Wednesday Jan 15, 2025

கீழைதிருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் சிவன்கோயில்

முகவரி

கீழைதிருக்காட்டுப்பள்ளி சிவன்கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 114.

இறைவன்

இறைவன்: ஆரண்யேஸ்வரர் இறைவி:அகிலாண்டேஸ்வரி

அறிமுகம்

சீர்காழியில் இருந்து சுமார் 10 கி.மி. தொலைவிலும், திருவெண்காட்டில் இருந்து இலையமுதுகூடம் செல்லும் சாலையில் சுமார் 1 கி.மி. தொலைவிலும் இந்த கிராமம் அமைந்துள்ளது. இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மேஸ்வரர் , முனியீஸ்வரர் என்ற பெயரில் இரு சிவலிங்கங்கள் உள்ளன. அடுத்து, சுப்பிரமணியர், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. கருவறைச் சுவரில் வெளிப்புறத்தில் ஓரிடத்தில் மன்னன் ஒருவன் சிவலிங்கத்தை வழிபடுவது போன்ற சிற்பமுள்ளது. பிரகார வலம் முடித்து வாயில் நுழைந்தால் மண்டபத்தில் மேற்கு நோக்கிய சுவாமி சன்னதியும் இடதுபுறம் அம்பாள் சன்னதியும் ஒரு சேரத் தரிசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளன. இத்தலத்து இறைவன் ஆரண்யேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக சதுரபீட ஆவுடையாரில் அருள்பாலிக்கிறார் . பிரகாரத்தில் “தசலிங்கம்” சன்னதி இருக்கிறது. இந்த சன்னதியில் ஏழு லிங்கங்கள் இருக்கிறது. இதில் ஒரே லிங்கத்தில் இரண்டு பாணங்கள் இருப்பது வித்தியாசமான அமைப்பு. அம்பாள் அகிலாண்டேஸ்வரி அழகிய சிறிய திருமேனியுடன் தெற்கு நோக்கி தனிச்சன்னதியில் கொண்டுள்ளார். இத்தலத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை. ததீசி முனிவரின் முதுகுத் தண்டை ஆயுதமாகப் பெற்று இந்திரன் விருத்திராசுரன் என்ற அசுரனை அழித்தான். இந்தப் பழியும் பாவமும் நீங்க தேவேந்திரன் இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டதாகப் புராணம் சொல்கிறது. இந்தக் கோயிலில் உள்ள ஸ்ரீபிரம்மேஸ்வர லிங்கத்தை வழி படுவோர் 100 அஸ்வமேத யாகங்கள் செய்த பலனைப் பெறுவார்கள் என்பது ஐதீகம். சுவாமி கோஷ்டத்திலுள்ள தட்சிணாமூர்த்தி ஆறு சீடர்களுடன் வீற்றிருக்கிறார். பொதுவாக சனகர், சனாதனர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய நால்வருடன் மட்டும் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி, இத்தலத்தில் ஆறு பேருடன் காட்சி தருவது விசேஷம். பைரவர், சூரியன், சனீஸ்வரர் ஆகியோரும் பிரகாரத்தில் இருக்கின்றனர். இத்தலத்திலுள்ள விநாயகர் மிகவும் விசேஷமானவர். ஒரு சாபத்தால் நண்டு வடிவம் எடுத்த கந்தர்வன் இவரை வழிபட்டதால், இவர் நண்டு விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இந்த விநாயகரின் பீடத்தில் நண்டு இருப்பது வித்தியாசமான அமைப்பு.. ஆரண்ய முனிவர் வழிபட்ட தலம் இது. கோஷ்டத்தில் மகாகாளர் சிவ வழிபாட்டிற்காக சங்கு ஊதிக் கொண்டிருக்க, ஆரண்ய முனிவர் சிவனை பூஜை செய்யும் சிற்பம் இருக்கிறது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

1000 – 2000

நிர்வகிக்கப்படுகிறது

.

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவெண்காடு

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top