நாகப்பட்டினம் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

முகவரி :
நாகப்பட்டினம் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்,
நாகப்பட்டினம் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611001.
இறைவன்:
அமிர்தகடேஸ்வரர்
இறைவி:
பிரம்மானந்தசுந்தரி
அறிமுகம்:
இக்கோயில் நீலாயதாட்சி அம்மன் கோயில் தெற்கு மாடவீதிக்கு அடுத்தாற்போல் உள்ள மலைஈஸ்வரன் கோயிலின் பின்புறத்தில் கட்டியப்பர் கோயில் உள்ளது நாகை பன்னிரு கோயில்களில் மேற்கு நோக்கிய சிவாலயமாக அமைந்திருப்பது இக்கோயில். இறைவன் அமிர்தகடேஸ்வரர் இறைவி பிரம்மானந்தசுந்தரி
மேற்கு நோக்கிய கோயில் மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளது. அதில் பாற்கடலை தேவர்களும் அசுரர்களும் கடிவது போல் சுதை சிற்பம் அழகு செய்கிறது, வெளிப்புற தரைமட்டத்தில் இருந்து கோயில் சில படிகள் தாழ்வாக உள்ளது. அதனால் படியிறங்கி செல்லவேண்டும். காட்சி மண்டபம் புதுவைப் பிரெஞ்சு அரசில் டுப்ளே காலத்தில் மொழி பெயர்ப்பாளராகப் (துவிபாஷி) பணி யாற்றிய திரு ஆனந்தரங்கம் பிள்ளையவர்களால் (கி.பி. 1720 – 1755) கட்டப்பட்டது. இதன் அறிகுறியாக ஒரு தூணில் இவரது திருவுருவம் புடைப்புச் சிற்பமாக உள்ளது.
கருவறை அர்த்தமண்டபம் முகமண்டபம் என உள்ளது. கருவறை வாயிலில் கருங்கல்லால் ஆன இரு துவாரபாலகர்கள் உள்ளனர். கருவறை பிரஸ்தரம் வரை கருங்கல் கொண்டும் அதற்க்கு மேல் விமானம் செங்கல் கொண்டும் செய்யப்பட்டுள்ளது. கோட்டங்களில் துர்க்கை, லிங்கோத்பவர், தென்முகன் உள்ளனர். தென்முகன் சன்னதி சற்று முன்னிழுக்கப்பட்ட ஒரு அழகிய கருங்கல் மண்டபமாக அமைந்துள்ளது. தென்மேற்கில் சுந்தர விநாயகர் சன்னதி உள்ளது வாயிலில் ஏழு நாகர்கள் உள்ளனர். துர்க்கை அருகில் ஒரு பழமையான சண்டேசர் தனியாக வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலின் தீர்த்தம் தெற்கு மடவிளாக முக்தி மண்டபத்தின் அருகில் உள்ளது. குளம் தூர்ந்துபோய் கிடக்கிறது. பன்னிரு கோயில்களில் பத்து தீர்த்தங்கள் பாழ் பட்டே கிடக்கின்றன. தலம் தீர்த்தம் என்பதே நாகையின் சிறப்பு.
புராண முக்கியத்துவம் :
தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து அதில் வெளிப்பட்ட அமிர்தத்தை அசுரர்கள் கைப்பற்றா வண்ணம் அதனை கொண்டு சென்றனர். அப்போது வழியில் சிவபூஜை செய்ய நாகையில் தீர்த்தம் ஒன்றை அமைத்தனர். நீராடி திரும்பியபோது அமிர்த கலசம் லிங்க வடிவமாக மாறியிருந்தது கட்டியாக மாறியதால் கட்டியப்பர் ஆனார். இறைவன் அமிர்தகடேஸ்வரராக காட்சியளித்து அருள் செய்தார் என்பது வரலாறு.











காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி