அரசவனங்காடு கைலாசநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி :
அரசவனங்காடு கைலாசநாதர் சிவன்கோயில்
அரசவனங்காடு, குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 612603.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
ஆனந்த நாயகி
அறிமுகம்:
கும்பகோணம் – திருவாரூர் சாலையில் , திருவாரூரிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் குடவாசலிலிருந்து 10 கி.மீ தொலைவிலும் உள்ளது இந்த அரசவனங்காடு. பிரதான நெடுஞ்சாலையை ஒட்டியே சிவன் கோயில் அமைந்துள்ளது, கிழக்கு நோக்கிய கோயில் மாடக்கோயில் போல தரைமட்டத்தில் இருந்து ஐந்தடி உயர வளாகமாக கோயில் அமைத்துள்ளது. கிழக்கு நோக்கிய கோயில் என்றாலும் தென்புறம் உள்ள குளத்தினை ஒட்டிய வாயிலே அதிகம் உபயோகிக்கப்படுகிறது. பிரதான கருவறை, அதன் முகப்பு மண்டபம் மேலும் சில படிகள் உயரத்தில் அமைந்துள்ளது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது இக்கோயில் ஒரு அரசமாளிகை போல் அமைந்துள்ளது. இறைவன் கைலாசநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது, பல திருப்பணிகளின் பின்னர் இப்போதுள்ள நிலையை அடைந்துள்ளது. இறைவன் கிழக்கு நோக்கியும் இறைவி ஆனந்த நாயகி தெற்கு நோக்கியும், உள்ளனர்.
கருவறை கோட்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர், துர்க்கை உள்ளனர். பிரகார சிற்றாலயங்களாக விநாயகர் முருகன் இருவருக்கும் ஆலயங்கள் உள்ளன. நடராஜருக்கென்று தனி சன்னதி உள்ளது. நடராஜர் சன்னதியின் நேர் பின்புறம் சரஸ்வதிக்கு ஒரு சன்னதி வடக்கு நோக்கியவாறு உள்ளது. வடகிழக்கில் பெரியதொரு வில்வமரமும் அதனடியில் தீர்த்த கிணறு ஒன்றும் உள்ளன. நீண்ட மண்டபத்தில் நவகிரகம் பைரவர் சன்னதிகளும் உள்ளன. அதே மண்டபத்தில் ஒரு லிங்கமும், மூன்று லிங்க பாணங்களும் உள்ளன. பூஜைகள் நன்முறையில் நடந்து வருகின்றன. குளமும் கோயிலும் இன்னும் நன்றாக பராமரிக்கப்படவேண்டும்.
சிறப்பு அம்சங்கள்:
அரசமரங்கள் நிறைந்த காடாக இருந்தமையால் அரசுவனம் அரசங்காடு என வழங்கப்பட்டு அரசவனங்காடு ஆனது. இது சோழர்களால் உருவாக்கப்பட்ட்ட அந்தணர் கிராமம், பதினெட்டு வாத்திமார்கள் எனும் அந்தணர்களின் பதினெட்டு கிராமங்களில் இதுவும் ஒன்று. இங்கு சிவன்கோயில், வைணவ கோயில் என இரு கோயில்கள் மட்டுமல்லாது மூன்று சித்தர்கள் என அழைக்கப்படும் ஸ்வயம் பிரகாச சுவாமிகள் எனப்படும் நாகப்பட்டினம் சுவாமிகள் அச்சுதானந்த சுவாமிகள் எனப்படும் வரகூர் சுவாமிகள் மற்றும் நல்லூர் சுவாமிகள் சமாதிகள் இவ்வூரில் உள்ளன. இம்மூவரும் இவ்வூர் கைலாசநாதரை வழிபட்டு இவ்வூரிலேயே ஐக்கியமானவர்கள். நாமும் இவ்வூர் கைலாசநாதரை வணங்கி பின்னர் இம்மூவரின் சமாதிகளை வலம் வந்து வணங்கினால் தீராத நோய்கள் தீரும் என்பது திண்ணம்.








காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அரசவனங்காடு
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி