Wednesday Jan 15, 2025

செருகுடி சூட்சுமபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு சூஷ்மபுரீஸ்வரர் திருக்கோயில், (திருச்சிறுகுடி), செருகுடி சரபோஜிராஜபுரம் அஞ்சல் – 609 503 (வழி) பூந்தோட்டம், குடவாசல் வட்டம். திருவாரூர் மாவட்டம். போன்: +91-4366-291 646

இறைவன்

இறைவன்: சூட்சுமபுரீஸ்வரர், மங்களநாதர் இறைவி: மங்களநாயகி

அறிமுகம்

செருகுடி சூட்சுமபுரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 60ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் குடவாசல் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் தேவி கைபிடியளவு மணலால் பிடித்து வைத்து மங்கள தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டார் என்பது தொன்நம்பிக்கை.சங்க இலக்கியங்களில் புறநானூற்று நூலி புகழ்ந்து கூறப்படும் பண்ணன் என்னும் கொடைவள்ளல் பிறந்த தலம் எனப்படுகிறது. இத்தல மூலவருக்கு அபிஷேகம் இல்லை. சாம்பிராணித் தைலம் மட்டுமே சாத்தப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

ஒருமுறை கயிலையில் சிவபெருமானும், அம்பாளும் சொக்கட்டான் (தாயம்) விளையாடினர். அம்மன் பக்கம் வெற்றி திரும்பியது. இந்நிலையில், திடீரென சிவபெருமான் அவ்விளையாட்டில் இருந்து காணாமல் போனார். பின்னர், ஈசனை தேடி அலைந்தாள் அம்பிகை. எங்கும் காணாததால், காவிரியின் தென்கரையில் வில்வ மரங்கள் அடர்ந்த, அமைதியான சூழல் உள்ள குளக்கரையில் மண்ணில் லிங்கம் பிடித்து வைத்து வழிபட்டாள். காணாமல் போன சிவபெருமான் அந்த இடத்தில் தோன்றினார். விளையாட்டில் தான் வேண்டுமென்றே தோற்க இருந்ததாகவும், மனைவியின் மனம் மகிழ்வதற்காகவும், குடும்பம் மங்களகரமாக இருப்பதற்காக, கணவனிடம் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை வேண்டுமென்றும் அருள்பாலித்தார். இதனால் அம்பிகை “மங்களாம்பிகை’ என்று பெயர் பெற்றாள். அவள் தவமிருந்த குளக்கரை “மங்கள தீர்த்தம்’ ஆயிற்று. சுவாமிக்கு மங்களநாதர் என்று பெயர் சூட்டப்பட்டது. மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரம் கிழக்கு நோக்கியது. உள்ளே சென்றால் விசாலமான இடம். பிராகாரத்தில் மங்கள விநாயகர், சுப்பிரமணியர் சன்னதிகள். முன்மண்டபத்தில் நவகிரக சன்னதி உள்ளது. சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள் ஆகியோர் வழிபட்ட தலம்.

நம்பிக்கைகள்

சிவன், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் குடும்பத்தில் மங்களம் என்றும் நிலைத்திருக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மணலால் ஆன லிங்கமாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 123 வது தேவாரத்தலம் ஆகும். பிரிந்த தம்பதிகள் மீண்டும் ஒன்று சேர்ந்ததால், சூஷ்மபுரீஸ்வரம் என்று இவ்விடம் கூறப்படுகிறது. திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயிலில் சூரியனும், சனீஸ்வரனும் அருகருகே இருப்பது சிறப்பாகும். மேலும் சூரியன், விசுவாமித்திரர், கந்தர்வர்கள் ஆகியோரால் பூஜிக்கப்பட்டதாகும். அங்காரகனுக்கு ஏற்பட்ட சாபம் நீங்கி பூஜித்து வரம் பெற்றமையால், இக்கோயிலில் உள்ள அங்காரகனை தரிசனம் செய்பவர்களுக்கு செவ்வாய் தோஷம், திருமணத் தடை, பலவித நோய்கள் தீரும். அங்காரகனை தரிசனம் செய்ய மாசி மாதம் செவ்வாய் கிழமைகள் ஏற்றது. இந்நாட்களில் இங்கு விசேஷ பூஜை நடக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றுசேர, இத்தலத்தில் பிரார்த்தனை செய்யலாம்.வில்வ இலை, மங்கள நீர் (குளத்து நீர்) ஆகியவை கொண்டு செவ்வாய் தோஷ பரிகாரம் செய்யப்படுகிறது. செவ்வாய்தோஷ ஜாதகதாரர்கள் இங்கு ஏராளமாக வருகின்றனர். நவக்கிரக மண்டப சிறப்பு: இந்தகோயிலின் நவக்கிரக மண்டபம் மிகவும் வித்தியாசமானது. நவக்கிரகங்களுடன் கோளறுபதிகத்தின் 11 பாடல்கள் பாடிய திருஞானசம்பந்தர் குழந்தை வடிவில் உள்ளார். மதுரையில் சமணர்களின் பிடியில் சிக்கித்தவித்த கூன் பாண்டியனை காப்பாற்ற சென்ற திருஞானசம்பந்தரை திருநாவுக்கரசர் “நாளும் கோளும் சரியில்லை, இப்போது சென்றால் சிறுவனான தங்களுக்கு ஆபத்து’ என சொல்லித் தடுத்தார். அப்போது, சம்பந்தர், சிவபக்தனை கிரகங்கள் ஏதும் செய்யாது எனக்கூறி பாடியதே கோளறுபதிகம். அன்றுமுதல் கிரகக்கோளாறு உள்ளவர்கள் கோளறுபதிகம் பாடி வருகின்றனர். இதைக் குறிக்கும் வகையில், இங்கே நவக்கிரகங்களின் நண்பராக சம்பந்தர் உள்ளார். இவரை தரிசித்தால், எப்படிப்பட்ட கிரக தோஷமும் விலகும் என்பது நம்பிக்கை. மேலும் விநாயகரும், பைரவரும் இதே மண்டபத்தில் இருப்பது இன்னுமொரு விசேஷம்.

திருவிழாக்கள்

நவராத்திரி, சிவராத்திரி, சித்திரை திருவிழா

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பேரளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top