பழமானேரி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி :
பழமானேரி சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்
பழமானேரி, பூதலூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 613104.
இறைவன்:
சுந்தரேஸ்வரர்
இறைவி:
மீனாட்சி
அறிமுகம்:
பழமானேரி என்பது திருக்காட்டுப் பள்ளி மேற்கே கல்லணை செல்லும் பாதையில் 2 வது கிமீ-ல் உள்ள சிறு கிராமம். இந்த ஊராட்சியில் அமைந்துள்ள இரு ஊர்கள் –பழமானேரி,எர்த்தனான்துருத்தி. சிவன்கோயில் கிழக்கு நோக்கி உள்ளது. தெரு மேற்கில் உள்ளதால் பிரதான வாயில் மேற்கில் உள்ளது. மேற்கு வாயில் அருகில் தெற்கு நோக்கிய ஒரு கொட்டகையில் பல ஆண்டுகளாக பெரிய பெருமாள் தன் நாச்சியார்களுடன் உள்ளார். கோயில் சிதைவுண்டவுடன் இங்கு கொணர்ந்திருக்கலாம்!! சிவாலய மூர்த்திகள் சோழர் காலத்தவை தற்போதுள்ள கோயில், அர்த்தமண்டபம், மற்றும் முகப்பு மண்டபம் நாயக்க மன்னர்கள் காலத்தில் திருப்பணி செய்யப்பட்டதாக இருக்கலாம்.
செதுக்கப்பட்ட கருங்கல் கொண்டு கருவறைகள் அமைக்கப்பட்டுள்ளன. இறைவன் விமானம் அழகிய மகர நாசிகளுடன் அழகாக உள்ளது, எட்டு திக்கையும் நோக்கி முனிவர்கள் தவமிருக்கும் சுதைகள் உள்ளன. தக்ஷணமூர்த்தி சிலை சோழர்கால காலத்தியதாகலாம். மேலே சுதைவடிவில் உள்ள தென்முகன் ஒரு காலை குத்துகாலிட்டு இருக்கும் கோலம் அழகாக உள்ளது. இறைவன்-சுந்தரேஸ்வரர், இறைவி- மீனாட்சி இறைவன் கிழக்கும் இறைவி தெற்கும் கொண்ட கருவறை கொண்டுள்ளனர். இறைவன் இறைவி இருவருக்கும் முன்னர் நந்தி பலி பீடங்கள் உள்ளன.
இறைவியின் முன்னர் உள்ள பலிபீடம் எட்டு பட்டை கொண்ட ஒரு தூணின் மேற்பகுதியாக இருக்கலாம்? கருவறை கோஷ்டங்களில் தென்முகன் தவிர வேறு தெய்வங்களில்லை. சிற்றாலயங்களாக விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகனும் உள்ளனர். வடகிழக்கில் தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதி பெரிதாக உள்ளது எனினும் நடராஜர் தான் இல்லை. அருகில் நவகிரகங்கள் மண்டபம் உள்ளது, சண்டேசர் தனி சன்னதி கொண்டுள்ளார் அருகில் சில நாகர்கள் உள்ளனர். உள்ளூர் மக்கள் மட்டுமே கொண்டாடும் கோயிலாக உள்ளது, 1985ல் குடமுழுக்கு நடைபெற்றதன் பின்னர், 37 ஆண்டுகள் கடந்து போயின. பெருமாள் புதிய கோயில் காணவேண்டும், சிவனார் கோயில் குடமுழுக்கு காண வேண்டும்.















காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பழமானேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி