அந்தணப்பேட்டை அண்ணாமலையார் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி :
அந்தணப்பேட்டை அண்ணாமலையார் சிவன்கோயில்,
அந்தணப்பேட்டை, நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609601.
இறைவன்:
அண்ணாமலையார்
இறைவி:
உண்ணாமுலை அம்மன்
அறிமுகம்:
நாகை நகரின் மேற்கில் உள்ள புத்தூர் நாலுரோடு ஜங்க்ஷனில் இருந்து தெற்கில் செல்லும் வேதாரண்யம் சாலையில் ½ கிமீ தூரத்தில் உள்ள மேம்பாலத்தில் ஏறி இறங்கினால் அந்தணப்பேட்டை. ஊரின் மத்தியில் உள்ளது சிவன் கோயில், மூன்று நிலை மாட அமைப்பு கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமையப் பெற்றுள்ளது. அதனை ஒட்டி ஒரு உயர்ந்த கதவுகள் கொண்ட வாயில் ஒன்று அமைந்துள்ளது, அது சுவாமி வீதிலாவுக்கு வாகனங்களில் ஏறி வரும்போது இக்கதவினை திறந்து வருவார்.
கோயில் யார்காலத்தில் கட்டப்பட்டது என்ற தகவல் இல்லை, எனினும் தூண்களில் புடைப்பு சிற்பமாக சில சிலைகள் உள்ளன, அதனால் நகரத்தார் பணிகள் இதில் இருத்தல் கூடும் என நினைக்கிறேன்.
திருவண்ணாமலைக்கு நிகரானது. திருவண்ணாமலைக்கு செல்ல இயலாதவர்கள் இத்திருக்கோயிலை வழிபடலாம். 15 வேலி நஞ்சை நிலம்,14 திருக்குளங்கள், பல்வேறு காலக்கட்டங்களில் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் பழமையான திருத்தேர் முற்றிலும் சேதமடைந்து கிடந்தது, இப்போது என்ன நிலை என தெரியவில்லை.
நம்பிக்கைகள்:
இறைவனின் இடது புறத்தில் உண்ணாமுலை அம்பாள் சன்னதி உள்ளது. இந்த அம்பிகை பிரசவ வழியால் சிரமப்பட்ட ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்த்ததாக ஐதீகம். அதனால் கர்ப்பிணி பெண்கள் இந்த அம்பிகையை வேண்ட அவர் சுக பிரசவத்திற்கு அருள் தருவார். அம்பிகை விமானத்தில் சுதை சிற்பமாக இந்த கதை வடிக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
கோபுரத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய நடராஜர் தரிசன மண்டபம் பெரிதாக கட்ட்டப்படு உள்ளது. கோயில் உயர்ந்த மதில் சுவருடன் சிறப்பான பல விமான கட்டுமானங்களை கொண்டதாக அமைந்திருக்கிறது. இறைவன் கிழக்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார், அவரின் முன்னர் மகாமண்டபம் ஒன்றுள்ளது அதன் வெளியில் நந்தி அடுத்து உயர்ந்த செப்பு கொடிமரம் அடுத்து பலிபீடமும் அமைந்துள்ளது. முகமண்டப வாயிலில் விநாயகரும் பால தண்டாயுதபாணியும் மாடங்களில் உள்ளனர். கொடிமரத்தை ஒட்டியபடி அகன்ற மேடையில் நவகிரகங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கோயிலின் கட்டுமானங்கள் பிரஸ்தரம் எனும் மேல் மட்டம் வரை கருங்கல் கொண்டும் விமானம் மட்டில் செங்கல் கொண்டும் கட்டப்பட்டு உள்ளது.
முகப்பு மண்டபத்தில் நால்வருடன் சேக்கிழாரும் உள்ளார். சுவாமிக்கு இடது புறம் தியாகராசர் சன்னதி உள்ளது, இதற்கு தனி சன்னதி விமானத்துடன் உள்ளது.. இடமிருந்து வலமாக வந்தால் தியாகராஜரின் விமானத்தில் பெரியளவிலான சுதைகள் உள்ளன. இறைவனது கருவறை கோட்டத்தில் முதலில் விநாயகர் அடுத்து தக்ஷ்ணமூர்த்தி; தனி விமானத்துடன் தனி சன்னதியாக உள்ளார் இது ஒரு சிறப்பு. மேற்கில் லிங்கோத்பவரும், வடக்கில் பிரம்மனும் துர்க்கையும் உள்ளனர்.
பிரகாரத்தில் மேற்கில் நீண்ட திருமாளப்பத்தி உள்ளது அதில் கன்னி மூலைகணபதி, தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். சுற்று பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய சிற்றாலயங்களில் ஷேத்திர விநாயகர், காசிவிஸ்வநாதர், அருணாசலேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், கஜலெட்சுமியும், வடக்கு நோக்கிய சன்னதிகளில் சனி பகவான், ஜுரதேவர் இருவரும் உள்ளனர். வடபுறம் அமையப் பெற்ற ஜூரநாதருக்கு ரச சாதம் படைத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.
அருகில் சண்டேசர் உள்ளார். வடகிழக்கில் யாக சாலை மண்டபமும், மேற்கு நோக்கிய பைரவரும் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.








காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அந்தணப்பேட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி