Sunday Dec 29, 2024

அவளூர் சிவன் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அவளூர் சிவன் கோயில், அவளூர், காஞ்சிபுரம் மாவட்டம் – 632531

இறைவன்

இறைவன்: ஏகாம்பரர், சுந்தரேஸ்வரர் இறைவி: மீனாட்சியம்மை

அறிமுகம்

தெய்வப்பெண்கள் போற்றி வணங்கிய அற்புதத் தலம் அவளூர். ஆகவே பெண்களுக்கான சிறப்புப் பிரார்த்தனைத் தலமாகத் திகழ்கிறது. காஞ்சிபுரத்துக்கு மேற்கே 20 கி.மீ தொலைவில், சென்னை – பெங்களூரு சாலையில் தாமல் தாண்டியதும் அவளூர் உள்ளது. காஞ்சிபுரத்தை அடுத்த ஓச்சேரி நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம். இவ்வூரின் தலபுராணம் அற்புதமானது. சுமார் ஐந்நூறு ஆண்டு களுக்கு முன்னர் ஆலயம் முற்றிலும் சிதிலமாகிவிட, இந்த ஆலயம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயமாக விஜயநகர காலத்தில் கட்டப் பட்டுள்ளது. அதுவும் தற்போது சிதிலமடைந்த நிலையில், களையிழந்த ஓவியமாகக் காட்சியளிக் கிறது. பழைய ஆலயத்தைத் தோண்டி சிற்பத் திருமேனிகளை அடியார்கள் தேடி எடுத்த வேளையில், மிகமிகப் பழைமையான ஏகாம்பரர் திருமேனியும், சுந்தரேஸ்வரர் திருமேனியும் கிடைத்துள்ளன. மீனாட்சியம்மை திருமேனியும் கிடைத்தது. ஆனால் ஆதி காமாட்சி ஏனோ இன்னும் வெளியாகவில்லை. அதுமட்டுமா? பல்லவர் காலத்து வலம்புரி விநாயகர், சண்டேஸ்வர மூர்த்தி, வள்ளியம்மை, தட்சிணாமூர்த்தி சிலைகளும் கிடைத்துள்ளன. இன்னும் பல்வேறு திருமேனிகள், சிதைந்திருக்கும் ஆலயத்தின் அடியே இருக்கலாம் என்கிறார்கள் ஊர் மக்கள். பழைய ஆலயத்தின் அருகேயே இந்தத் திருமேனிகள் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் வழிபாடு செய்யப்படுகின்றன. காலத்தின் கொடுமையோ, கல் மனத்தாரின் சூழ்ச்சியோ தெரியவில்லை… இந்த அருமையான ஆலயம் பாழ்ப்பட்டு பரிதாபமாக நிற்கிறது. யுகயுகமாகப் புராணச் சுவடுகளைத் தாங்கி நின்ற இந்தத் திருக் கோயில் இன்று… பல்லவர் மற்றும் சோழர் காலத்தைச் சேர்ந்த சில திருமேனிகள் மட்டுமே மிஞ்சியிருக்க, திருப்பணிக்காகக் காத்து நிற்கிறது.

புராண முக்கியத்துவம்

ஒருமுறை விளையாட்டாகக் கருதி ஈசனின் திருக் கண்களை மூடியதால் சக்திதேவி சபிக்கப்பட்டு மண்ணுலகம் வந்தாள். அன்னை காமாட்சியாய் தென்னகம் முழுக்க பல தலங்களுக்குச் சென்று ஈசனை வழிபட்டு, சாபம் நீக்கி ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். எனினும் ஈசன் மனம் இரங்கவில்லை. அலகிலா விளையாட்டு பெருமானான ஈசன், சக்தியைக் கோபித்துக் கொண்டார் என்றா நினைக்கிறீர்கள். இல்லவே இல்லை! அன்னை சக்தியின் தவம் தென்னகம் எங்கும் நடைபெற வேண்டும், அதன் விளைவாகப் பெண்கள் எல்லோரும் அருள் பெறவேண்டும் என்று விரும்பியதன் வெளிப்பாடே சிவசக்தியின் பிரிவு. அன்னை காமாட்சி காஞ்சிக்குச் செல்லும் வழியில் பூரண காஞ்சி என்ற தற்போதைய அவளூருக்கு வந்தாள். அங்கு லிங்கத்திருமேனியைப் பிரதிஷ்டை செய்து ஈசனை மனமுருகி வேண்டினாள். பலகாலம் தொழுதும் ஈசனிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அன்னை மனம் குழம்பினாள். அன்றைய தினம் ஏனோ தாளமுடியாத துக்கத்தால் கோபமுற்றாள். `மகேசனின் மனையாளாக இருந்தாலும் இந்த மண்ணுலகம் வந்து பாடுபட வேண்டியுள்ளதே? பெண்களின் நிலைமையே இப்படித்தானா? ஆண்களின் மனம் கல்மனமா என்று நொந்து கொண்டாள். கண நேரம்தான் இப்படி நினைத்தாள். அதற்குள் மனம் மாறி, `ஐயோ அறிவிழந்து, அன்பே வடிவான ஈசனை நொந்து கொண் டோமே’ என்று வருந்தி கண்ணீர் சிந்தினாள். அக்கணமே ஈசன் தோன்றினார். தேவி சக்தியை ஆட்கொண்டு, காஞ்சிபுரம் சென்று அறங்கள் செய்து தம்மை அடையுமாறு அருள்பாலித்தார். தேவியும் பூரண காமாட்சியாகப் புறப்பட்டு காஞ்சிக்குச் சென்றாளாம். இங்ஙனம் அவளூர் சிவாலயத்தின் தல புராணம் சொல்லும் திருக்கதையை விவரிக்கிறார்கள் உள்ளூர் மக்கள். தேவி தங்கியிருந்து வேண்டிக்கொண்ட கோயில் என்பதால் இது `அவள் ஊர்’ என்றானது. கணவனைப் பிரிந்த அன்னை காமாட்சி வடிவம் சக்தி வடிவங்களுள் அற்புதமானது. மிக மிகச் சூட்சுமமானது. குடும்ப உறவுகள் மேன்மை பெற காமாட்சியின் திருவடிக் கழல்களைச் சரணடைவது அவசியமானது. ராமாயணக் காலத்தில் வாலியின் மனைவியான மகா பதிவிரதை தாராதேவி அவளூருக்கு வந்து வழிபட்டாள் எனச் சொல்கிறார்கள். அது போலவே பாண்டவர்களின் பத்தினியான திரௌபதியும் இங்கு வந்து பாண்டவர்களின் வெற்றிக் காக வேண்டினாளாம். இன்றும் அவளூர் ஆலயத்துக்கு அருகே திரௌபதி, அவளுக்குத் துணையாக வந்த கிருஷ்ண பரமாத்மா ஆகியோரின் ஆலயங்கள் அமைந்துள்ளன. தாரா வந்து வணங்கியதால் இந்த ஊர் தாரா வனம் என்றும், பாண்டவர்கள் வந்து வணங்கியதால் பாண்டவபுரம் என்றும் போற்றப்பட்டதாம்.

நம்பிக்கைகள்

`கணவன் நலமே தன்னலம்’ என்று கருதிய தெய்வப்பெண்கள் வணங்கிய தலமிது என்பதால், இது பெண்களுக்கான சிறப்புப் பிரார்த்தனைத் தலமாக உள்ளது. விதிவசத்தால் கெட்டப் பழக்கங்கள், தீய சகவாசம் கொண்ட ஆண்கள் மனம் திருந்தி நல்வாழ்க்கை மேற்கொள்ள இந்த ஆலயம் ஒரு புகலிடமாக விளங்கி வருகிறது. குறிப்பாக மதுப் பழக்கத்தால் சீர்கெட்டுப் போன ஆண்கள் திருந்தவேண்டும் எனும் பிரார்த்தனையுடன் பெண்கள் இங்கு வந்து வழிபாடு செய்கிறார்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் இங்கு வந்து அம்மனுக்குப் புடவை சாத்தி, மஞ்சள் கோத்த ரட்சையை வலது கையில் கட்டிக்கொண்டு ஆலயத்தை வலம் வருகிறார்கள். இங்கு அளிக்கப்படும் பிரசாதம் ஆண்களின் உடல் நலத்தை மேம்படுத்துவதாகவும், மன நலத் தைச் சீராக்கி தீய பழக்க வழக்கத்தில் இருந்து மீட்பதாகவும் பக்தைகள் கண்ணீர் மல்கச் சொல்கிறார்கள்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

அவளூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top