Sunday Sep 08, 2024

அரவூர் ஸ்ரீ கார்கோடகேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி

அரவூர் ஸ்ரீ கார்கோடகேஸ்வரர் சிவன்கோயில், அரவூர் , வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம்- 614404

இறைவன்

இறைவன்: ஸ்ரீ கார்கோடகேஸ்வரர் இறைவி: ஸ்ரீ மங்களாம்பிகை

அறிமுகம்

கும்பகோணம் – மன்னார்குடி சாலையில் உள்ள நீடாமங்கலத்தில் இருந்து கொரடாச்சேரி செல்லும் சாலையில் சென்று பிரிகிறது இந்த அரையூர் எனப்படும் அரவூர். பசுமை போர்த்திய சின்னசிறு கிராமம் , ஓர் அழகிய சிவாலயம் பத்து சென்ட் நிலப்பரப்பில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கார்கோடகன் எனும் அரவம் வழிபட்டதால் அரவூர் என வழங்கப்பட்டது. தற்போது அரையூர் என அழைக்கின்றனர். பல ஆண்டு காலமாக குடமுழுக்கு காணாமல் சிதிலமடைந்து வருகிறது. கிழக்கு நோக்கிய சிவாலயம், கோயிலின் எதிரில் ஓர் நீள் சதுர வடிவ குளம் உள்ளது கிழக்கில் ஓர் வாசல் உள்ளதெனினும் தெற்கு வாசலே பிரதானமாக உள்ளது. கருவறை பிரஸ்தரம் வரை கருங்கல் கொண்டும் விமான பாகம் செங்கல் கொண்டும் சுதை கொண்டும் அழகூட்டப்பட்டுள்ளன. தென்மேற்கில் விநாயகர், முருகன் ஆகியோர் தனி சிற்றாலயம் கொண்டுள்ளனர். நந்திக்கு சிறு கோபுரத்துடன் கூடிய மண்டபமும் உள்ளது. இறைவன் இறைவி இருவரது கருவறையையும் ஓர் கருங்கல் தூண்கள் கொண்டும் செங்கல் சுவர் கொண்டும் கட்டப்பட்ட மண்டபம்?? அதன் கூரை??? விதானம் முழுவதும் இடிந்துவிட தகர தகடுகள் கொண்டு மூடியுள்ளனர். இறைவன் கார்கோடகேஸ்வரர் கிழக்கு நோக்கியும் இறைவி மங்களாம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவனின் நேர் எதிரில் மண்டபத்தின் வெளியே சிறிய நந்தி மண்டபம் உள்ளது. கோயில் தனியார் வசம் உள்ளது என்பதால் பல்லாண்டு காலமாக பராமரிப்பென்பதே இல்லாமல் விதை செடியாகி, செடி மரமாகி, மரம் விருட்சமாகி , கோயில் வளாகம் முழுதும் சிதிலம் சிதைவு, சீரழிவு என முன்னோரின் உழைப்பும் செல்வமும் இன்று வீணாகி நிற்கிறது. மரத்தை கட்டிடம் தாங்குகிறதா , கட்டிடம் மரத்தை தாங்குகிறதா நெருங்கவே அச்சப்படும் நிலையில் தற்போது கோயில் உள்ளது.

புராண முக்கியத்துவம்

கோயில் எள்ளளவு தான், சிறப்புகளோ வானளவு. ஆம் மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்று சிறப்புக்கள் கொண்டது இக்கோயில். அஸ்தினாபுரத்தினை ஆண்ட யுதிஷ்டிரனுக்கு பின் ஆண்ட பரீக்ஷத் மகாராஜாவிற்கு பாம்பினால் அழிவு ஏற்ப்பட்டது. அதனால் அவரது மகன் ஜனமேஜெயன் பின்னர் காலசர்ப்ப யாகம் செய்து உலகில் உள்ள எல்லா பாம்புகளும் அதில் வீழ்ந்து இறக்கும் படி செய்தான். அதில் தப்பிக்க கார்கோடகன் இந்த தலத்தில் தீர்த்தம் ஏற்படுத்தி தவம் செய்து இனி எவரையும் தீண்டமாட்டேன் என இறைவனிடம் வாக்கு கொடுத்த தலம் இது. அது முதல் இந்த ஊரில் எவரும் அரவம் தீண்டி இறந்ததில்லை. அது மட்டுமா இறைவனே இனி இத்தலம் வந்து எனை வழிபடுவோர்க்கு நாக தோஷம், ராகு கேது தோஷமும் ஏற்படாது காப்பேன் என்கிறார். பாம்பை அடித்து கொன்றவர்கள் ஒருமுறையேனும் இத்தல இறைவனை வணங்கி செயலுக்கு வருந்தினால் அவரது சந்ததியினரை இத்தோஷம் தொடராது. சுந்தர மூர்த்தி சுவாமிகள் இத்தலம் வந்து சோடச உபசார பூசை செய்து நற்பலன்கள் பெற்றதால் இந்த சுவாமியினை ஆராதிப்போர் சகல நன்மைகளும் பெறுவர் என்பது திண்ணம். இவ்வூரில் இருந்த பெருமாள் ஆலயம் சிதைவுற அங்கிருந்த பெருமாள் சிலைகளும் அனுமன் சிலையும் இந்த சிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கருவறை கோட்டத்தில் விநாயகர், தென்முகன், லிங்கோத்பவர் இருபுறமும் மகாவிஷ்ணுவும், பிரம்மனும் கைகூப்பிய நிலையில் உள்ளார்கள். வடக்கில் பிரம்மனும், துர்க்கையும். தென்மேற்கில் சிற்றாலயத்தில் விநாயகர் வடமேற்கில் முருகன் வள்ளி தெய்வானையுடன் உள்ளார். இவ்வூரில் ஹோமகுளம் உள்ளது இந்த குளமே ஜனமே ஜெயன் ஹோமகுண்டம் ஏற்படுத்தி ஹோமம் செய்த இடம் எனப்படுகிறது. ஈசான திக்கில் எல்லை தெய்வம் பாம்புலியம்மன் கோயிலுள்ளது. மராட்டிய மன்னர்களால் முந்நூறு வருடங்களின் முன்னர் திருப்பணிகள் செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்துஎடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அரவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top