசமங்கை தளத்திற்கும் இதர்க்கும் தொடர்பு இருந்ததாக பிரசன்னம் பார்க்கையில் வெளிப்பட்டது. ஆதியில் கடம்ப வனமாக இப்பகுதி செழித்து கிடந்தது. அந்த வேளையில் உத்திரகோசமங்கையில் இருந்து தல யாத்திரையாக கிளம்பி இவ்வூர் வழியாக பிரயாணம் செய்தார் ஒரு துறவி. அவர் இங்கு வந்து கடம்பவனத்தில் சிலகாலம் தங்கியிருந்து தவம் ஆற்றினார். அது சமயம் அவர் வழிபட்டு வந்த லிங்கத்தைக் மூலவராக பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பினார். பாண்டியர் ஆட்சிக் காலத்தில் கலைநயமிக்க வேலைப்பாட்டில் கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவை கட்டுமான அமைப்பில் அழகிய கற்கோயிலாக கட்டி வைத்தனர்.
நம்பிக்கைகள்
தினமும் இரண்டு கால பூஜை நடைபெற்று வருகிறது. ஒரு பிரதோஷ வழிபாட்டின்போது வைக்கப்படும் கோரிக்கை நிறைவேறியதும் அங்கு நன்றிக்கடனாக மற்றொரு பிரதோஷ வழிபாட்டை தங்கள் கைங்கர்யமாக நடத்தும் வழக்கம் இங்கு பக்தர்களிடம் இருந்து வருகிறது.
திருவிழாக்கள்
சித்திரை தமிழ் புத்தாண்டு, பெளர்ணமி, அமாவாசை, சிறப்பு அபிஷேக, ஆராதனை, ஐப்பசி அன்னாபிஷேகம் ,கார்த்திகை சோமவாரம் 108 சங்காபிஷேக வழிபாடு, கார்த்திகை மகா தீபம், மார்கழி முப்பது நாட்கள் திருப்பள்ளிஎழுச்சி, திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி ஆகிய விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாதம் தோறும் சிறப்பு அபிஷேகம் நடத்தி வருகின்றனர்.
காலம்
2000 – 3000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நரிக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருதுநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை