அம்மங்குடி கைலாசநாதர் துர்கா பரமேஸ்வரி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி :
அருள்மிகு கைலாசநாதர் துர்கா பரமேஸ்வரி திருக்கோயில்,
அம்மங்குடி,
தஞ்சாவூர் மாவட்டம் – 612202.
போன்: +91-435- 246 7167, 94430 46255, 94439 32983
இறைவன்: கைலாசநாதர்
இறைவி: துர்கா பரமேஸ்வரி, பார்வதிதேவி
அறிமுகம்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் அம்மன்குடி கிராமத்தில் பார்வதிதேவி உடனுறை கைலாசநாதர் சுவாமி கோவில் அமைந்து உள்ளது. இத்தலத்தின் மகிமையை ஸ்கந்த புராணம் சேத்திர காண்டம் 66-வது அத்தியாயத்தில் சொல்லப்பட்டு உள்ளது. மகிஷாசுரனை வதம் செய்தபோது அவனுடைய ரத்தத்தால் பூசப்பட்ட தன்னுடைய திரிசூலத்தை துர்க்கா பரமேஸ்வரி அம்மன் இங்குள்ள புஷ்கரணியில் சுத்தம் செய்ததால் புஷ்கரணி பாப விமோசன தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
செவ்வாய்க்கிழமையில் இந்த தீர்த்தத்தில் நீராடி துர்க்கா தேவியை தரிசனம் செய்பவர்கள், தங்கள் மனதால் ஆசைப்பட்ட எல்லா நலன்களையும் அடைவதாக பக்தர்களிடம் நம்பிக்கை உள்ளது. தேவியானவள், மகிஷாசுர வதத்திற்கு பின்னர் அவன் கழுத்தில் அணிந்திருந்த சிவலிங்கத்தை கைலாஷ்ஸ்வரர் என்ற பெயருடன் பிரதிஷ்டை செய்து தபசுக்கு இடையூறு செய்பவர்களை நாசம் செய்வதற்காக ஸ்ரீ விநாயகரையும் பிரதிஷ்டை செய்து தேவியானவள் 12 வருடங்கள் மிக கடுமையான தவம் செய்தாள். அதுமுதல் இந்த இடமானது தேவி தபோவனம் என்ற பெயருடன் பிரசித்தி அடைந்து இருக்கிறது.
புராண முக்கியத்துவம் :
மகிஷாசுரனை சம்ஹாரம் செய்ததால், அன்னை துர்க்கைக்கு தோஷம் ஏற்பட்டது. இதனைப் போக்க, அவள் சிவனை எண்ணி தவமிருந்தாள். பூலோகத்திலுள்ள தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து, விநாயகர் மற்றும் சிவலிங்கம் ஸ்தாபித்து தியானம் செய்தாள். 12 ஆண்டுகள் தவம் தொடர்ந்தது. தவத்தினால் மகிழ்ச்சியடைந்த சிவன் அம்பாள் முன்தோன்றி, உன்தோஷம் நீங்கி விட்டது. இத்தலத்திலேயே தங்கி, உன்னை தரிசிப்பவர்களின் சகல தோஷங்களையும் நீக்கி, அவர்கள் வேண்டும் செயல்களுக்கு வெற்றியை அருள்வாயாக, என்று வரமளித்தார். தேவி தவம் செய்த இடம் தேவி தபோவனம் எனப்பட்டது. இங்குள்ள தீர்த்தம் அம்மனின் பாவத்தைப் போக்கியதால் பாவ விமோசன தீர்த்தம் எனப் பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில், அம்மன் குடியிருக்க தேர்ந்தெடுத்த இடம் என்ற பொருளில் அம்மன்குடி என்றாகி, பேச்சு வழக்கில் அம்மங்குடி ஆகி விட்டது.
முதலாம் ராஜராஜசோழ மன்னனின் படைத்தலைவர் கிருஷ்ணன் ராமன் பிரம்மராயன் இவ்வூரில் பிறந்தவர். இவரே தங்கள் ஊரில் தங்கிய அம்பாளுக்கு கோயில் கட்டினார். ராஜராஜேஸ்வரியான துர்கா தேவி தங்கியதால் இவ்வூருக்கு, ராஜராஜேஸ்வரம் என்று பெயர் வைத்தார். மன்னர் ராஜராஜ சோழனின் மீது அன்பு கொண்டவர் என்பதால், அவரது பெயரை வைத்ததாகவும் கூறுவர். அம்பாளுக்கு துர்கா பரமேஸ்வரி என்ற பெயர் சூட்டப்பட்டது. அம்பாள் பூஜித்த லிங்கமும் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டு கைலாசநாதர் என்று திருநாமம் சூட்டப்பட்டது.
