விளத்தொட்டி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி
விளத்தொட்டி பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், விளத்தொட்டி, திருச்சிற்றம்பலம் அஞ்சல், திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609204
இறைவன்
இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: இஷுரசநாயகி
அறிமுகம்
பந்தநல்லூர் – மணல்மேடு பேருந்து வழித்தடத்தில் சுமார் 3 கி.மி. சென்றவுடன் மரத்துறை என்ற இடத்தில் இடதுபுறம் விளத்தொட்டி செல்லும் சாலை பிரிகிறது. சாலை பிரியுமிடத்தில் ஒரு வளைவு உள்ளது. அதன் வழியே சுமார் 2 கி.மீ. சென்று விளத்தொட்டியை அடையலாம். மணல்மேட்டில் இருந்து பந்தநல்லூர் வரும் போது வழியில் திருச்சிற்றம்பலம் செல்லும் சாலை வலதுபுறம் பிரிகிறது. அதன் வழியே திருச்சிற்றம்பலம் சென்று அங்கிருந்து சுமார் ஒரு கி.மீ. சென்றால் விளத்தொட்டியை அடையலாம். பந்தநல்லூரில் இருந்து மணல்மேடு செல்லும் மினி. நகரப் பேருந்து விளத்தொட்டி – திருச்சிற்றம்பலம் வழியாகச் செல்கிறது. இந்தப் பேருந்தில் சென்றால் விளத்தொட்டி கோவிலருகே இறங்கலாம். விளத்தொட்டி பிரம்ம்புரீஸ்வரர் ஆலயம் நான்கு புறமும் மதிற்சுவருடனும் ஒரு முகப்பு வாயிலையும் கொண்டு அமைந்துள்ளது. ஒரு பிராகாரத்தைக் கொண்ட ஆலயத்திற்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. முகப்பு வாயில் மேற்புறத்தில் ரிஷபாரூடர் ஒரு சிறிய மண்டபத்தினுள் காணப்படுகிறார். இருபுறமும் நின்ற நிலையில் விநாயகரும், முருகப்பெறுமானும் காட்சி அளிக்கின்றனர். இத்தல இறைவன் பிரம்மபுரீஸ்வரர் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார், மகா மண்டபத்தில் இடதுபுறம், ருக்மணி சத்யபாமாவுடன் தரிசனம் கொடுக்கும் வேணுகோபாலப் பெருமாள் சந்நிதி உள்ளது. இவர் சந்நிதிக்கு எதிரே கருடாழ்வார் திருமேனி உள்ளது. பிராகாரத்தில் விநாயகர் உள்ளார். கருவறைக்கு நேர் பின்புறம் பால முருகனின் சன்னதி உள்ளது சந்நிதியில் முன்னே சிவலிங்கமும், அதன் பின்னே தின்ற கோலத்தில் பாலமுருகன் அருள்பாலிக்கிறான். கஜலஷ்மி, மகாலஷ்மி, பைரவர், சூரியன், சனிபகவான் ஆகியோரின் சந்நிதிகளும் உட்பிராகாரத்தில் உள்ளன. வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர் சந்நிதியும் அமைந்துள்ளது. அம்பாள் இஷுரசநாயகி சந்நிதி இறைவன் சந்நிதிக்கு இடதுபுறம் தனியே கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இத்தலம் ஒருக்கால் பூஜை திட்டத்தின் கீழ் இந்து அறநிலை துறையால் பாதுகாக்கப்படுகிறது. மேலும் அப்பர் திருவாக்கில் இத்தலம் சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
ஆரம்பத்தில் பிரம்மாவிற்கும் சிவனைப்போலவே ஐந்து தலைகள் இருந்தன. தனக்கும் ஐந்து தலைகள் இருப்பதை எண்ணி பெருமிதம் கொண்ட பிரம்மா தானும் சிவபெருமானுக்கு இணையானவன் என்று அகந்தை கொண்டு திரிந்தார். அவரது அகந்தை அளவுமீறிப் போக, ஒரு கட்டத்தில் சினந்த சிவபெருமான் பிரம்மாவின் தலைகளுள் ஒன்றைக் கொய்து பிரம்மாவிடம் இருந்த படைப்பாற்றலையும் பறித்தார். தன் தவறை உணர்ந்த பிரம்மா சிவபெருமானிடம் மன்னிப்புக் கோரினார். பூவுலகில் சிவபெருமான் அருள்பாலிக்கும் பல தலங்களுக்குச் சென்று அவரை வழிபட்டார். இவ்வாறு பிரம்மா பூஜித்த இடங்களிலெல்லாம் உள்ள சிவபெருமான், பிரம்ம புரீஸ்வரர் என்று அழைக்கப்படலானார். அந்த வகையில் பிரம்மா சிவபூஜை புரிந்த தலங்களுள் விளத்தொட்டியும் ஒன்று. அதனால் இத்தல இறைவனும் பிரம்மபுரீஸ்வரர் என அழைக்கப்பட்டார். தல வரலாற்றை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வாலயத்தின் முன் மண்டபத்தில் இடதுபுறம் பிரம்மன் சிவலிங்கத்தை வழிபடும் ஐதீகச் சிற்பம் உள்ளது.
சிறப்பு அம்சங்கள்
குழந்தையாய் இருந்தபோது முருகன் இத்தலத்தில் தான் வளர்ந்து வந்ததாக தலபுராணம் தெரிவிக்கிறது.. இத்தலத்தில்தான் அன்னை பார்வதி தேவி குழந்தை பாலமுருகனை தொட்டிலில் கிடத்தி, தாலாட்டுப் பாடி தூங்க வைத்ததாகவும் அதனால் இத்தலம் வளர்தொட்டில் என அழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி விளத்தொட்டி என்றாயிற்று. இத்தலத்தில் வசிப்போர் தங்கள் வீட்டில் பிறக்கும் குழந்தைகளை, பிறந்து பத்து தினங்கள் வரை தொட்டிலில் படுக்க வைப்பதில்லை. மேலும் குழந்தை வரம் வேண்டி பக்தர்கள் இத்தலத்தில் அருளபாஙிக்கும் பாலமுருகனை வேண்டிச் செல்கின்றனர். தங்களது பிரார்த்தனை நிறைவேறியதும் ஒரு தொட்டில் வாங்கி வந்து பாலமுருகன் சன்னதியில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
விளத்தொட்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி