Wednesday Jan 15, 2025

கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில் சிவன் கோயில் வீதி, கீழையூர் – 609 304. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 283 261, 283 360, 94427 79580.

இறைவன்

இறைவன்: கடைமுடிநாதர் இறைவி: அபிராமி

அறிமுகம்

கீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும். இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கு காவிரி ஆறு உத்தரவாகினியாக வடக்கு நோக்கிப் பின்னர் மேற்காகச் செல்வது முக்கியமான ஒன்று. செம்பொனார் கோயிலுக்கு வடகிழக்கே இரண்டு கி.மீ தொலைவிலுள்ளது.இத்தலம் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. பிரம்ம தேவர், கண்வ மகரிஷி ஆகியோர் வணங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை.

புராண முக்கியத்துவம்

ஆணவம் கொண்டதால் சிவனிடம் சாபம் பெற்ற பிரம்மா, பூலோகத்தில் பல இடங்களில் சிவபூஜை செய்து வழிபட்டார். அவர் இத்தலத்திலும் சிவனை மனதில் நினைத்து வழிபட்டார். சிவன், அவருக்கு ஒரு கிளுவை மரத்தின் அடியில் காட்சி தந்தார். பிரம்மா தனக்கு மன்னிப்பு கேட்டபோது, தகுந்த காலத்தில் விமோசனம் கிடைக்கப்பெறும் என்று ஆறுதல் கூறினார். பின் பிரம்மாவின் வேண்டுதல்படியே அவர் இத்தலத்தில் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார். பிற்காலத்தில் கண்ணுவ மகரிஷியும் இத்தலத்தில் சிவனை வழிபட்டு முக்தி பெற்றார். பிரகாரத்தில் உள்ள கிளுவை மரத்தின் கீழ், கிளுவைநாதர் இருக்கிறார். இவரே இக்கோயிலின் ஆதிமூர்த்தி ஆவார். இவருக்கு எதிரே நந்தியும் இருக்கிறது. சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் தனிச்சன்னதியில் இருக்கிறார். இத்தலவிநாயகர் கடைமுடிவிநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை உள்ளவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டுபவர்கள் இங்கு சிவனை வழிபட்டு மன அமைதி பெறலாம்.

சிறப்பு அம்சங்கள்

வளையம் அணிந்த தெட்சிணாமூர்த்தி : மேற்கு பார்த்து அமைந்த சிவதலம் இது. இத்தலத்தில் காவிரி நதி இத்தலத்தில் மேற்கு நோக்கி ஓடுவது விசேஷம். உலகம் அழியும் இறுதிக்காலத்திலும் காப்பாற்றுபவராக இங்கு சிவபெருமான் அருளுகிறாராம். எனவே இவருக்கு “கடைமுடிநாதர்’ என்று பெயர் வந்ததாக சொல்கின்றனர். இவர் பதினாறு பட்டைகளுடன் அமைந்து “சோடஷ லிங்க’ அமைப்பில் இருக்கிறார். இவரிடம் வேண்டிக்கொண்டால் பதினாறு பேறுகளையும் பெறலாம் என்பர். பிரகாரத்தில் உள்ள நவக்கிரகம் வலது புறம் திரும்பிய ஆவுடையார் மீது அமைந்திருக்கின்றன. எண்கோண வடிவில் உள்ள ஆவுடையாரில் கிரகங்கள் ஒவ்வொன்றும் நேர்வரிசையில் இல்லாமல், முன்னும் பின்னுமாகவும் அமைந்திருப்பது சிறப்பான அமைப்பு. இங்கு கோஷ்டத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி இடது காதில் வளையம் அணிந்தும், வலது காதில் வளையம் இல்லாமலும் காட்சி தருகிறார். இவரைப்போலவே பைரவரும் வலது காதில் வளையம் இல்லாமல் இருப்பது வித்தியாசமான அமைப்பாகும். இங்கு அம்பாள் வரப்பிரசாதியாக இருக்கிறாள். தெற்கு நோக்கியிருக்கும் இவளது சன்னதி எதிரேயும் ஒரு வாசல் இருக்கிறது. திருமணத்தடை உள்ளவர்கள் இவளுக்கு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். திருமணமாகாத பெண்கள் இவளுக்கு தாலி கட்டி வேண்டிக்கொள்கின்றனர். வரன் அமைந்த பிறகு மீண்டும் அம்பாள் கழுத்திலிருக்கும் தாலியை தங்களது கழுத்தில் கட்டி அம்பாளை வணங்கிவிட்டு, மீண்டும் அதனை அம்பாளுக்கே கட்டிவிடுகின்றனர். இவ்வாறு செய்வதால் பெண்கள் சுமங்கலிகளாக இருப்பர் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, ஐப்பசியில் அன்னாபிஷேகம்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கீழையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top