நம்பிக்கைகள்:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம் கிடைக்க இங்குள்ள இறைவனையும், கல்வியில் சிறந்து விளங்க யோகசரஸ்வதியையும் பிரார்த்திக்கலாம். நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள விநாயகரை வழிபடுகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்:
அம்பாளுக்கு முக்கியத்துவம் தரும் இடமாக இருந்தாலும் இக்கோயிலில் கைலாசநாதரே மூலவராக இருக்கிறார். அம்பாள் துர்க்கா பரமேஸ்வரி என்ற பெயரில் எட்டு கைகளுடன் காட்சி தருகிறாள். மகிஷாசுரமர்த்தினி என்றும் இவளை கூறுகிறார்கள். ஒரு சிவன் கோயிலில் துர்க்காதேவிக்கு கிழக்கு நோக்கிய சன்னதி அமைந்துள்ளது இதன் தனி சிறப்பாகும். நவக்கிரகங்களுக்கு அதிபதியாக துர்க்கை விளங்குவதால் இங்கு நவக்கிரகங்களுக்கு தனி சன்னதி கிடையாது. செவ்வாய்க்கிழமைகளில் விசேஷ பூஜை உண்டு.
துர்கா பரமேஸ்வரி எட்டு கரங்களுடன், சிம்மவாகனத்தில் மகிஷாசுரனை வதம் செய்யும் கோலத்தில் அருள்பாலிக்கிறாள். எதிரியை அழிப்பதே உன்னுடைய அமைதியான வாழ்க்கைக்காகத்தான் என்று பக்தர்களுக்கு அறிவிப்பது போல முகத்தில் சாந்தம் நிறைந்த புன்னகை தவழ்கிறது. அம்பாளின் கைகளில் சூலாயுதம், சங்கு, சக்கரம், கேடயம், வில், கத்தி, அம்பு, மகிஷாசுரன் தலை ஆகியவை உள்ளன.இவ்வூருக்கு கேரளாந்தக சதுர்வேதமங்கலம், நாராயணபுரம் என்ற பெயர்களும் இருந்தன. ஸ்காந்த புராண சேத்திரகாண்டம், 66வது அத்தியாயத்தில் சூதபுராணிகர், அம்மங்குடி கைலாசநாதர் குறித்து கூறியுள்ளார். துர்காஷ்டமி அன்று துர்கா தேவி வீதி வீ உலா சென்று மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. சூரியன், சனீஸ்னீ வரர், பைரவர் சன்னதிகளும் உள்ளன.
அதிசய விநாயகர்: இத்தலத்தில் உள்ள விநாயகரின் சிற்பம் சாளக்கிரமத்தால் ஆனது. காலையில் பச்சை, மதியம் நீல நிறம், மீண்டும் மாலையில் பச்சை நிறமாக மாறிவிடும் தன்மை கொண்டது. வழுவழுப்பான கல்லால் ஆனது. விநாயகரின் வயிற்றில் நாகம் உள்ளது. எனவே நாகதோஷம் உள்ளவர்கள் இந்த விநாயகரை வழிபடுகின்றனர். கையில் தவசுமாலை வைத்துள்ளார். இவருக்கு தபசு மரகத விநாயகர் என்ற பெயர் வழங்கப்படுகிறது. விநாயகரின் துதிக்கை அவரது உடலோடு ஒட்டாமல் துளையிட்டு சிற்பத்திறமையுடன் செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கான வழிபாடு: கல்விக் கடவுளான சரஸ்வதி வீணைவீ யுடன் அருள்பாலிப்பது வழக்கம். இங்குள்ள யோக சரஸ்வதி வீணைவீ யின்றி யோக நிலையில் இருக்கிறாள். இவளை வழிபட்டால் மனம் ஒருமுகப்படும். இதன் மூலம் கல்வியில் மேன்மை உண்டாகும். இவ்வாண்டு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க உள்ளவர்கள், இந்த சரஸ்வதியை வழிபட்டு வந்தால், அவர்களுக்கு படிப்பில் கவனமும் ஸ்திரத்தன்மையும் ஏற்படும். இங்குள்ள சூரியன் குழந்தை வடிவ தோற்றத்தில் உள்ளார். எனவே இவரது காலில் தண்டை என்ற அணிகலன் அணியப்பெற்றுள்ளது. இந்த அணிகலனை குழந்தைகளே அணிவார்கள். இங்குள்ள துர்க்கைக்கு நூறு கண்கள் இருப்பதாக ஐதீகம். மழை இல்லாத காலங்களில் இந்த அம்பிகைக்கு பூஜை செய்தால் மழை பெய்யும் என்பது நம்பிக்கை.
கிழமைக்கு ஒரு பலன்: செவ்வாய், அமாவாசை, அஷ்டமி, பவுர்ணமி, நவராத்திரி தினங்களில் கோயிலை வலம் வந்து வழிபடுபவர்களுக்கு திருமணத்தடை, ராகுகேது தோஷங்கள் நிவர்த்தியாகும். செல்வஅபிவிருத்திக்கு வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரை, குழந்தை பாக்கியம் கிடைக்க திங்கள்கிழமை, பிணி அகல, வழக்குகளில் வெற்றி பெற, பகை நீங்க, வேலைவாய்ப்பு கிடைக்க செவ்வாய்க்கிழமை ராகுகாலம், ஆயுள் பலம் பெற சனிக்கிழமைகளில் துர்கா பரமேஸ்வரியை வணங்கி வரலாம்.
திருவிழாக்கள்:
மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, நவராத்திரி, எட்டாம் நாள் வளர்பிறை அஷ்டமி (துர்கா அஷ்டமி) மகிஷாசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி.







காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்துசமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அம்மங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவைடைமருதூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி