Thursday Jan 02, 2025

கீழப்பாவூர் லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி :

அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,

கீழப்பாவூர்,

திருநெல்வேலி மாவட்டம் – 627 806.

போன்: +91- 94423 30643

இறைவன்:

லட்சுமி நரசிம்மர்

இறைவி:

அலர்மேல்மங்கை

அறிமுகம்:

தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் கிராமத்தில் அமைந்துள்ள லட்சுமி நரசிம்மர் கோயில் விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் தீர்த்தம் நரசிம்ம தீர்த்தம். இந்த கோயில் தட்சிண அஹோபிலம் (தெற்கு அஹோபிலம்) என்றும் அழைக்கப்படுகிறது, இது 1200-1500 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. இக்கோயிலில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணியின் போது பாண்டிய, சோழ மன்னர்களின் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தென்காசி – திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில் பாவூர்சத்திரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில் கீழப்பாவூர் என்ற சிறிய கிராமம் உள்ளது. பாவூர்சத்திரம் தென்காசியிலிருந்து கிழக்கே 10 கிமீ தொலைவிலும், மதுரையிலிருந்து 200 கிமீ தொலைவிலும், திருவனந்தபுரத்திலிருந்து 118 கிமீ தொலைவிலும், திருநெல்வேலிக்கு மேற்கே 51 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. பாவூர்சத்திரம் ரயில் நிலையம் உள்ளது. அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம் தென்காசியில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் மதுரை மற்றும் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகிய நால்வரும் வைகுண்ட நாதனான பெருமாளிடம் பிரகலாதனுக்கு அருள்செய்த நரசிம்ம ரூபத்தில் தரிசிக்க வேண்டும் என்று தங்களுடைய விருப்பத்தை தெரிவித்தனர். பொதிகைமலையில் சித்ரா நதிக்கரையில், தவம் செய்துவரும்படியும், தக்க சமயத்தில் நரசிம்மராக காட்சி தந்து அருள்வதாகவும் அவர் கூறினார். நால்வரும் பெருமாளைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தனர். அந்த தவக்கனல் வைகுண்டத்தை எட்டியது. இதையடுத்து பிரதோஷ வேளையில் நரசிம்மர், இரண்ய சம்ஹார கோலத்தில் அவர்களுக்கு காட்சியளித்தார். கர்ஜனை செய்த பெருமாளைக் கண்ட நால்வரும் மெய்மறந்து தரிசித்தனர். பிற்காலத்தில் பெருமாள் தரிசனம் தந்த இடத்தில் மன்னர்களால் கோயில் கட்டப்பட்டது. கருவறையில் அமைக்கப்பட்ட மூர்த்தி மிகவும் உக்ரம் வாய்ந்தவராக இருந்ததால் ஊர் தீப்பற்றி எரிந்து விட்டது. இதனால், நரசிம்மரின் சீற்றத்தைத் தணிக்கும் வகையில் அவருடைய மார்பில் திருமகளைப் பிரதிஷ்டை செய்து சாந்தப்படுத்தினர்.

சப்த ரிஷிகளுள் ஒருவரான காசியப்பர், வருண பகவான் சுகோஷன் முனிவர் முதலானோர் நரசிம்மர் தரிசனம் வேண்டி மகாவிஷ்ணுவை நோக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் இருந்தனர். மகாவிஷ்ணுரிஷிகளிடம் அசரீரியாகப் பேசினார். இறவா வரம் பெற்ற ரிஷிகள், நீராடுவதற்காக பொதிகை மலையில் தாமிரபரணி நதியில் அகத்தியர் 32 தீர்த்தங்களை ஏற்படுத்தியுள்ளார் அதில் ஒன்றான மணிமுக்தா தீர்த்தத்தில் (தற்போது பாபநாசம் பாணதீர்த்தம்) நீராடி, அங்கிருந்து 40 கல் தொலைவில் வடக்கே உள்ள சித்ரா நதிக்கரையில் தவத்தை தொடருங்கள், நரசிம்மர் தரிசனம் கிட்டும் என்பதே அசரீரி வாக்கு.

அதன்படியே மணிமுக்தா தீர்த்தத்தில் புனித நீராடினர் ரிஷிகள். பின்னர் பகவான் சுட்டிக்காட்டிய இடத்தில் மீண்டும் தவம் இருந்தனர். அவர்களின் கடுந்தவம் மாலவனின் மனதைத் தொட்டது. உடனே ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் 16 திருக்கர நரசிம்மராக ரிஷிகளுக்கு காட்சி கொடுத்தார். மகா உக்ரமூர்த்தியைக் கண்ட ரிஷிகள், கிருதாயுகத்தில் கிட்டாத மஹாபாக்யம் இப்போது கிடைத்ததை எண்ணி ஆனந்தம் அடைந்தனர். காட்சி கொடுத்தபடியே அதே இடத்தில் நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்டார். அந்தப்புனிதத்தலமே தற்போதைய கீழப்பாவூர் ஆகும்.

நம்பிக்கைகள்:

கடன்களிலிருந்து நிவாரணம் பெறவும், தடைபட்ட திருமணம் விரைவில் நடைபெறவும் இங்குள்ள நரசிம்மரை வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

பதினாறுகை நரசிம்மர்: மூலவர் நரசிம்மர் 16 திருக்கரங்களுடன் உக்ரவடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில் காட்சி தருகிறார். இடது மடியில் இரணியனைக் கிடத்திக் கொண்டு தாங்கிப்பிடிக்கிறார். நான்கு கரங்கள் அவனுடைய வயிற்றைக் கிழித்தபடியும், இரண்டு கரங்கள் குடலை உருவிக் கொண்டும், மற்ற எட்டுக்கரங்களில் சங்கு, சக்கரம் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்தியும் உள்ளன. நாரதர், காஷ்யபர், வருணன், சுகோஷன் ஆகியோர் லட்சுமி நரசிம்மரை வணங்கியபடி நிற்கின்றனர். நரசிம்மரின் தலைக்குமேலே தர்மத்தை நிலைநாட்டும் வெண்கொற்றக்குடையும், இருபுறமும் வெண்சாமரமும் உள்ளன.

நவக்கிரகங்கள், பஞ்ச பூதங்களால் ஏற்படும் தோஷங்களைப் போக்கி, கேட்பதைத் தரும் கற்பக தருவாய் அருள்பாலிக்கிறார், கீழப்பாவூர் நரசிம்மர், ரிஷிகளுக்கு காட்சி கொடுத்து, நரசிம்மர் நிரந்தரமாகக் குடிகொண்டுவிட்ட புராண சிறப்புமிக்க தலம் இது. மூர்த்தி, ஸ்தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புக்களை உடையது இவ்வாலயம்.

வடிவச் சிறப்பு: இராஜஸ்தான் மாநிலம், பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி ஆகிய தலங்களுக்கு அடுத்தபடியாக கீழப்பாவூரில் 16 திருக்கரங்களுடன் நரசிம்மர் தரிசனம் தருகிறார். தலையில் கிரீடத்துடனும், வெண்கொற்றக்குடையுடனும் கம்பீரபீ மாக காட்சி தரும் நரசிம்மரை சூரியனும் , சந்திரனும் வெண்சாமரங்கள் வீசி வீ வணங்கிக் கொண்டிருக்கின்றனர். இரண்யனின் தந்தையும், பிரகலாதனின் தாத்தாவுமான காசியப்பர், பிரகலாதன், அவனுடைய தாய் ஆகியோர் நரசிம்மரை துதித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனைய திருக்கரங்களில் ஆயுதங்களுடன் வீற்வீ றிருக்கும் நரசிம்மர்,இரண்டு கரங்களால் சக்கரம், சங்கு தரிசனம் தந்து, வலது கரம் ஒன்றால் நாரதரின் தலையில் கைவைத்து ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார். இத்தகைய அபூர்வ வடிவ சிறப்புடன் அருள்புரிந்து வரும் நரசிம்மரை மிக அருகில் நின்று வழிபடலாம்.

சிங்க கர்ஜனை: இவ்வாலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை சாயராட்சை வேளையில் சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்டதாக இப்பகுதி மக்களிடம் செவி வழிச் செய்தி உலாவுகிறது. நரசிம்மரின் உக்ரம் காரணமாக கர்ஜனை சத்தம் கேட்டதாகவும். பால் , இளநீர் அபிஷேகம் செய்து வழிபடத்தொடங்கிய பிறகே சிங்க கர்ஜனை சத்தம் நின்றதாக கூறப்படுகிறது. இவருடைய சன்னிதி முன்பாகவே மாபெரும் தெப்பக்குளம் ஏற்படுத்தப்பட்டு உக்ரத்தை தணித்துள்ளனர். இப்போது சாந்த சொரூபியாகிவிட்ட நரசிம்மர், கண்களை மூடி தியானித்தபடியே காட்சி தருகிறார

நரசிம்மர் தீர்தீத்தம்: ஒவ்வொரு ஆலயத்திற்கும் ஈசான்ய திக்கில் தான் தீர்த்தம் அமைந்திருக்கும், ஆனால், நரசிம்மர் சன்னிதி முன்பாகவே தீர்த்தம் அமைந்திருப்பது வேறெங்கும் காணமுடியாத சிறப்பு. ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்திரப்படி இந்த தீர்த்தம் நர்மதை ஆகவும் தேவப்ராசிபடி கங்கை ஆக விளங்குவதும் இந்த நரசிம்மர் தீர்த்தத்தின் சிறப்பு ஆகும். ஒவ்வொரு மாதமும் சுவாதி, திருவோணம், வளர்பிறை சதுர்தசி நாள்களில் ஆலயத்தோடு சேர்த்து தீர்த்தம் வலம் வருதல் உற்சவமும் இங்கே நடக்கிறது.

சுவாதி பூஜை: ஒவ்வொரு மாதமும் நரசிம்மருடைய சுவாதி நட்சத்திரத்தன்று மாலை வேளையில் பால், இளநீர் மற்றும் திரவியப் பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. சுவாதி நட்சத்திரந்தோறும் தொடர்ந்து நரசிம்மரை வழிபட்டு வந்தால் ருண விமோசனம் எனப்படும் கடன் தொல்லை நீங்கி, செல்வம் பெருகும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். மேலும் ஜாதகத்தில் ராகுவினால் உண்டாகும் பில்லி, சூனியம், ஏவல், எதிரிகள் தொல்லையிருந்தும் விடுபடலாம்.

பரிகாரத்தலம்: கல்யாணத்தடை, கோர்ட் வழக்கு, கடுமையான நோய் ஆகியவற்றுக்கு இங்கு பரிகாரம் செய்து பலன் பெறலாம். சுவாதிநட்சத்திரக்காரர்களுக்கான தலம் இது.

நீராஞ்சனம்: ஆலயத்தின் நீராஞ்சனம் என்னும் நெய்தீபம் ஏற்றி, 16 சுற்றுக்கள் பிரதட்சிணமாக வலம் வந்து நரசிம்மரை வழிபடுவர்களுக்கு, வேண்டுதல்கள் விரைந்து நிறைவேறுகிறது. நரசிம்மருக்கு மிகவும் விருப்பமான வெல்லத்தினால் ஆன பானகம் அமுது செய்வித்தும் வழிபடலாம்.

வழிபட உகந்த நாட்கள்: நரசிம்மரை வழிபடுவதற்கு, செவ்வாய் ,புதன், சனி, ஆகிய நாட்களும் மாலை வேளையும் உகந்ததாகும். சுவாதி, திருவோணம், பிரதோஷம், வளர்பிறை சதுர்தசி, கார்த்திகை மாதபிறப்பு, புரட்டாசி சனி, முன்பத்து, பின்பத்து , வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி ஆகிய நாள்களில் இங்கே விசேஷ பூஜை நடக்கிறது. ஞான சக்தி வடிவமாக விளங்கும் கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அகோபிலத்தில் உள்ள நவ நரசிம்மரையும் வழிபட்ட பலன் கிட்டும், நவக்கிரகங்கள் , பஞ்ச பூதங்களால் ஏற்படும் தோஷங்களும் நீங்கி, நன்மை உண்டாகும்.

திருவிழாக்கள்:

வைகுண்ட ஏகாதசி, நரசிம்மர் ஜெயந்தி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சுவாதி நட்சத்திர நாளிலும், பிரதோஷத்திலும் சிறப்பு பூஜை

காலம்

2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கீழப்பாவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பாவூர்சத்திரம், தென்காசி

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை மற்றும் திருவனந்தபுரம்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top